அவள் என்னிடம் கொஞ்சம்
அதிக நட்பாகவும், அதிக அக்கறையுடனும்
பழகினாள். ஏன்டா இப்படி படிக்கவே மாட்டேங்குற, உனக்கு மட்டும்தான் இவ்வளவு அறியர்ஸ், இந்த செமஸ்டர் மட்டும்தான் உன் ரெகார்ட்
நோட்புக் நான் எழுதிதருவேன், சிகரட் பிடிக்காத,
தண்ணி அடிக்காத, ஏன்டா கிளாசுக்கு வர மாட்டேங்குற, இப்படிப் பஞ்சமில்லா அறிவுரை கரைபுரண்டோடியது. ஏன் லேட்,
சாப்டியா என்று வகுப்பிலிருக்கும்போது அவள்
சைகையால் கேட்கும்போது மூளைக்குள் ஜிவ்வென்று புது ரத்தம் பாய்ந்த சந்தோஷம். அந்த
அக்கறை ஒருவிதத்தில் இதமாகவும் இருந்தது.
அடுத்த நாள் கல்லூரியின்
ஆண்டு விழா. அதுவரை நலவிரும்பியாக மட்டுமே இருந்தவள், நாளை இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிவோமா, எனக்கேட்டு என் மனதில் காதலை விதைத்தாள். ஊதா
கலரென்று முடிவானது. அவசரமாய் திருச்சிக்குச் சென்று ஊதா கலர் சட்டை வாங்கிவந்து,
அன்றிரவு தூக்கம் தொலைத்து, அடுத்த நாள் காலை அவளை வரவேற்க, புதுச் சட்டை அணிந்து பேருந்து நிறுத்தத்திற்கு
சந்தோஷமும் பதற்றமும் ஒருசேர போய் நின்றேன். மெல்லிய ஊதா நிற புடவை அணிந்து,
ஊதாப் பொட்டணிந்து, என் இதயம் கரைய அவளின் ப்ரித்யேக புன்னகையுடன் பேருந்தின்
படிகளிலிருந்து இறங்கினாள். அவள் பின்னால் சேட்டும், பொ.பா யும் பேருந்திலிருந்து இறங்கினர், இருவரும் ஊதாவின் நிற ஒருமைகளில் சட்டை
அணிந்திருந்தனர், ஒருவன் அழுத்தமான ஊதாவும்,
மற்றொருவன் மங்கிய ஊதாவும்.
-- ssk
