அம்மா, உன் அஸ்தியை நீ அதிகம் ரசித்த நயாகராவில் கரைத்து விட்டு வீடு வந்த பிறகு இதை எழுத ஆரம்பிக்கிறேன். தஞ்சையில் காவிரியிலும், இராமேஸ்வரத்தில் இந்தியப் பெருங்கடலிலும், இங்கே என் வீட்டருகே ஓடும் போட்டமக் ஆற்றிலும், கடைசியாய் நயாகராவிலும், எரியூட்டப்பட்ட உன் சாம்பல் கரைந்ததம்மா. சில ஆண்டுகளுக்கு முன் 16 மணி நேரம் காரில் பயணித்து நாமிருவரும் நயாகரா சென்ற அதே பயணத்தை இம்முறை உன்னை ஒரு சிறு குப்பியில் அடைத்து எடுத்து சென்றேன் அம்மா. அப்பயணத்தில் நீ பேசியது எல்லாம் மீண்டும் மனதில் ஓடியது. இனி என் வாழ்வை நிரப்ப போவது நீ பேசிய சொற்கள் தான். அப்பயணத்தின்போது வழியில் உணவருந்த நிறுத்திய இடத்தில், நெடுஞ்சாலையின் மேலே நடைபாதையும், கீழே அதி வேகத்தில் வாகனங்கள் செல்வதையும் பார்த்து, ஒரு குழந்தைபோல் மகிழ்ந்தாய். அங்கே புகைப்படம் எடுக்க வேண்டுமென ஒருவரிடம் வேண்ட, அவர் அமெரிக்கர்களுக்கே உரிய நகைச்சுவையுடன், முதலில் என்னையும் உன் அம்மாவையும் ஒரு புகைப்படம் எடு நான் அப்புறம் எடுக்கிறேன் என்று உன் அருகில் நிற்க, நான் புகைப்படம் எடுத்தேன். நீ வெகுநாட்கள் அதைப்பற்றி மகிழ்வாய் பேசினாய். அப்புகைப்படம் எடுத்த இடம், நாம் உணவருந்திய உணவகம், நீ சந்தோஷமாய் ரசித்த இடங்கள் என நாம் பயணித்த அதே பாதையில் உன் நினைவுகளுடன் மூன்று நாட்கள் பயணித்தேனம்மா. உனக்கு நினைவுள்ளதா ஒருமுறை ஜனவரி மாதக் கடும் குளிரில் வெண்பனி நிரம்பிய நயாகராவை நீ அதிகம் ரசித்தாய்.
பிப்ரவரி 6, 2020, உன் கடைசி பயணத்தின் தொடக்க நாள். இவ்வுலகில் உன் கடைசி மூச்சு நின்றுவிட்டது எனும் தகவல் வந்தபோது நான் அலுவலகத்தில் இருந்தேன், அன்று காலை உன்னிடம் ஒரு நிமிடம் பேசியது மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. இந்த நாள் வரை அன்று நீ என்னை அய்யாடி எனக் கடைசியாக அழைத்தது, ஒரு நாளில் ஒரு முறையேனும் என் மனதில் வந்து போகும், அம்மா. பதற்றமும் தவிப்புமாய் உன்னை கடைசியாக சந்திக்கக் கிளம்பினேன். அப்புக்குட்டியும், துரையும், புவராஜனும் நான் வரும் வரை உன்னை பத்திரமாக ஐஸ் பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தனர். இதுவரை நீயும் நானும் சேமித்தது நல்ல நண்பர்களைத்தான்.
இவ்வுலகை நிராகரிக்க அனைத்துக் காரணங்கள் இருந்தும் கடைசி நாள் வரை அன்பை மட்டுமே எப்படி அம்மா உன்னால் தர முடிந்தது. வீட்டிற்கு வரும் பசு மாடு முதல் தெரு நாய் வரை நீ பன்மையில் அழைப்பாய், நான் ஒருமுறை அதுங்களுக்குத் தெரியவா போகிறது என்று கேட்டதற்கு, எல்லா ஜீவராசிகளுக்கும் மரியாதை புரியும் என்றாய், இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது தான் அம்மா அர்த்தம் புரிகிறது.
உன்னிடமிருந்து தான் வாசிக்கும் பழக்கம் எனக்கு வந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நீ உயிர்மை வாசித்துக் கொண்டிருந்தாய். சென்ற வருடம், இப்பொழுதெல்லாம் புத்தகம் படிக்கவே தோன்றவில்லை என்று நீ கூறியபொழுது, எனக்கு முதல் முறையாக உன்னை இழக்கப் போகிறேன் என்று தோன்ற ஆரம்பித்ததும்மா. உன் அலுவலகத்தில் நீ எனக்கு டேபில்டென்னிஸ் விளையாடக் கற்றுத்தந்தது இன்றும் என் நினைவில் இருக்குமா, உன் பேத்தி கூட நான் விளையாடுறப்போ அவளிடம் நான் அதை சொல்வேனம்மா. உன் வலிகள் எல்லாத்தையும் பொருத்துகிட்டு, என்னிடம் சாப்பிட்டியான்னு நீ கேட்காமல் இருந்ததே இல்லை. என்னுடைய எல்லாக் கஷ்டமும் நீ பிள்ளையாருக்கோ, ஆஞ்சனேயருக்கோ அர்ச்சனை செய்கிறேன் என்று சொல்வதிலேயே தீர்ந்துடும்மா. கனவுக்காண கற்றுத்தந்தது நீ, காசு முக்கியமில்லை மனுஷங்கதான் முக்கியம் என்று கற்றுத்தந்தது நீ, எப்படி வாழ வேண்டுமென உன் சாவிலும் கற்றுக்கொடுத்தாய், அம்மா. உன் மகனென்பதில்தான் எனக்கு எவ்வளவு பெருமை.


