Saturday, July 8, 2023

கோரக்பூர் கதைகள் – 7:

"The only way of knowing a person is to love them without hope" - Walter Benjamin

மதியம் வரவிருந்த இருப்பூர்திக்காக காலையிலேயே நானும் என் நண்பன் ரகுவும் சென்னை மத்திய இருப்பூர்தி நிலையத்தில் போய்க் காத்திருந்தோம். எலி தான் எள்ளுக்கு காயுது எலி புழுக்கை ஏன் காய வேண்டும் என்றெண்ணி அவன் நான் கிளம்புறேன்டா, நீ இருந்து பார்த்து பேசிவிட்டு ஆட்டோ புடிச்சு பெசன்ட்நகர் கடற்கரைக்கு வந்துவிடு என்றான், இல்லை நீ ஆட்டோ புடிச்சுப் போ, நான் மோட்டார்சைக்கிளில் வருகிறேன் என்று அவனை அனுப்பிவிட்டு காத்திருந்தேன். சென்னையிலிருந்த காலகட்டத்தில் தினம் மாலை பெசன்ட்நகர் கடற்கரை தான் நண்பர்களுடன் கூடுமிடம். நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமாகியது. புன்னகையோடு வந்தாள், என்னை வழியனுப்ப கோரக்பூரில் எப்படி வந்திருந்தாளோ, அப்படியே இருந்தாள். பார்த்த நொடியில் பட்டாம் பூச்சிகள். விட்ட இடத்திலிருந்து தொடருவது போல் தான் இருந்தது. அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து பேசினோம். பாண்டிச்சேரி அரபிந்தோ ஆசீரமத்திற்கு போக வேண்டும் என்றாள். எத்தனை நாள் அங்கே இருக்கப் போகிறாய் என்றேன், நாட்கள் அல்ல மாதங்கள் என்றாள். ஒரே ஒரு கைப்பை மட்டுமே எடுத்து வந்திருந்தாள். அவள் நெருங்கிய உறவினர்கள் ஏற்கனவே அங்கிருப்பதாகவும் அவர்கள் சில வாரங்களுக்கு முன் வந்தபோது அவர்களிடம் அவளுக்குத் தேவையான பொருட்களை கொடுத்தனுப்பிவிட்டதாக கூறினாள். வேறென்னமோ பேசினாள், அங்கே இருக்கும் அவள் உறவினர்கள் பற்றி, உறவு முறைப்பற்றி எல்லாம் சொன்னாள். என காதுகளில் விழுந்ததெல்லாம், தூரம் கம்மியாகிவிட்டது, என்னருகில் இருப்பாள். வசந்த காலம் ஆரம்பம்.

மோட்டார்சைக்கிளில் அவளுடன் பாண்டிச்சேரி பயணம். பெசன்ட்நகர் கடற்கரையில் நண்பர்களை சந்தித்து அவர்களுக்கு அவளை அறிமுகம் செய்தேன், என் முகத்தில் பெருமிதம். அவளின் பிரேத்யேக புன்னகையுடன் எல்லோரிடமும் பேசினாள். நண்பர்களுக்கு அவளைப் பிடித்திருந்தது. பிடிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். இன்றும் பெசன்ட்நகர் கடற்கரை அவளை நினைவூட்டும். நானும் அவளும் நண்பர்களுடன் சிரித்து அரட்டை அடித்தது ஒரு முறையேனும் நினைவில் வந்து மறையும். பாண்டிச்சேரி அரபிந்தோ ஆசீரமம் வந்து சேர்ந்தோம். அவள் உறவினர்களும் நண்பர்களும் இருந்தனர். நான் நிறைய முறை பாண்டிச்சேரிக்கு வேறு காரணங்களுக்காக போயுள்ளேன், ஆசீரமத்திற்கு இதுவே முதல் முறை. பல விஷயங்கள் போல இதையும் எனக்கு அறிமுகப்படுத்துவது அனு தான், இது நாள் வரை நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் முதற்கொண்டு, மனிதர்களிடம் பழகும் விதம் வரை அவள் பாதிப்பு உள்ளது, இருந்தே தீரும். அவள் நிறைய பேரை அறிமுகப்படுத்தினாள், பாண்டியில் எனக்கு தெரிந்தவர்களை விட, அவளுக்குத் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருந்தனர். அரபிந்தோ ஆசீரமம் ஒரிசாவால் நிறைந்திருந்தது, ஒரு சமயல்காரர் உட்பட. அவள் அறிமுகப்படுத்திய எல்லோருடனும் சிறிது நேரம் பேசினேன். அடுத்த நாள் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். இருட்டில் வாகனம் ஒட்டாதே என்றாள், நீ வீடு போகும் வரை கவலையாக இருக்கும் என்றாள், அந்த அக்கறை பிடித்திருந்தது.

அதன் பிறகு அடுத்த ஒரு வருடமும் அடிக்கடி தொலைபேசிணோம், நேரிலும் அடிக்கடி சென்று பார்த்தேன். வருகிறேன் என்று சொன்னால், சரி வா, ஆனால், பேருந்தில் வா என்று சொல்லுவாள். அவள் சிலமுறை சென்னைக்கு வந்தாள், சில இடங்களில் சுற்றிவிட்டு மாலை வழக்கமாக கூடும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு வந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு அவளைப் பாண்டிச்சேரியில் விட்டுவிட்டு வருவேன். அவளும் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவளாகியிருந்தாள். பாண்டிச்சேரியில் அவள் நண்பர்கள் அவளுடைய உறவினர்கள் எல்லோரும் எனக்கு நன்றாக பரிச்சயம் ஆகியிருந்தனர். ஒருமுறை நான் சென்றபோது அவளுடைய உறவினர் ஒருவர் எனக்கு உணவு பரிமாறும்போது சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னார், எல்லோரும் லேசாக புன்னகைத்தனர். என்னவென்று கேட்டேன், அதற்கு அனு சிரித்துக்கொண்டே, மருமகன் வந்துள்ளார் நன்றாக கவனி என்று கூறுகிறார் என்றாள், அவள் கண்களைப் பார்த்தேன், ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாக புரிந்தது, அவளுக்கு என் மீது காதல் இருந்தது ஆனால் அது ஒரு ஓரமாகத்தான், சேவை தான் அவள் முதல் இலக்காக இருந்தது. நான் அதற்கு தடை சொல்வேன் என்று எண்ணினாள் என்று நினைக்கிறேன், அதனாலேயே அவளால் என்னை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் என்னிடம் கடைசி வரை காரணம் சொல்லவே இல்லை. நானும் கட்டாயப்படுத்தி கேட்கவும் இல்லை, என் மனதின் ஓர் ஓரத்தில் அவள் அப்படி நினைத்திருந்தால் தோற்றுவிட்டேன் என்றே தோன்றியது.

