Sunday, December 29, 2013

என்றாள் இனியா - Pizza

நான் காஸ்ட்கோ போயிட்டு வரேன், உன் பொண்ணு எழுந்தவுடனே அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடு, சின்ன குக்கர்ல அவளோட சாப்பாடு இருக்கு, விசிலை பொறுமையா எடு, பீன்ஸ் பொரியல் இருக்கு, ரசம் அடுப்புல இருக்கு,  நெய் போட்டு அவளுக்கு நொறுக்கப் பிசைந்து ஊட்டு. அப்புறம், அவளுக்கு "curious george" ஒரு எபிசோடு முடியறதுக்குள்ள ஊட்டி விட்டுடு, இல்லைனா இரண்டு மணி நேரம் உன்னை உக்கார வட்சுருவா.
தலை ஆட்டினேன்.
மகள் எழுந்தவுடன் கொஞ்ச நேரம் விளையாடினாள், குட்டிப் பொண்ணு, மம்மம் சாப்புடலாமா என்றேன். சரி என்றவள், ஓடிச்சென்று தொலைபேசி எடுத்து வந்து என் கையில் குடுத்து, "அப்பா Pizza" என்றாள்.

Wednesday, December 25, 2013

2013


கடந்த பல வருடங்களைப் போலவே இந்த வருடமும், சில வெற்றிகள் தந்த சந்தோஷத்தாலும், சில தோல்விகள் தந்த சோகத்தாலும், பல தட்டையான தருணங்களாலும் நிறைந்திருந்தது.

நிறைய சந்தோஷமான தருணங்கள் மகளால் வாய்த்தது. அவள், “அப்பா டேய்” என்று அழைத்து எதாவது செய்தி சொல்லும்போதெல்லாம் மனது சந்தோஷத்தால் நிரம்பியது. நான் எது சொன்னாலும், வாயில் விரல் வைத்து உஷ்ஷ்ஷ் என்கிறாள். அம்மாவிடம் நிறங்களை எல்லாம் சரியாக சொல்லிவிட்டு, என்னிடம் பச்சை பந்தை காட்டி, அப்பா ப்ளூ என்று கூறி சிரிக்கிறாள். வாரத்தில் இரண்டு நாட்கள் டே ஸ்கூல்க்கு அனுப்பினோம், அப்பாவைப் போலவே பள்ளிக்கு செல்வதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது அவளுக்கு. என்னுடைய குழந்தைப் பருவத்தை நிறைய நினைவுப் படுத்துகிறாள். 

நான்கு மாதங்கள் மனைவியும் மகளும் இந்தியா சென்றனர், சரியாக அதே சமயம் sequestration-னால், உத்தியோகத்திற்கு பங்கம் வந்தது. இன்னும் மூன்று வாரங்களுக்குள் கம்பெனிக்குள் வேறு வேலை தேடிக்கொள், அதற்க்கு மேல் நீ வெளியில் தான் வேலைத் தேட வேண்டி வரும் என்று நாகரிகமாக கூறினர். அதை குடும்பத்தினருக்கு நான் சொல்லவில்லை. அம்மாவாக என்னிடம், தம்பி ராணி புஸ்தகத்தில், உன்னுடைய ராசிப்பலனில், “தற்போது உத்தியோகத்தில் தடுமாற்றம், மூன்று மாதம் கழித்து நிறைய வெற்றிகள் வரும்னு” போட்டு இருக்கான்னு சொல்லப்போக, எனக்கு வந்த கடுமையான கோபத்தில், இதெல்லாம் ஏன் என்கிட்டே சொல்றே என்று என்னால் கடுப்படிக்க முடிந்த ஒரே ஜீவனிடம் எரிந்து விழுந்தேன் (இந்த இடத்தில் மனைவியிடம் பயப்படும் நகைச்சுவையை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்).  நண்பர்கள் பேஸ்புக்கில் sequestration பற்றிப் பகிர்ந்த பகடியான நிலைத்தகவல்கள் எல்லாம், அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டதால் என் மனஉளைச்சலை அதிகப்படுத்தின. வீட்டுக்கடன் மற்றும் இதர செலவுகளை நினைத்து அதீத பதற்றத்தில் இரு வாரங்கள் கழிந்தது. வேறொரு ப்ராஜெக்டில் இருந்து ஒரு டைரக்டர் என்னை அழைத்துப் பேசியப் பிறகு, நீ இந்த டீமை நல்ல முறையில் வழி நடத்துவாய் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் உன்னுடைய பில்லிங் ரேட் அதிகமாக உள்ளதால், என்னால் உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றுக் கூறி விட்டாள். வெளியில் வேறு வேலைக்கு விண்ணப்பிக்க தயாரானேன், இரண்டு நாட்கள் தாண்டி இருக்கும், “I need him, please transfer him to my project” என்று என் டைரக்டர்க்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்பிவிட்டு பிரசவ விடுமுறையில் சென்று விட்டாள். புதிய வேலை, ஒரு நாளில் 15-16 மணி நேர வேலை, மனைவி மகளை இந்தக் களேபரத்தில் மறந்தே போனேன். அந்த நேரத்தில் அவர்கள் இந்தியாவில் இருந்ததே நல்லதாய்ப் போனது.

