“சில தசாப்தங்களில் எதுவுமே நடப்பதில்லை, சில வாரங்களில் பல தசாப்தங்கள் நடந்து விடுகிறது” – லெனின்
இம்முறை இந்தியா பயணித்ததில் பல இடங்களுக்குச் சென்றதும், பல மனிதர்களைச் சந்தித்ததும் நிகழ்ந்தது. அப்பயணத்தை 5 அல்லது 6 சிறு குறிப்புகளாய் பிரித்து எழுதலாம் என்றிருக்கிறேன். இப்பயணத்தில் அம்மாவிற்கு நெருக்கமான இடங்களையும் அவர் நேசித்த மனிதர்களையும் சந்திப்பதென்று முடிவெடுத்திருந்தேன், 90 சதவிகிதம்அதை நிறைவேற்றியும் விட்டேன். தஞ்சையிலும் சென்னையிலும் அவர் நண்பர்களையும், மதுரையில் உறவினர்களையும் சந்தித்தேன்.
முதலில் மதுரை-மேலூர் பயணத்தைப் பற்றி:
அம்மா பிறந்த ஊர். நண்பன் துரை வண்டியோட்ட 2.5 மணி நேரத்தில் தஞ்சையில் இருந்து மதுரைக்குச்சென்றுவிட்டோம், அருமையான சாலைகள், பசுமையான ரம்மியமான பயணம். அம்மாவின் ஒன்று விட்ட அக்கா, என் சுக்காம்பட்டி பெரியம்மாவின் வீடு; அம்மாவின் கடைசி நாட்களில் அம்மாவுடன் இருந்தவர்; என்னைப் பார்த்ததும், கட்டிக்கொண்டு, “சாமீ நல்லா இருக்கியா சாமீ, வேணி மயன் வந்திருக்கான்” என்று குரல் கொடுத்து விட்டு, “மருமவளும் பேத்தியும் நல்லா இருக்காங்களாயா”, என்றார். அதுவரை வீராப்பாக இருந்த நான் லேசாய் உடைந்தேன். வெள்ளந்தி மனிதர்கள் என்பார்களே, பெரியம்மா அதில் சேர்த்தி. அவரிடம் அம்மா பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்றேன், அவரின் மகன் "பார்த்துடலாம்ணே" என்று சொல்லிவிட்டு, அவ்வீடு எங்குள்ளதென்று விசாரித்துவிட்டு வந்தான். "காமாட்சியம்மன் கோயிலுக்கு பின்னாடி தான்ணே, தேடிப் பார்த்துடலாம்ணே", என்றான்.
காமாட்சியம்மன் கோயிலுக்கு முதலில் சென்றோம். என் பாட்டி “நாகசுந்தராம்பாள்” அக்கோயிலில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவளித்தவர். என் மாமாவின் மகனுக்கு “காமாட்சி சுந்தரம்” என்று அக்கோயிலின் மீதிருந்த அபிமானத்தால் பெயரிட்டார். அக்கோயிலைப் பற்றியும் காலாஸ்த்ரி குருக்கள் பற்றியும் நிறையக் கதைகள் என்னிடம் கூறியுள்ளார். அங்கிருந்த குருக்களிடம், பாட்டியின் பெயரையும் அம்மாவின் பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். சில வருடங்களுக்கு முன் காலாஸ்த்ரி குருக்கள் தவறியதையும், தான் அவரின் மகன் என்றும் கூறிவிட்டு, பாட்டியையும் அம்மாவைப் பற்றியும் சில நிமிடங்கள் நெகிழ்வாய்ப் பேசினார். பிறகு அங்கிருந்த காசி விஸ்வநாதர் மற்றும் பார்வதி சிலைகளைக் காண்பித்து, இவைகள் உன் பாட்டி வைத்தது தான் என்றார். அவர் அனுமதியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அம்மா இருந்தவரை, அக்கோயிலில் இருந்து தஞ்சைக்கு குங்குமமும் ப்ரசாதமும் வருவதுண்டு. அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு, கோயிலுக்கு ஒட்டினாற்போல் இருந்த சந்துகளில், அம்மா பிறந்த வீட்டைத் தேடி நடக்க ஆரம்பித்தோம்.
அம்மா நடந்து பள்ளிக்கு சென்ற தெருக்களில் 70 ஆண்டுகள் கழித்து அவர் பிறந்த வீட்டைத் தேடி நான் நடக்கிறேன். கால்களில் தெம்பே இல்லாதது போல் ஓர் உணர்வு. வீட்டைக் கண்டடைந்தோம்.
முதல் முறையாக அந்த வீட்டைப் பார்க்கிறேன். 1948, அம்மா பிறந்த வருடம், பிறந்த ஆறு மாதங்களில் தந்தையை இழக்கிறார், அதிலிருந்து அடுத்த 18 ஆண்டுகள் கடுமையான வறுமை. ஒருவேளை தான் உணவு, எந்த உறவினர் வீட்டிற்கும் செல்ல அனுமதிக்காத என் கண்டிப்பான பாட்டி, 18 வயதில் தஞ்சையில் “இந்திய உணவுக் கழகத்தில்” வேலை கிடைத்து, பாட்டியுடன் குடிபெயருகிறார்.
அப்பொழுதிருந்து தான் 3 வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. அந்தத் திண்ணையில் வெகு நேரம் அம்ர்ந்திருந்தேன். எத்தனைத் திங்கள் அம்மா பசியுடன் அத்திண்ணையில் அமர்ந்திருந்தாரோ!! என்னை ஒருவேளைக் கூட பசியால் வாடவிட்டதில்லை அவர். அம்மாவின் கடைசிக் காலக்கட்டங்களில் மருத்துவமனையில் இருந்தபோது கூட நான் தொலைபேசியில் பேசும்போது, “நீ சாப்பிட்டாயா அய்யாடி” என்று அவர் கேட்கத் தவறியதே இல்லை. அம்மாவை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் கடைசி வரை பணத்திற்கு மதிப்பளிக்கவே இல்லை என்பது. இள வயதில் பணமில்லை, பிறகு அதன் மீது எந்த நாட்டமும் இல்லாமல் போனது அவருக்கு.
தஞ்சை வந்த பிறகு, மேலூருக்குப் பாட்டி அடிக்கடி பயணிப்பார், ஆனால் அம்மா விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அதன்பிறகு மேலூர் சென்றார். ஊரைப் பற்றிப் பேசும்போது வாஞ்சையாகத்தான் எப்போதும் பேசுவார், அதிகம் போவதற்கு வாய்ப்பமையவில்லை என்றே எண்ணுகிறேன்.
என் காலத்திற்குப் பிறகு அந்த ஊருடனும் மனிதர்களுடனுமான தொடர்பு விட்டுப் போய்விடுமென்பதே எதார்த்தம், அதை ஏற்றுக்கொள்ளத்தான் மனம் மறுக்கிறது.