சில மாதங்களில் அமெரிக்க கம்பெனி ஒன்றின் நேர்முகத்தேர்வில் வேலை கிடைத்தது. அனுவிற்கு தொலைபேசினேன், சொன்னேன். நீண்ட மௌனமே பதிலாக இருந்தது. என் மனதில், “போகாதே என்று சொல் அனு, உன்னுடனேயே இருந்து விடுகிறேன், அது ஒரிசாவாகட்டும் இல்லை அது அரபிந்தோ ஆசிரமமாகட்டும்”. மௌனம் கலைந்து பேசினாள், இந்த வாரம் கிளம்பி வருகிறாயா என்றாள், அவளாக வர சொல்வது முதல்முறை என்று நினைக்கிறேன். சரி என்றேன். காலையிலேயே வந்துவிடு என்றாள். ஒரு சிறு இடைவெளிவிட்டு தயக்கமாக மோட்டார்சைக்கிளில் வா என்றாள்.

அடுத்த நாள் காலையிலெல்லாம் சென்றுவிட்டேன். காலை உணவு ஒன்றாக அருந்தினோம். கோரக்பூரின் கடைசி வாரம் நினைவிற்கு வந்தது. அவளிடம் சொன்னேன், அவளுக்கும் அப்படியே என்றாள் புன்னகையோடு. மூன்றாண்டுகளாகிறது நான் அவளிடம் என் காதலை சொல்லி என்பது நினைவிற்கு வந்தது. நிராகரிக்கப்பட்டும் அதே மூன்றாண்டுகள் என்பது வலித்தது. அவளுடைய நண்பர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்றோம். மோட்டார்சைக்கிளில் கிளம்பினோம், ஆரோவிலுக்கு சென்று நேரம் செலவழித்தோம், நிறைய பேசினோம், நிறைய சிரித்தோம். அவள் தானும் ஒரிசாவிற்கு திரும்ப போவதாகக் கூறினாள். கிட்டத்தட்ட கோரக்பூரில் இருந்த ஒவ்வொரு நாளையும் நினைவு கூர்ந்து பேசினோம். சேட்டன் நடனம் என்கிற பெயரில் ஏதோ ஒன்றை ஆடியதை சொல்லி சிரித்தோம். என் நாடகங்களைப் பற்றி பேசினாள். அதில் ஒரு காட்சியில் அவள் நடித்ததை நினைவு கூர்ந்தோம். அவள் என்னிடம் நீ கலைத்துறையில் ஏதாவது வேலைக்கு செல்வாய் என்றே நான் நினைத்திருந்தேன், அமெரிக்காவிற்கு செல்வாய் என்று நினைக்கவில்லை என்றாள். நானும் அதற்கு திட்டமிடவில்லை என்றேன். அவள் வழக்கமான புன்னகையைத் தொலைத்து, சற்றே சோர்வான முகம்கொண்டு அமெரிக்கா சென்றவுடன் என் நியாபகம் உனக்கு இருக்குமா என்றாள். உயிர் உள்ளவரை என்றேன். என்றாவது ஒரு நாள் உலகுக்கு நம் கதையை சொல்வேன் அனு. மாலை கடற்கரைக்கு வந்தோம், சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டே இருந்தோம், தோள் சாய்ந்திருந்தாள், மெலிதாய் விசும்பினாள். இந்த மாலை நீண்டுக்கொண்டேப் போகாதா என்று தோன்றியது. கடைசி இரண்டு மணி நேரம் எதுவுமே பேசவில்லை இருவரும், பேசவேண்டியதையெல்லாம் பேசித்தீர்த்திருந்தோம். இருவருக்கும் தெரிந்திருந்தது இதுவே கடைசி சந்திப்பென்று. நடுங்கும் என் விரல்களை கோர்த்து விடைகொடுத்தாள்.

- அனு விடைபெறுகிறாள்



All re

Thursday, July 6, 2023

கோரக்பூர் கதைகள் – 6:

“I love you because the entire universe conspired to help me find you” - The Alchemist

அடுத்த நாள் காலை சேட்டன் அவசரமாக வந்து என்னை எழுப்பினான், அனு அவனிடம் உணவருந்தும் அறை வாசலில் எனக்காக காத்திருப்பதாக சொல்லி அனுப்பி இருந்தாள். இதுவரை காலை உணவு அவள் அவள் தோழிகளுடன் அருந்துவதே வழக்கம். அவசரமாக கிளம்பி சென்றேன், அன்றிலிருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு, ஊருக்குத் திரும்பும் நாள் வரையில் ஒன்றாகவே காலை உணவருந்தினோம். நான் அவளிடம் என் காதலைத் தெரிவித்தது பற்றி அவள் எதுவும் பேசவில்லை, அவளாகவே என்னுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறாளெனில் என்னையும் விரும்புகிறாளென்றே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அடுத்த ஒரு வாரமும் அவளுடன் தான் அதிக நேரம் செலவழித்தேன். ஒருமுறை அவளை நாடகத்தில் ஒரு நிமிடம் நடிக்கக்கூட வைத்துவிட்டேன், தயங்கி பிறகு ஒத்துக்கொண்டாள். நிறைய பேசினோம் என்று சொல்வதைவிட அவள் பேசினாள், நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.

கடைசி நாள், வழியனுப்ப இருப்பூர்தி நிலையத்திற்கு அவளும் அவள் தோழியும் வந்திருந்தனர். அவள் தோழி என்னிடம் தனியாக, எனக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும், அவளாக உனக்கு தொலைபேச மாட்டாள், ஆனால் உன்னிடமிருந்து எதிர்ப்பார்த்து காத்திருப்பாள், நீ அவளுக்காக காத்திருக்காமல் ஊருக்குச் சென்றவுடன் அவளைக் கூப்பிடு என்றாள், தலையாட்டினேன். அதுவரை மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவள் என்னிடம் வந்தாள், கலங்கியிருந்தேன், அவள் கண்களிலும் லேசாக ஒரு கண்ணீர்த் திரை. காதலிக்கிறேன் என்று சொல் அனு, இப்போதே உன்னுடன் வந்துவிடுகிறேன் என்னும் நிலையிலிருந்தேன், நான் உணர்வால் உந்தப்படுபவன், அவளோ தத்துவங்களால். அவள் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்திருந்த 3 ஒலிப்பேழையை அழகாக வண்ணத்தாளில் சுற்றி என்னிடம் பரிசாகத் தந்தாள். அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்து, பயணத்தின்போது பொறுமையாக படிக்கும்படி சொன்னாள், பொறுமையாக என்பதை வலியுறுத்தி சொன்னாள். இரவு விலை கம்மியாக இருக்கும்போது தொலைபேசியில் அழைக்குமாறும், அம்மாவிடம் காசு வாங்கி அதை விரயமாக்க வேண்டாம் என்றாள். செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அவள் ஒரு சேவை மையத்தில் வேலை செய்யும் ஆவலில் இருப்பதாக சொன்னாள், இருப்பூர்தி புறப்படும் வரை பேசிக்கொண்டிருந்தோம். அவள் கண்களிலிருந்து மறையும் வரை கையசைத்துவிட்டு வந்தமர்ந்தேன்.