ஊரில் இருந்து வந்தப் பிறகு, என் மகள் என்னிடம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள், மறந்து விட்டாள் என்கிற எண்ணம், கவலை கொள்ள செய்தது. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒட்டிக்கொண்டாள். டே ஸ்கூல் போய் வர ஆரம்பித்தப் பிறகு, அங்கே நிறைய குழந்தைகள் இருப்பதால் அடிக்கடி அவளுக்கு சளியும் இருமலும் வரத் தொடங்கியது. நான் வேலைக்கு சென்று விட்டு வந்தப் பிறகு, அவளைத் தூக்கி வைத்து “இட் இஸ் ஓகே டா செல்லம்”, என்று நெஞ்சை வருடிவிடுவேன், பிறகு எதாவது கதைப் புத்தகம் அவளுக்குப் படிக்க, உறங்கச் செல்வாள்.

இந்த ஆண்டு சில நண்பர்களின் சந்தோஷங்கள் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தின. இவர்களைப்பற்றி ஒவ்வொரு நண்பர்கள் தினத்தன்றும் எழுத வேண்டும் என்று நினைப்பேன், ஏதோ காரனத்தால் முடியாமல் போனது. எப்பொழுதெல்லாம் எனக்கு ஆறுதல் தேவையோ அப்பொழுதெல்லாம் இவர்களிடம் சில நிமிடங்கள் பேசினால் போதும், மீண்டும் புத்துணர்ச்சி அடைவேன், ஒருவன் சியாட்டலில் வசிக்கும் எ.உ.தோ, பாலா. இந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தகப்பனானான். மகிழ்ச்சியான தருணமது. அடுத்து பெருசு என்று எல்லோராலும் அழைக்கப்படும் என் உ.பி.ச செந்தில். இவர் இந்த ஆண்டு வெற்றிகரமாக ஓடிய நீண்ட தூர ஓட்டம், என்னுடைய வெற்றியைப் போலவே மகிழ்ச்சி அளித்தது. மேலும் இந்த ஆண்டு வேறு பல சந்தோஷமான நிகழ்வுகளும் இருந்தன, புதிய வேலையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பரிசுகள் குடுத்தனர். திடீரென்று ராணி புஸ்தகத்தின் ராசிப் பலனின் மீது நம்பிக்கை வந்தது. தோல்விகள் மட்டுமல்ல வெற்றிகள் கூட நமக்கு நிலையாமையை உணர்த்தவே செய்கின்றன.

IPAD புண்ணியத்தில், தினம் ஒரு மின்னஞ்சல்(தமிழ் தட்டெழுத்தில்), அம்மாவிடமிருந்து வந்துவிடும், நிறைய சமையல் குறிப்புகளும் அதில் அடங்கும். ஓரளவு ஒப்பேற்றும் அளவிற்கு சமைக்கக் கற்றுக்கொண்டேன். மீண்டும் ராக்கெட் பால் விளையாட்டில் மும்முரமாக ஈடுபாடு கொண்டு விளையாட ஆரம்பித்தேன், அடுத்த ஆண்டு மாநில அளவு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட ஆரம்பிக்க வேண்டும். ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சிக்கி சில வாரங்கள் அந்தக் கவலையில் கழிந்தன. பிறகு அந்தப் பிரச்சனை ஒன்றுமில்லமால் புஸ்வானமாக, மனம் அமைதியானது. நிலையாமை.

