Monday, September 9, 2013

தஞ்சை பிரகாஷ்

பயணக்களைப்பாலும், நேரமாற்ற அயர்வினாலும் (jet lag) மனைவியும், மகளும் பகலில் உறங்கியும், இரவில் முழித்தும் பொழுதை கழிக்கிறார்கள்.
நான் வாங்கி வரச் சொன்ன புத்தகங்கள் ஒரு சிலவற்றை வாங்கி வந்துள்ளாள். தஞ்சை பிரகாஷின் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். தஞ்சை பிரகாஷின் எழுத்து கூதுகலமான எழுத்துத்தான், ஆனாலும் தஞ்சையைப் பற்றி படிக்கும் போது, எந்தளவு ஊரை விட்டு விலகிவிட்டோம் என்கிற நெஞ்சழுத்தம் எழாமல் இல்லை. அதில், தெற்கு வீதியில் உள்ள கிந்தனார் ஸ்டுடியோ பற்றிய ஒரு குறிப்பு உள்ளது, அதைப் படித்தவுடன் என் பால்ய கால நினைவுகள் என்னை ஆக்கிரமித்து கொண்டன. நான், கிந்தனார் ஸ்டுடியோ உரிமையாளர் அவர்களை தாத்தா என்று உரிமையோடு அழைத்ததும், அந்த குறிகிய மாடிப்படிகளில் ஏறி அவர் வீட்டிற்கு சென்றதும், என் சிறு வயது புகைப்படங்களை அவர் எடுத்ததும், அவர் வீட்டில் விளையாடியதும் இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. நம் விருப்பம் இல்லாமலே கால ஓட்டம் ஒரு சிலரை அந்நியப்படுத்துகிறது, புது உறவுகளை அறிமுகப்படுத்துகிறது.

ரயிலடி ஆஞ்சேநேயர் கோயில், அதன் அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வரும் ரோஜா மணமும், கதம்பம் மணமும் தஞ்சாவூருக்கே உரித்தானது. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மேலவீதி, விடிகாலையில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும் ரயிலடி, இருசக்கர வாகனத்தில் ஞாயிறு காலை புன்னை நல்லூர் மாரியம்மனை தரிசிக்க செல்வது, இனி நான் அதில் ஒரு பகுதியாய் இல்லாமல் போனதை ஜீரணிப்பது கடினமாய் உள்ளது. தஞ்சாவூரை விட்டு அமெரிக்கா வந்து பதினாறு ஆண்டுகள் முடியப்போகிறது, இதில் மொத்தமாக இரண்டு மாதங்கள் தஞ்சையில் கழித்திருந்தால் பெரிது. திட்டப்படி போன மாதம் நானும் விடுமுறையில் ஊருக்கு போக வேண்டியது, sequestration-னால் பார்த்துக் கொண்டிருந்த உத்தியோகம் முடிவு பெறவும், வேறு உத்தியோகத்தில் சேரவும், புதிய வேலை, learning curve, vacation days, airfare, mortgage இத்யாதி லௌகீக காரணங்களால் சொந்த ஊர் அந்நியமாகி போனது. ஒன்றை இழந்து தான் மற்றொன்றை பெற முடியும் என்பது எவ்வளவு உண்மை.



-- புத்தகங்கள் வாங்கி குடுத்த ரேவதிக்கும், பிரசன்னாவிற்கும் அதை சுமந்து வந்த என் மனைவிக்கும் நன்றி.
-- jetlag-ற்க்கு தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தை வழங்கிய ராஜேஷ்க்கும், தன் புகைப்படத்தை உபயோகிக்க அனுமதி வழங்கிய கீதாவிற்கும் நன்றி.