நடைகேட்பியில் அவள் கொடுத்த ஒலிப்பேழையை ஒலிக்கவிட்டு தலையணி கேட்பொறியை மாட்டிக்கொண்டேன். புரியாத மொழி தான், ஆனால் இரம்மியமான இசை, அவள் தேர்வுகள் எப்பொழுதும் உசத்தியானவை, ஆடம்பரமற்றவை. என்னளவில் இன்றும் கூட அவள் எங்கோ உயரத்தில் இருக்கிறாள், இத்தருணத்தில் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் எனும் யோசனை வரும்பொழுது, அவள் யாருக்காவது எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஒரு மெல்லிய புன்னகையோடு செவிலியர் பணி செய்து கொண்டிருப்பாள், அவ்வரையின் மேசையில் கரமசோவ் சகோதரர்களின் பக்கங்கள் காற்றில் படபடக்கும் காட்சியே மனதில் வந்து போகிறது.

கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முதல் சந்திப்பை அழகாக எழுதியிருந்தாள். அவளுக்கும் என்னைப் பிடித்துள்ளதாகவும், என் அருகாமையும் என்னுடன் நேரம் செலவழித்ததும் பிடித்திருந்ததாகவும், ஒரிசாவில் இருந்து வரும்போது எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்ததாகவும், திரும்பும்போது மகிழ்வாக திரும்புவதாகவும், அதற்கு காரணம் நானென்றும் எழுதி இருந்தாள். அதுவரை புரிந்தது, அதற்கு மேல், சார்த்ரேயும் கீற்கேகார்டும் மேற்கோள்களில் வந்து என்னைக் கலவரப்படுத்தினர். நான் புரிந்துக்கொண்ட சாராம்சம் இதுதான், எனக்கு உன்னை ரொம்பவே பிடித்துள்ளது ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வராது, தூரம் தான் காரணம், நாமிருவரும் ஏமாற்றமடைந்து விடுவோம் என்றெழுதி இருந்தாள். பெருந்தவத்தின் பாரமாய் அடுத்த மூன்று நாட்களும் நகர்ந்தது. கூட பயணித்த நண்பர்களுக்கு புரியவில்லை, 20 நாளில் ஒரு காதல் இவ்வளவு காயப்படுத்தும் என்பதை அவர்கள் நம்பத்தயாராக இல்லை. விளக்கவும் முடியாது. தஞ்சை குந்தவை நாச்சியார் பெண் மட்டும் ஆறுதல் கூறினாள். ஊர் வந்த பிறகு வாரமொருமுறை அனுவிற்கு தொலைபேசினேன், சில நேரங்களில் அவளும் அழைப்பாள். அவளுக்கு காதல் என்னும் “வார்த்தை” மட்டுமே அச்சம் தந்தது.

என்னுடன் பயணித்த நண்பர்கள் நாளிதழ்களுக்கு கட்டுரை எழுதி பேட்டியெல்லாம் கொடுத்திருந்தனர். பிராத்மிக் யாரிடமோ ஒரு கேடயம் வாங்குவது போல் ஒரு புகைப்படம் கூட ஒரு மாலை நாளிதழில் வந்திருந்தது. அப்படி ஒரு நிகழ்வு நடந்த நினைவு எனக்கில்லை, மங்கிய செய்தித்தாளில் உற்றுப்பார்த்தால் கேடயம் வழங்குவது அவள் லக்னோ சித்தப்பா போல தோன்றியது. மேய்ப்பர் திருச்சி வானொலி நிலையத்தில் பேட்டியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார், எப்படி அவர் வழிகாட்டலில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று, எல்லோரும் இப்படி தன்விவரப் பட்டியலை புதுப்பித்துக் கொண்டிருக்க, என்னுடைய கவனமோ நூலிழையில் தவறிய காதலில் குவிந்திருந்தது. உன் மீது காதல் இல்லை இனி என்னிடம் பேசாதே என்று அவள் சொல்லிவிட்டால் அதையாவது சில மாதங்களில் கடந்துவிடலாம், ஆனால், இன்னும் பேசிக்கொண்டுதான் இருந்தோம். சில நாட்கள் அதிக சோர்வாக இருக்கும், ஆண் நண்பர்களிடம் இதை விளக்க முயலும்போது, அதிக பட்சமாக 2 நிமிடங்கள் கேட்டுவிட்டு அவர்கள் எனக்களித்த தீர்வு, பியரோ அல்லது கிழமுனியோ (old monk) தான். கு. நா பெண் வீட்டிற்கு வருவாள், ஆறுதலாக பேசுவாள், அதற்கும் தடை ஏற்பட்டது. என் தாய் வழிப்பாட்டி, நாக சுந்தராம்பாள், நான் இல்லாத சமயத்தில் கு. நா பெண் வந்திருந்தபோது, நீ வீட்டிற்கெல்லாம் வராதே, அவன் தகப்பனுக்கு பிடிக்காது என்று கடிந்துள்ளார், கேள்விப்பட்டபோது, எனக்குக் கோபம் தலைக்கேறியது. தகப்பனார் அப்போது தஞ்சையில் கூட இல்லை, போபாலில் வேலைப் பார்த்து வந்தார். இருந்த ஒரே ஆறுதலையும் இப்படி பறித்துவிட்டாரே என்று நான் அடித்தொண்டையிலிருந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தேன். இங்கே ஒன்று சொல்லியாக வேண்டும், என் கோபத்தை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போவது இரண்டே பேர் தான், 20ம் நூற்றாண்டில் என் பாட்டி, 21ம் நூற்றாண்டில் என் மகள். நான் கத்திக்கொண்டிருக்கும்போது, பாட்டி, “வேணி, எதுக்கு இந்த போக்கத்தப்பய இப்படி புடுக்கறுந்த பன்னியாட்டம் கத்துறான்”, என்றவாறு என்னை அலட்சியப்படுத்தி நகர்ந்துவிடுவார்.

பல மாதங்கள் கழித்து, கல்லூரிப் படிப்பு முடிந்து கோயமுத்தூர், பெங்களூரில் எல்லாம் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்திருந்தேன். முன்போல் அடிக்கடி பேசுவதில்லை என்றாலும் மாதமொருமுறையாவது அனுவிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். ஒருமுறை அவள் என்னை அழைத்து அடுத்த மாதம் அவள் சென்னை வரப்போவதாக சொன்னாள். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் கழித்து மீண்டும் அவளை சந்திக்க பதற்றத்தோடுக் காத்திருந்தேன் ..