இந்த ஆண்டு சீதோஷன நிலையில் நிறைய மாற்றங்கள், ஒரு நாள் நன்றாக வெயில் இருக்கும் அடுத்த நாள் பனி பெய்யும், அது என்னுடைய உடல் நலத்தை பாதித்தது, சோர்வும் லேசான இருமலும் ஒட்டிக்கொண்டது. ஒரு நாள் வேலையில் இருந்து வந்தவுடன், என் மகளை தூக்கி வைத்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன், முகத்தை எதிர்ப்புறம் திருப்பி இருமினேன், மகள் என் நெஞ்சை வருடிவிட்டு “இட் இஸ் ஓகே அப்பா” என்றாள். 2013-ன் ஆகச் சிறந்த தருணம், அதுவே.


Friday, October 25, 2013

ஒரு கவிதை அல்லது கவிதை போல ஒன்று.

உனக்கு உன் குஞ்சு பொன் குஞ்சா
என்று காகத்திடம் கேட்டேன்.
தெரியவில்லை - ஆனால்
அவர்களுக்காக இரைத் தேடப் போகிறேன்,
பழமொழி பேசும் ஆடம்பரமெல்லாம்
மனிதர்களுக்கு வாய்த்தது - எனக்கூறிப் பறந்தது.

Monday, September 9, 2013

தஞ்சை பிரகாஷ்

பயணக்களைப்பாலும், நேரமாற்ற அயர்வினாலும் (jet lag) மனைவியும், மகளும் பகலில் உறங்கியும், இரவில் முழித்தும் பொழுதை கழிக்கிறார்கள்.
நான் வாங்கி வரச் சொன்ன புத்தகங்கள் ஒரு சிலவற்றை வாங்கி வந்துள்ளாள். தஞ்சை பிரகாஷின் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். தஞ்சை பிரகாஷின் எழுத்து கூதுகலமான எழுத்துத்தான், ஆனாலும் தஞ்சையைப் பற்றி படிக்கும் போது, எந்தளவு ஊரை விட்டு விலகிவிட்டோம் என்கிற நெஞ்சழுத்தம் எழாமல் இல்லை. அதில், தெற்கு வீதியில் உள்ள கிந்தனார் ஸ்டுடியோ பற்றிய ஒரு குறிப்பு உள்ளது, அதைப் படித்தவுடன் என் பால்ய கால நினைவுகள் என்னை ஆக்கிரமித்து கொண்டன. நான், கிந்தனார் ஸ்டுடியோ உரிமையாளர் அவர்களை தாத்தா என்று உரிமையோடு அழைத்ததும், அந்த குறிகிய மாடிப்படிகளில் ஏறி அவர் வீட்டிற்கு சென்றதும், என் சிறு வயது புகைப்படங்களை அவர் எடுத்ததும், அவர் வீட்டில் விளையாடியதும் இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. நம் விருப்பம் இல்லாமலே கால ஓட்டம் ஒரு சிலரை அந்நியப்படுத்துகிறது, புது உறவுகளை அறிமுகப்படுத்துகிறது.

ரயிலடி ஆஞ்சேநேயர் கோயில், அதன் அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வரும் ரோஜா மணமும், கதம்பம் மணமும் தஞ்சாவூருக்கே உரித்தானது. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மேலவீதி, விடிகாலையில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும் ரயிலடி, இருசக்கர வாகனத்தில் ஞாயிறு காலை புன்னை நல்லூர் மாரியம்மனை தரிசிக்க செல்வது, இனி நான் அதில் ஒரு பகுதியாய் இல்லாமல் போனதை ஜீரணிப்பது கடினமாய் உள்ளது. தஞ்சாவூரை விட்டு அமெரிக்கா வந்து பதினாறு ஆண்டுகள் முடியப்போகிறது, இதில் மொத்தமாக இரண்டு மாதங்கள் தஞ்சையில் கழித்திருந்தால் பெரிது. திட்டப்படி போன மாதம் நானும் விடுமுறையில் ஊருக்கு போக வேண்டியது, sequestration-னால் பார்த்துக் கொண்டிருந்த உத்தியோகம் முடிவு பெறவும், வேறு உத்தியோகத்தில் சேரவும், புதிய வேலை, learning curve, vacation days, airfare, mortgage இத்யாதி லௌகீக காரணங்களால் சொந்த ஊர் அந்நியமாகி போனது. ஒன்றை இழந்து தான் மற்றொன்றை பெற முடியும் என்பது எவ்வளவு உண்மை.



-- புத்தகங்கள் வாங்கி குடுத்த ரேவதிக்கும், பிரசன்னாவிற்கும் அதை சுமந்து வந்த என் மனைவிக்கும் நன்றி.
-- jetlag-ற்க்கு தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தை வழங்கிய ராஜேஷ்க்கும், தன் புகைப்படத்தை உபயோகிக்க அனுமதி வழங்கிய கீதாவிற்கும் நன்றி.




Wednesday, March 27, 2013

அவளிடம் என்ன சொல்லுவது (3) – கிறிஸ்துமஸ் பார்ட்டி

டிசம்பர் மாதத்தில் கம்பனிகள் தங்கள் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பார்ட்டி குடுப்பது வழக்கம். கம்பனியின் அளவைப் பொருத்தும், அந்த ஆண்டின் நிதி நிலைமையைப் பொருத்தும், பார்ட்டியின் ஆடம்பரம் வரையறுக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் பெரும்பாலான ஆண்கள் டக்ஸ்சிடோ அணிந்தும், சிலர் சூட்டும் அணிந்து வருவர். பெண்கள் அழகான கவுன் அணிந்து வருவார்கள். இந்தப் பார்ட்டியில் மதுபானங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. நானும் என் மனைவியும் எல்லா வருடமும் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு போவது வழக்கம். கன்சல்டிங் கம்பெனியல் வேலை செய்வதால், நிறைய நண்பர்களை அன்று தான் சந்திக்க முடியும்.
இந்த வருடம் கிறிஸ்துமஸ் பார்ட்டி பெல் ஹவென் கன்ட்ரி கிளப் என்னும் இடத்தில நடந்தது. இது நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோல்ப் கிளப். எல்லா வகையான மது பானங்களும், இத்தாலியன் உணவு, சுஷி, சலாட் பார், அமெரிக்கன் உணவு  என்று வகை வகையான உணவு ஒவ்வொரு அறையிலும் நிரம்பி வழிந்தது. ஒரு பெண் ஹார்ப் வாசித்து கொண்டிருந்தாள். சில நண்பர்கள் அமர்ந்திருந்த பெரிய வட்ட மேஜையில் எல்லோருக்கும் ஹலோ சொல்லிவிட்டு நாங்களும் அமர்ந்தோம். இதற்க்கு முன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உள்ளதால், அலுவலக நண்பர்களின் குடும்ப உறுப்பினர்களையும் எங்களுக்கு தெரிந்திருந்தது. பொதுவான அரட்டை ஆரம்பமானது. அருகில் இருந்த பாருக்கு சென்று அனைவருக்கும் பினயொட் நோயர் வைன் வாங்கி வந்தேன். போன வருடம் பார்ட்டியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும், ஒரு நண்பர் பாட்டுப் பாடியதை கிண்டல் செய்தும் பேசிக்கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து அவள் வந்தாள், பேரழகி. அழகான கருப்பு நிற கவுன் அணிந்து, கைகளில் நீண்ட கருப்பு நிற மெல்லிய கையுறை அணிந்து ... அப்பொழுது தான் கவனித்தேன், அவள் கைகளை கோர்த்தபடி என் நண்பன் வந்து கொண்டிருந்தான். எங்கள் மேஜைக்கு வந்து எல்லோருக்கும் ஹலோ சொன்னார்கள், என் மனைவியிடம் இருவரும் பேசினார்கள், என்னிடம் எப்பொழுதும் போல ‘Wassup Desi’ என்றான். மத்தியமாய் புன்னகைத்தேன்.