- பயணம் தொடரும் #GorakhpurStories




Tuesday, July 4, 2023

கோரக்பூர் கதைகள் – 5

உள்ளூர் கல்லூரியில் படித்த ஒரு சிலர் நல்ல நண்பர்களானார்கள். அவர்களின் நட்பால் கொஞ்சம் வெளியே போய் சுற்றிவிட்டு நேரம் தாழ்த்தி வருவது போன்ற சிறு அத்துமீறல்கள் வாடிக்கையாகி இருந்தது. ஒருநாள் ஒரு நட்சத்திர விடுதிக்கு, எங்களையும் மற்றும் இன்னும் இரண்டு, மூன்று மாநிலத்தவர்களையும் கலை நிகழ்ச்சிகளுக்காக அழைத்துச் சென்றனர், நாங்களும் நாடகங்கள் நடித்து விட்டு வந்தோம். அது அடுத்த நாள் அங்கே ஒரு உள்ளூர் செய்தித்தாளில் வந்தது, அது ஒரு சிறு சலசலப்பை உண்டு பண்ணியது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்காக பிற மாநிலத்தவர்களை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்து கலை நிகழ்ச்சி நடத்தினார் என ஒருங்கிணைப்பாளருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். தேவேந்திர சிங் உள்ளூர்காரன், அவன் இதைப் பற்றி எங்களுக்கு விளக்கினான். உள்ளூர் அரசியல், எங்கள் புகைப்படத்தைப் போட்டு எங்கள் தலையை உருட்டிருந்தனர். எங்கள் மேய்ப்பரிடம் என்ன செய்வது என்று கேட்டோம், அவரோ பிராத்மிக்கிடம் அந்த செய்திதாளில் வந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்து எழுதி தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார். எங்களை உற்சாகப்படுத்துவதற்காக தேவேந்தர் அவன் வீட்டிற்கு என்னையும் இன்னொரு தமிழ் நண்பனையும் மேலும் 2 சேட்டன்களையும் விருந்துக்கு அழைத்தான். அவனுக்கு நாங்கள் ஆங்கிலத்தில், அதிகமில்லை 15-20 வாக்கியங்களை எப்படி சரியாக அமைப்பது என்று கற்றுக் கொடுத்திருந்தோம். அவன் குடும்பத்தில் எல்லோரும் வாட்டசாட்டமான ஆண்கள், இராணுவத்தில் பணி புரிபவர்கள். ஜம்முவிலிருந்து ஒரு பெண், பெயர் நீரு, ஒரு நீதிபதியின் மகள் அவள், பேரழகி, அவள் மீது மய்யல் கொண்டிருந்தான், அவளைப்பற்றி தினம் எங்களிடம் பேசுவான், ஆனால் அவளிடம் அவன் பேசி நான் பார்த்ததில்லை. அவனுடன் நிறைய வருடங்கள் நட்பிலிருந்தேன். சில வருடங்களில் அவனும் இராணுவத்தில் சேர்ந்தான். திருமண பத்திரிக்கை அனுப்பி இருந்தான், பெண் பெயரைப் பார்த்தேன், நீரு அல்ல, வீட்டில் பார்த்த பெண், திருமணத்திற்கு பின், அவன் தஞ்சைக்கு வந்து கோவில்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னான், பிறகு அது கைகூடவில்லை. நான் அமெரிக்கா வந்த பிறகு கூட நட்பிலிருந்தோம். ஒருமுறை தொலைபேசியபோது, அமெரிக்க வாழ்வைப் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு, என்னிடம், அமெரிக்க மக்கள் இந்திய இராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டான், நானும் யோசித்துப்பார்த்தேன், அது வரை கூட பணி புரிந்த எவரும் என்னிடம் இராணுவத்தைப் பற்றியெல்லாம் பேசியது இல்லை, அவர்கள் என்னிடம் அதிக பட்சமாக பேசுவது, இந்திய உணவுகள் பற்றியும், கோயில்கள் பற்றியும் தான், சொன்னேன், அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எந்நிலையிலிருந்தாலும் எல்லோருக்கும் ஒரு அங்கீகாரம் தேவையாயிருக்கிறது. மெதுவாய் எங்கள் நட்பு நீர்த்துப்போனது.


பிராத்மிக்கின் லக்னோ சித்தப்பா குடும்பத்துடன் வந்திருந்தார். அவளை இரண்டு நாள் அவருடன் அழைத்து சென்றார், நே தான் தவித்து போய் விட்டான். சேட்டனிடம், நீயும் சோகமாக இருக்கிறாயா என்று கேட்டேன், அவன் ஆமாம் அதனால் தான் இன்று மிலிட்டரி காண்டீன் வரை செல்ல வேண்டும் என்றான்.
ஒரு நாளின் பெரும் பகுதியை அனுவுடன் தான் செலவழித்தேன், ஆனால் அப்போது மற்ற குழு நண்பர்களும் உடனிருப்பர். மாலை சிற்றுண்டி முடிந்த பிறகு, தினமும் அம்மாவுக்கு தொலைபேச அனுவுடன் வெளியே செல்ல ஆரம்பித்திருந்தேன். அவளுடன் அதிக நேரம் செலவழிக்கவும், கூட்டத்திலிருந்து விலகி நிறைய நேரம் பேசிக்கொண்டிருக்கவும் இதுவே நல்ல காரணமாக அமைந்தது. அம்மாவிடம் சில நிமிடங்கள் தான் தொலைபேசுவது, அனுவும் அம்மாவிடம் நன்றாக பழக ஆரம்பித்திருந்தாள். ஒரு நாள் அம்மாவே என்னிடம், தம்பி, நீ திருச்சில இருந்து கூட என்கிட்ட தினமும் பேச மாட்டியேப்பா, இப்போ பாசம் அதிகமாவே தெரியுது, அடுத்த வாரம் திரும்ப திருச்சி வரும் வண்டியில் ஏறுவியா இல்லை ஒரிசா வண்டியா, அம்மாவின் நக்கல்!! சரிம்மா நான் நாளைக்கு கூப்புடுறேன்.