பார்ட்டி கலை கட்ட துவங்கியது, ஹார்ப் வாசித்த பெண் இப்போது ஒரு சிறிய இசைக்குழுவுடன் சேர்ந்து பாடல்கள் பாடிக் கொண்டிருந்தாள். எங்கள் மேஜையில் இருந்து ஒவ்வொரு ஜோடியும் நடனம் ஆட எழுந்து சென்றனர். எங்களையும் வருமாறு அழைத்தனர். இந்த மாதிரி தருணங்களுக்காகவே, வால்ட்ஸ் மற்றும் பாக்ஸ்ட்ராட் நடனங்களை நாங்கள் கற்று வைத்து இருந்தோம். பால்ரூம் நடனத்தில் இவை இரண்டும் கொஞ்சம் சுலபம். நாங்களும் கொஞ்ச நேரம் நடனம் ஆடிவிட்டு வந்து அமர்ந்தோம். ஏன் திடீர்ன்னு ஒரு மாதிரி மூட் அவுட் ஆன மாதிரி இருக்கே, என்றாள் மனைவி. லேசாக தலை வலிக்குது என்றேன். நண்பனும் பேரழகியும் இன்னமும் ஆடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் வேகமான பாடல்கள் பாட ஆரம்பித்தனர், அவர்கள் இருவரும் டாங்கோ நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். எல்லோரும் அவர்களையே கவனித்தனர். பொருத்தமான ஜோடி தான், இல்லையா என்றாள் மனைவி. தலை ஆட்டினேன். ஏன் நீ உன் நண்பனுக்கு இப்போ கேர்ள் பிரண்ட் இருக்கான்னு என்கிட்டே சொல்லவே இல்லை? என்றாள் மனைவி. எனக்கே இன்னைக்கு தான் தெரியும் என்றேன். அவர்கள் ஆடிய டாங்கோ நடனத்தைப் பாராட்டி “பிராவோ” என்று எங்கள் அருகே அமர்ந்திருந்த மற்றொரு அலுவலக நண்பன் கத்தினான்.

சிறிது நேரத்தில், என் கம்பனியின் பார்ட்னர் எங்கள் மேஜைக்கு வந்து எல்லோருக்கும் ஹலோ சொல்லிவிட்டு, பொதுவாக உணவு எப்படி உள்ளது என்றெல்லாம் பேசிவிட்டு, “Let us light up a cigar” என்றார். ஒவ்வொரு வருடமும் விலையுயர்ந்த சுருட்டு வாங்கிவந்து எங்கள் டீமில் உள்ள ஆண்களுடன்  புகைப்பார்(பெண்களுக்கு இந்த வாசனை பிடிப்பதில்லை). சுருட்டைப் பற்றி நிறைய அனுபவித்து பேசுவார். எங்கள் மேஜையில் அமர்ந்து இருந்த ஆண்கள் எல்லோரும் அவருடன் புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த கசிபோவை நோக்கி சென்றோம். அடுத்த அரை மணி நேரத்திற்குப் பேச்சு சுருட்டைப் பற்றி இருக்கப்போவது உறுதி. சுருட்டைப் பற்றி நிறைய சுவையான தகவல்களை எங்களுக்குத் தருவார். சில தகவல்கள் முந்தைய வருடங்களில் அவர் ஏற்கனவே கூறியதாக இருக்கும், இருந்தாலும் சுவையாகவே இருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் பில் கிளிண்டன் மற்றும் சுருட்டு பற்றி ஒரு ஜோக் அதில் கலந்து இருக்கும்.
கையில் கோநியாக்குடன் கசிபோவை நோக்கி நடந்த போது, நண்பனிடம் கேட்டேன், எப்போதிலிருந்து பேரழகியுடன் அவனுக்கு நட்பு என்று. ஓ, நாமெல்லாம் ஹாப்பி ஹவர் போனோமில்லையா, அந்த வாரத்தில் அவள் என்னிடம், அவளுக்கும் நாய்கள் ரொம்பப் பிடிக்கும் என்றாள், நான் வாங்கி இருந்த புது ‘கிரேட் பைரநீஸ்’ நாய் குட்டியின் படத்தை அவளிடம் காண்பித்தேன், அப்படித்தான் உறவு ஆரம்பித்தது என்றான். அப்போ, உன்னிடம் நிஜமாகவே நாய் இருந்ததா என்றேன்? ஆமாம், ஏன் கேட்கிறாய் என்றான். ஒன்றுமில்லை என்றேன். உன்னிடம் எனக்கும் அவளுக்குமான உறவைப்பற்றி முன்னாடியே சொல்லலையா, என்றான். சிரித்தேன். காதலிக்கிறான், பொய் சொல்கிறான்.
கசிபோவில் எல்லோருக்கும் ஒரு டொமினிக்கன் சுருட்டை குடுத்தார் மேலதிகாரி. சுருட்டின் பின் பக்கத்தை ஒரு சிறு கத்தியால் வெட்டிவிட்டு, சிப்போ லைட்டர் வைத்து ஒவ்வொன்றாய் பொறுமையாக பற்ற வைத்தார். அமெரிக்காவில் க்யூபன் சுருட்டு கிடைக்காது என்பதெல்லாம் உண்மை கிடையாது. சுருட்டு கடைகளில் கிடைக்காது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை அவரிடம், நான் மலேசியாவில் வாங்கிப் புகைத்த க்யூபன் சுருட்டு பற்றிப் புகழ்ந்து பேசினேன். அவர், தான் எல்லா சுருட்டும் புகைத்து இருப்பதாகவும், க்யூபன் சுருட்டு ஓவர் ரேட்டட் என்றும் கூறினார்.  நிக்காராகுவன், டொமினிக்கன், ஹன்டுரன் இதெல்லாம் அதைவிட நன்றாக இருக்கும் என்றார். கோநியாக் ஒரு மிடறும், சுருட்டுப் புகையும் குளிரான இரவிற்கு மிதமாய் இருந்தன. புதிதாய் சேர்ந்திருந்த ஒரு நண்பர், சுருட்டுப் புகையை உள்ளிளுத்ததால் இருமினார். சுருட்டுப் புகை உள்ளிழுக்காமல், சுவைத்து விட்டு, வெளிவிட்டுவிட வேண்டும் என்று அவரிடம் கூறினேன். கொஞ்சநேரம் அரட்டை அடித்துவிட்டு,  அதிகமாக குளிர ஆரம்பித்ததால் உள்ளே வந்தோம். நண்பன் என்னிடம், சூப்பர்பவுல் பார்ட்டிக்கு என்னை வருமாறு அழைத்தான். நான் இன்னொரு நண்பனின் வீட்டிற்கு செல்வதாய் சொன்னேன். Cmon Desi, Don’t break the tradition, என்றான். பார்க்கலாம் என்றேன்.
பெண்கள் எல்லோரும், சிறிய கோப்பையில் வைன் அருந்திக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர். டெசர்ட் பார்க்கு சென்று ஆளுக்கொரு ஐஸ்கிரீம் எடுத்து வந்து சாப்பிட்டோம். நண்பன் ஏதோ பேரழகியின் காதுகளில் கிசுகிசுத்தான், பேரழகி என்னிடம் சூப்பர்பவுல் பார்ட்டிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றும், அவள் நிறைய இந்தியன் வகை உணவுகள் சமைக்கப் போவதாகவும் கூறினாள். முயற்சிக்கிறேன் என்றேன். ஒவ்வொருவராக வீட்டிற்கு கிளம்பினர், நானும் மனைவியும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம். ஏதோ நினைவு வந்தவனைப் போல், ஓரக்கண்ணால், பேரழகியின் கைகளில் இன்னமும் அவள் பழைய காதலனின் பெயரை பச்சைக் குத்தி இருக்கிறாளா என்றுப் பார்த்தேன், அவள் கையுறை அதை மறைத்திருந்தது!!