கிளம்பும்போது அதுவே நினைவில் ஓடிக்கொண்டிருந்தது, இன்னும் ஒரு வாரம் தான், பாரமாக இருந்தது. அனுவிடம் அதைப்பற்றி பேச எத்தனித்தபோது, அவள் கேட்டாள், இன்றிரவு பார்ட்டி என்று கேள்விப்பட்டேனே!! சேட்டன் ஓட்டை வாயன். சரி, மிலிட்டரி ரம் பற்றி பிரீட்ரிக் நீட்சே என்ன சொல்லியிருக்கார் போன்ற அறிவுரைக்கு என்னைத் தயார் படுத்திக்கொண்டு காத்திருந்தேன், ஆனால் அவள் அதற்கு பிறகு ஒரு வார்த்தை கூட அதைப்பற்றி பேசவில்லை. அவள் எதிர்வினை இப்படித்தான் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கும்போது அதற்கு நேர் எதிர் திசையில் பயணிப்பாள், அதுவே அவள் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகமாக்கியது. ஆமாம் நீ ஏதோ சொல்ல வந்தாயே என்றாள், இது சரியான தருணமா என்றெல்லாம் யோசிக்கவில்லை நான், இன்னும் ஒரு வாரம் தான் ஊருக்கு திரும்ப என்பது மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது, அவளை எனக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பும் முன் என் காதலை உன்னிடம் தெரிவிக்க வேண்டும், அதற்காக தான் இங்கே இந்த இடத்தில் உன்னிடம் சொல்கிறேன் என்றேன், இதையெல்லாம் இப்படி கோர்வையாக சொல்லாமல், ஒரு மாதிரியாக உளறிக்கொட்டினேன். புன்னகைத்தாள், ஆமோதிப்பதுப் போல் தலையசைத்து புரிகிறதென்றாள். இப்படியாக என் முதல் காதலை கோரக்பூர் நகரத்தின் ஒரு சிறிய பொதுதொலைபேசிக் கடையின் வாசலில் வைத்து தெரிவித்திருந்தேன்!!

விடுதிக்கு வந்தபிறகு நண்பர்களிடம் பேசும் போதுதான் உரைத்தது, ஆம், இல்லை தானே பதிலாக இருக்க முடியும், புரிகிறதென்பது என்ன பதில், குழம்பினேன். சேட்டனின் அறைக்குச் சென்றோம்.

- பயணம் தொடரும் #GorakhpurStories




Wednesday, June 28, 2023

கோரக்பூர் கதைகள் – 4:

சில நாட்களில் சற்றே தாயகப் பிரிவுத்துயர் எட்டிப் பார்த்தது, அனு என்னிடம் ஏன் சோர்வாக உள்ளாய் என்று கேட்டாள், சொன்னேன். தொலைபேசியில் அம்மாவை அழைத்துப் பேசவேண்டும், ஆனால் விடுதிக்குத் திரும்பும் முன் எல்லோரையும் காக்கவைத்தல் நியாயமில்லை, பசியுடன் வேறு இருப்பர், என்றேன். எல்லோருடனும் நாமும் போய் சாப்பிட்டுவிட்டு, உனக்கு மொழி பிரச்சனை இருப்பதால் நாமிருவரும் திரும்ப வரலாம் என்றாள். புல்லாங்குழலின் பின்னணி இசை ஒலித்த தருணமது.

அம்மாவுக்குத் தொலைபேசினோம். முதலில் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு, அனுவிடம் நீ பேசு என்று கொடுத்தேன், அவளும் ஓரிரு நிமிடங்கள் அம்மாவுடன் கொஞ்சம் சிரிப்புடன் ஆங்கிலத்தில் பேசிவிட்டுத் தொலைபேசியை என்னிடம் கொடுத்தாள்.

அம்மா என்னிடம்
“யாருடா தம்பி அந்த பொண்ணு?” குரலில் இன்னும் சிரிப்பு ஒட்டியிருந்தது.

உன் மருமகள் மா.

“முருகா” என்று சொல்லிவிட்டு அம்மா கடவுளை வேண்டுவது கேட்டது.

ஏம்மா கடவுளையெல்லாம் வேண்டுற, நல்ல பொண்ணுமா.

“அது தெரியுதுடா, அதுதான் அவளுக்கு நல்ல புத்தியை குடுன்னு வேண்டிக்கிட்டேன்”

சரி அடுத்த வாரம் பேசுறேன். கோபமாக தொலைபேசியை வைத்துவிட்டேன்.

அதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்களை உன் மருமகள்மா என்று அம்மாவிடம் கூறியுள்ளேன், அதில் சிலரிடம் ஒருமுறை கூட நான் பேசியதில்லை, சிலரை நேரில் பார்த்தது கூட இல்லை, அதனால் அம்மா அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை. திரும்பும்போது என்னிடம் அனு, அம்மா நல்லா பேசியதாகவும், ஊர் பற்றியெல்லாம் நிறைய பேசினாள். நானும் வெகு நேரம் தஞ்சையின் புகழ் பாடினேன். சந்தோஷமான நாள். பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.

கோரக்பூர் நாட்களில் அனுவுடனான இரண்டு முக்கியமான பயணங்கள் மனதிற்கு இணக்கமானவை. முதல் பயணம் புத்தர் கோவில், நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் தான் இருந்திருக்கும். புத்தர் இறந்த இடம் என்று சொல்வர். புத்தர் மரண தருவாயில் படுத்திருக்கும் சிலை இங்கே உள்ளது. 10 பேர் சென்றோம். நான் அனுவுடன் பயணித்தேன். வெள்ளை சுடிதார் அணிந்திருந்தாள். பஸ் பயணம் முழுதும் நிறைய பேசினோம், அப்படி சொல்ல முடியாது, அவள் புத்த தத்துவங்கள் பேசினாள், புரியவில்லை தான், ஆனால் ஏதோ கொஞ்சம் மண்டைக்குள் இறங்கிய மாதிரி தான் தோன்றியது. உலகிலேயே இருக்கும் பெரிய புத்தர் கோவில் பற்றி வழிகாட்டி ஏதோ பேசினார், அனு என்னிடம் புத்த கோவிலுக்கும் புத்த தத்துவங்களுக்கும் இல்லாத சம்பந்தம், நிர்வாணத்தைப் போதித்தவருக்கு எதற்காக பெரிய கோவில்கள் கட்டினோம் என்றெல்லாம் பேசினாள், பதிலேதும் கூறாமல் தூரத்தில் தெரிந்த பொட்டல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தேன், தத்துவ மயக்கத்தில் சற்றே கண்ணயர்ந்து விட்டேன். அந்த நாள் முழுதும் ஒரு இனிய புதிய அனுபவம்.

அடுத்த பயணம் எல்லையோர நேபாள கிராமத்துக்குச் சென்றது, 3 மணி நேர பயணம். சுநௌளி என்னும் ஊருக்கு பேருந்து கூட்டிச் சென்றது. எல்லோரும் போயிருந்தோம். அனுவைத் தமிழ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருந்தேன், எல்லோரும் நட்பாக பழகினர். அங்கிருந்து கொஞ்சம் தூரம் நடந்து 2 சோதனைச் சாவடிகளை கடந்தால் பெளஹியா எனும் நேபாள கிராமத்துக்கு இட்டு செல்லும் அங்கிருந்து 15 நிமிடத்தில் பைரஹவா எனும் கிராமத்திற்கு சென்று விடலாம். இப்போதெப்படி என தெரியவில்லை, 90 களில் கடவுச்சீட்டு தேவையில்லை. சோதனைச் சாவடியில் காமெராவை எடுத்து செல்ல அனுமதியில்லை என்றனர், பிராத்மிக் உடனே கோபமாக நான் பேசுகிறேன் என்றாள், சரி காமெராவை மறந்துவிட வேண்டியதுதான் என்றெண்ணினேன், அதற்குள் அனு அவர்களிடம் தன்மையாக பேசி வாங்கி கொடுத்தாள். பைரஹவா கிராமத்திற்கு சென்றோம், நிறைய சிறிய கடைகள் இருந்தன, மலிவு விலையில் பொருட்கள், எல்லைத் தாண்டி இந்தியாவில் வாங்குவதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது, நிறைய பேர் விலைகளுக்காக இந்தியாவிலிருந்து இங்கே வந்து வாரமொருமுறை வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவர் என்றனர். ஒரு கடையில் பிராத்மிக் தீவிரமாக பேரம் பேசிக்கொண்டிருந்தாள், நகர்ந்து விட்டேன்.

நான் அனுவிற்கு உலோகத்திலான கழுத்தணியில் தொங்கும் ஒரு சிறிய புத்தர் பதக்கத்தை வாங்கினேன், பேருந்து ஏறும் முன் அவளிடம் தந்தேன். ஒரு புன்னகையோடு வாங்கிக்கொண்டாள், கண்களில் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன், கண்டுபிடிக்க முடியவில்லை. பேருந்தில் திரும்பி வரும்போது, பயணம் முழுதும் அந்த புத்தர் பதக்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, வழக்கம்போல புத்தகம் படித்துக்கொண்டு வந்தாள் . கடைசி நாள் பிரியும்போது அவள் எனக்கொரு பரிசும் ஒரு கடிதமும் கொடுத்தாள், 3 நாள் பயணத்தின் போது படி என்றாள்...

- பயணம் தொடரும் #GorakhpurStories





Monday, June 26, 2023

கோரக்பூர் கதைகள் – 3

 

முதலில் மலையாளிகளிடம் தான் நட்பானோம். அதற்கு காரணம் மேய்ப்பர்களை எல்லாம் ஓர் அறைக்கு இருவர் என்று தங்க வைத்திருந்தனர், எங்கள் மேய்ப்பர் மலையாளி மேய்ப்பருடன் தங்கி இருந்தார். தமிழையே மூக்கால் பேசிக்கொண்டு அதை மலையாளம் என்று ஜல்லி அடித்துக்கொண்டு திரிந்தார். என்னதான் சொல்லுங்கள், சேட்டன்களின் உய்தலுணர்வு (survival instinct) வேறெவர்க்கும் கிடையாது. கோரக்பூர் எங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் புதிய ஊர், புதிய மனிதர்கள் தான், ஆனாலும் ஒரு சேட்டன் நாங்கள் பகலில் செல்லும் சமூக சேவை நாட்களில், முதல் சில நாட்களுக்குள்ளாகவே யாரையோ பிடித்து, மிலிட்டிரி ரம் வாங்கி வந்து விட்டான். அது ஒரு காரிக்கிழமை இரவு, அடுத்த நாள் பகலில் நிகழ்வுகள் ஏதுமில்லை. புது நட்புகள் எல்லோரும் வட்டமாய் அமர்ந்து பருக ஆரம்பித்தோம். விளைவுகளைப் பற்றி அதிகம் எழுதப் போவதில்லை, மிலிட்டிரி ரம் பரிச்சியம் உள்ள அனைவரும் அன்றிரவுக்கான கதையை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள், அதிக வித்தியாசம் இருக்காது. மிதமான போதையில் சேட்டன் என்னிடம், அந்த பிராத்மிக் பெண்ணை என்னிடம் தமிழிலேயே பேச சொல்லு என்றான். அவனிடம் சொல்லு என்று “நே”யை கை காண்பித்தேன். நே முறைத்தான். சேட்டன் இன்னொரு தகவலையும் சொன்னான் அன்று மதியம் அவர்கள் திரும்பும் போது “பிராத்மிக்” வாகன ஓட்டுநரிடம் பேரம் பேசினாளாம், முந்தைய முறையை விட அதிகமாக கொடுத்தோம் என்று கூறி விட்டு அசூசையாய் தலையாட்டினான். சரி, இப்பத்தியுடன் அவ்விரவை கடந்து விடுவோம்.
அடுத்த நாள் மாலை கலை நிகழ்ச்சிகள், கிட்டத்தட்ட 4-5 மாநிலங்கள் மட்டுமே ஈடுபாட்டுடன் நிகழ்ச்சிகள் நடத்தின. அது போட்டியில்லை என்றாலும் நாங்களே எல்லா நாட்களிலும் மேடையை ஆக்கிரமித்திருந்தோம், எங்கள் நிகழச்சிகளுக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தனர். நிறைய ஊமை நாடகங்கள் (mime) தயாரித்து வைத்திருந்தோம். திருச்சியிலேயே இதற்காக நிறைய பயிற்சி எடுத்திருந்தோம். புது விருந்தினர்கள் வந்தால் ஒரு பரதம், சில பாடல்கள், அடுத்து எங்கள் ஊமை நாடகங்கள், ஒரு சூத்திரம் வைத்திருந்தோம், கொஞ்சம் நகைச்சுவை, ஒரு அதிர்ச்சி, ஒரு செய்தி. ஒவ்வொரு நாளும் கடைசியாய் சொல்ல வந்த செய்தியை மாற்றினோம், அது ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது, ஊமை நாடகம் என்பதால் மொழி பிரச்சனை இல்லை, புதிதாய் இருந்தது. நாடி பிடித்து விட்டோம், அனைவருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாய் அனாசுயா (அனு) விற்கு பிடித்திருந்தது. சில நாட்களிலேயே ஓரளவு நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். எங்கள் குழுவிற்கு அரசு மருத்துவமனையில் சமூக சேவைக்காக நேரம் ஒதுக்கி இருந்தார்கள். ஒரிசாவில் இருந்து வந்த 10 பேரும் செவிலியர் கல்லூரியில் இருந்து வந்தவர்கள். முதல் நாள் மருத்துவமனை என்னை சோதித்து விட்டது, அனுபவமில்லாததால் அந்த துர்நாற்றம் படுத்திவிட்டது, கூட இருந்த சிலருக்கும் அப்படியே, அனு எதற்கும் அசரவில்லை, எல்லா பொறுப்பையும் எடுத்துச் செய்தாள், அடுத்து வந்த நாட்களிலும் தொடர்ந்து அவளே நிறைய இடங்களை எவ்வித முகசுளிப்பும் இல்லாமல் சுத்தம் செய்தாள், அவள் மீது அதீத மரியாதை உருவானது. 4-ம் நாள் நான் “அன்பே சிவம்” படத்தில் மாதவன் இரண்டு கைகளையும் நீட்டி என்னிடமிருந்து இரத்தம் எடுத்துக்கொள்ளுங்கள் என்பாரல்லவா அந்நிலையில் இருந்தேன். அனு யாரையும் அலட்சியப்படுத்தாமல் எல்லோரிடமும் தன்மையாக நடந்து கொண்டாள், வலிக்காத ஆங்கிலம் பேசினாள், நிறைய பயணித்திருந்தாள், மென்மையாய் சிரித்தாள், கையில் எப்பொழுதும் நான் கேள்வியே பட்டிராத ஆன்டன் செகாவோ, தஸ்தயேவ்ஸ்கியோ வைத்திருந்தாள், பெரிய குடும்பம், ஓரளவு வசதியான குடும்பமும் கூட, சேவை மனப்பான்மையுடன் செவிலியர் கல்வி பயில்கிறாள். என்னைப் பொறுத்தவரையில் எங்கோ உயரத்தில் இருந்தாள். இந்த பயணம் வரையில் நான் பயணித்திருந்தது வடக்கே திருப்பதி வரையிலும் தெற்கே காரைக்குடி வரையிலும் மட்டுமே, படித்திருந்தது கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் பாலகுமாரன், நிறைய புஷ்பா தங்கதுரை!! என் தேடல் அத்துடன் தேங்கி போன காலமது, அதனால் அவளிடம் அளந்தே பேசினேன். எங்கே ஏதாவது பேசி, என் அறியாமை வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்தேன்.
கலை நிகழ்ச்சிகளின்போது 4வது வரிசையில் அமர்வாள், வெள்ளையோ அல்லது வேறு லேசான வண்ணங்களிலோ சுடிதார் அணிந்திருப்பாள், பெரும்பான்மையான நேரங்களில் வெள்ளை தான். மேடையிலிருந்து அவளைப் பார்ப்பேன், அவள் சிரித்துவிட்டால் நாடகம் வெற்றி என்று மகிழ்ச்சியாகிவிடும். சில மாநில குழுக்கள் அதே நிகழ்ச்சிகளை எவ்வித மாற்றமும் இல்லாமல் தினம் மேடையேற்றினர், அந்த சமயத்திலெல்லாம் அனுவைப் பார்ப்பேன், அவள் அந்நிகழ்வுகளைப் பொருட்படுத்தாமல் அவளுக்கே உரிய பிரத்யேக பாணியில் புத்தகம் படித்துக்கொண்டிருப்பாள். இப்பொழுதும் என்றாவது அவள் நினைவு வந்தால், அவள் வெள்ளை சுடிதாரில் குறுக்கே கால் போட்டு இவ்வுலகை மறந்து படிப்பதும், ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் தலை முடியை லேசாய் கோதும் காட்சியுமே நினைவுக்கு வரும்.
புத்தகம் படிக்கும் பெண்களின் மீதான ஈர்ப்பின் ஆரம்பப்புள்ளி, அனு!!!

- பயணம் தொடரும் #GorakhpurStories


Sunday, June 25, 2023

அறுவை சிகிச்சை - 72 மணிநேரம்

 அறுவை சிகிச்சை முடிந்து

72 மணிநேரம் தாண்டியாகிவிட்டது. முதல் 24 மணி நேரமும் உணர்வுநீக்க (Anesthesia) மருந்தின் தாக்கத்தில் இருந்ததாலும் நரம்பு ஒன்றை மரத்துப்போக வைத்திருந்ததாலும் வலி அதிகமாகத் தெரியவில்லை, நீர்த்துப்போக ஆரம்பித்தவுடன் வலியை உணர ஆரம்பித்தேன். சில வாரங்களுக்கு முன் உடலியக்க மருத்துவர் என்னிடம் தானும் அதே அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும் முதல் 5 நாட்கள் வலி அதிகமாகத் தான் இருக்கும் என்று என்னைத் தயார்படுத்தினாள். நான்தான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். புரட்டி
விட்டது, நேற்றைக்கு இன்று சற்றேப் பரவாயில்லை. எதுவும் உண்ண முடியவில்லை, மயக்க மருந்து, தொண்டையில் சொருகி உருவிய குழாய்களால் ஏற்பட்ட எரிச்சல், வீரியம் மிகுந்த வலி நிவாரண மாத்திரைகள் ஏற்படுத்திய மலச்சிக்கல் இவையாவும் காரணம்.

எனக்காக பிரார்த்தித்த நண்பர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து தைரியம் சொல்லிய நட்புகளுக்கும், நான் அறுவைசிகிச்சைக்கு செல்ல சில நிமிடங்களுக்கு முன் எனக்கு கந்தசஷ்டி கவசத்தை அனுப்பி தைரியம் சொன்ன தோழமைக்கும், என்னை மருத்துவமனையில் இருந்து வீடு வரைக்கும் பத்திரமாய் அழைத்து வந்த நண்பன் குருவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குரு தெலுங்கன், 97 ம் வருடத்திலிருந்து நெருங்கிய நண்பன், இதை அவன் படிக்கப்போவதில்லை, நிறையவே எனக்காக அலைகிறான், அவனோ நானோ நன்றியெல்லாம் இதுவரை சொல்லிக்கொண்டதில்லை. இன்றும் நேரே சொல்லாமல், எனக்கு சௌகரியமான வழியிலேயே சொல்கிறேன்.
4 மணி நேரம் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை 6 மணி நேரமாக நீண்டது, கூடுதலாக ஒரு தசைநாரையும் சரிப்படுத்த அதிக நேரமானதாக மருத்துவர் கூறினார். உணர்வு நீக்க மருந்தின் தன்மை சற்றே மட்டுப்பட்டவுடன் விழிப்பு வந்தது, மனைவியும் குருவும் மருத்துவரிடமும் செவிலியர்களிடமும் பேசிக்கொண்டிருந்தனர். என்னிடம் சைக்கிள் ரேஸ் பற்றி ஏதோ பேசினார் மருத்துவர், இன்னும் முழுதாக என்ன பேசினோம் என்று நினைவில்லை, நானாக அப்புள்ளிகளை ஒன்று சேர்க்க முடியாவிட்டால் அடுத்த சந்திப்பின்போது அவரிடம் கேட்கவேண்டும். அடுத்த 2 மணி நேரத்தில் என்னை அழைத்துக்கொண்டு போக சொன்னார்கள். பாதி மயக்கத்திலேயே கிளம்பினேன். அமெரிக்க மருத்துவமனைகளில் உங்களை சீக்கிரம் வெளியே அனுப்பவே முயல்வர். நமக்கு உயிர், அவர்களுக்குத் தொழில். வீட்டிற்கு வரும் வழியில் அரை மயக்கத்தில் நிறைய உளறினேனாம், அடுத்து என்றாவது குருவுடன் ஒரு பியர் போத்தலுடன் அமர்கையில் அவன் என்னைக் கேலி செய்யக்கூடும் அல்லது அவன் தெலுங்கில் ஒரு சிறுகதை எழுதக்கூடும்.
வீட்டிற்கு வந்த பிறகு புரிந்தது, இவ்வளவு பலவீனமாய் என்றுமே உணர்ந்ததில்லை. மகள் தானாகவே சில சிறு வேலைகளை செய்கிறாள். என்னையே பார்த்துக்கொண்டு காலடியில் பபிள்ஸ் படுத்திருக்கிறான். 3 நாட்களாக ஒரு நிமிடம் கூட என்னை விட்டு அகலாத மனைவி, என்னைக் கைத்தாங்கலாக பாத்ரூம் அழைத்து செல்வதிலிருந்து, ஆடை அணிவித்து விடுவதுவரை எல்லாமே அவள்தான். தூக்கமே இல்லாமல் நான் வலியில் அரற்றுவதை கவலையோடுக் கேட்டுக்கொண்டிருப்பாள். பலவீனமான தருணத்தில் தான் நம் பலம் என்னவென்றே தெரிகிறது. என் பலம் என்னருகில் இருக்கும் சோபாவில் நான் இதை எழுதும் போது களைப்பாய் மெல்லிய குறட்டை ஒலியுடன் உறங்குபவள். இத்தருணத்தில் உணர்கிறேன், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று. வேறொரு நாள் காட்டில் நானும் என் செல்லப்பிராணியும் நடக்கும் போதோ, தனியாக கடற்கரையில் அமர்ந்திருக்கும்போதோ நான் வாய் விட்டு அழக்கூடும். வேறெப்படி நன்றி சொல்வேன் அவளுக்கு!!!

கோரக்பூர் கதைகள் – 2

எல்லோரும் ஒன்று கூடிய முதல் நாளில் அறிமுகப் படலம் முடிந்தபின், எடுத்த எடுப்பிலேயே ஒரு பெண் தன்னுடைய உடல்மொழியிலிருந்து பேசிய முதல் பேச்சிலிருந்து ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தினாள். யாருக்கெல்லாம் இந்தி தெரியும் என்றாள், ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை, தான் பிராத்மிக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாய் முகத்தில் அதீத பெருமையுடன் கூறினாள். முதல் வகுப்பிற்கும் எனக்கும் காத தூரம், அதுவரை இருப்பூர்திகளில் கூட முதல் வகுப்பில் பயணித்திராத காரணத்தால், அவளிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டேன். நேஷனல் நண்பனுக்கு மட்டுமே அவளுடன் ஒத்துப்போனது. அவளிடம் எது ஒன்று சொல்வது என்றாலும் அவன் மூலமாகவே பேசினோம். கலை நிகழ்ச்சிகளுக்குப் பயிற்சி எடுக்கும் போது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வருமாறு வடிவமைக்கக் கோரினாள். எடுத்த எடுப்பிலேயே தனக்கு லக்னோவில் ஒரு சித்தப்பா இருப்பதாகவும் இந்தப் பயணமே அவளுக்காக உருவாக்கப்பட்டது போல அதிகாரம் செலுத்தினாள் . என்னுடைய நிகழ்வுகளில் அவள் பங்களிப்பு இல்லாதவாரும் அப்படியே இருந்தாலும் அது நே நண்பனுடன் இருக்குமாறும் பார்த்துக்கொண்டேன். இதிலெல்லாம் எங்களை மேய்க்க வந்த ஆசிரியரின் பங்களிப்பு என்னவென்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை என்றே கூறுவேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் சப்பாரி உடை அணிந்து வருவார், இருப்பூர்தியில் பயணிக்கும்போது கூட!! அப்பொழுதெல்லாம் திருச்சியில் இருந்து கோரக்பூர் போய் சேரவே 3 நாட்கள் ஆகும். நாங்களெல்லாம் அழுக்காய் பயணிக்கும்போது அவர் மட்டும் மடிப்பு கலையாத சப்பாரியில் வலம் வருவார்.

கோரக்பூர் இருப்பூர்தி நிலயத்தில் எங்களை வரவேற்க தீன் தயாள் கல்லூரி பேராசிரியர்கள் இருவரும் சில ஒருங்கிணைப்பார்களும் சில மாணவர்களும் வந்திருந்தனர், அன்று வேறு சில மாநிலங்கலிருந்தும் மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 10 மாணவர்கள், 5 ஆண்கள், 5 பெண்கள், ராஜஸ்தானும், ஒரிசா (ஒடிசா) வும் விதிவிலக்கு, ராஜஸ்தானிலிருந்து 10ம் ஆண்களும், ஓடிசாவிலிருந்து 10ம் பெண்களுமாக வந்திருந்தனர். கல்லூரி வளாகத்திலேயே ஆண்கள் விடுதியும் பெண்கள் விடுதியும் இருந்தது. ஓர் அறைக்கு 5 பேர் தங்குமாறு வசதி செய்து தரப்பட்டிருந்தது. முதல் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு நிறைய பிற மாநில நட்புகள் உருவாக ஆரம்பித்திருந்தது. மொழியே தெரியாமல் நட்பு வளர்த்து அறை மாறியெல்லாம் சில நாட்கள் தங்கி இருந்தோம். ஒவ்வொரு நாளும் காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருந்தது, பகலில் எங்காவது சிறு குழுக்களாக சென்று சமூக சேவை செய்துவிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாநிலங்கள் வழங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகலில் சமூக சேவை செய்யும் குழுக்கள் மாநில வாரியாக இல்லாமல் எல்லா மாநிலங்கலிருந்தும் ஒன்றிரண்டு பேராக இருக்குமாறு சிறு குழுக்களாக அமைத்திருந்தனர். என் அதிர்ஷ்டம் நான் முதலில் இருந்த குழுவில் அந்த பிராத்மிக் பெண்ணும் இருந்தாள். நண்பன் “நே” யிடம் மாறிக்கொள்கிறானா என்று நான் கேட்கும்முன் மாறியே விட்டான். ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட வேண்டும், நமக்கு எந்தளவிற்கு கேரளப் பெண்களின் மீதீர்ப்புள்ளதோ அதைவிட அதிகமாகவே சேட்டன்களுக்குத் தமிழ்ப் பெண்களின் மீதீர்ப்புண்டு. அதில் ஒரு சேட்டனுக்கு பிராத்மிக் மீது ஈர்ப்பு, அவனும் விரும்பி அவளிருந்த குழுவில் போய் சேர்ந்துக்கொண்டான், அம்முக்கோனத்தைப் பிறிதொரு நாள் பார்ப்போம்.
நானிருந்தக் குழுவில் நான்கைந்து மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இருந்தனர், முக்கியமாய் ஓடிசாவிலிருந்து அனாசுயா, முதல் நாள் அறிமுகத்தின்போது தெரியாது, என் வாழ்வையும் ஏன் நான் வாழ்வைப் பார்க்கும் விதத்தையுமே இவள் மாற்றப்போகிறாளென!!!
- பயணம் தொடரும் #GorakhpurStories