என் தாய்வழிப்பாட்டி நாகு எனும் நாகசுந்தராம்பாள் பிறந்தது இளையான்குடியில், வாக்கப்பட்டது மதுரையில் தன் வாழ்வின் கடைசி நாற்பது வருடங்களைக் கழித்தது தஞ்சையில். இம்மூன்று பகுதிகளின் வசவு வார்த்தைகளும் சரளமாக பாட்டியிடம் புழங்கும். பாட்டி தன்னை மதுரை மேலூருடன் தான் அதிகம் அடையாளப்படுத்திக்கொண்டார். இத்தனைக்கும் அங்கு வாழ்ந்த காலக்கட்டத்தில்தான் வறுமையால் தாளமுடியாத துன்பங்களை அனுபவித்தார். அவ்வூரில் முறுக்கு சுட்டு விற்றுத்தான் என் அம்மாவையும் மாமாவையும் வளர்த்தார். என்னை சிலநேரம் எள்ளலாக எலே தஞ்சாவூரான் என்பார். பழமொழிகளை அவர் போக்குக்கு மாற்றிக் கூறுவார், “கழுதை அறியுமோ கற்பூர வாசனை” எனும் சிறிய பழமொழியை நீட்டி முழக்கி, “கரும்பை உடைத்து கழுதையை அடித்தால் கழுதை அறியுமோ கரும்பின் ருஷி” என்பார். கவனிக்க அது ருஷி, ருசியல்ல. தீபாவளிக்குப் பாட்டி சுடும் முறுக்கு மிகவும் பிரபலம் ஆனால் இனிப்பு வகைகள் பாட்டிக்கு எப்போதும் சவாலாகவே இருந்தது. ஒரு தீபாவளி அன்று மைசூர்பாகை குவளையில் ஊற்றிக் குடித்த நினைவுண்டு.
தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்து அரைக்கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொப்புள்பிள்ளையார் கோவில் தெருவில் தான் நான் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் சென்று விடுவர். என்னை வளர்த்தது என் பாட்டி தான். தினம் காலை என்னை பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்று விடுவார். தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் அமர்ந்து எனக்கு பாண்டிய மன்னர்களைப் பற்றியும் அழகர் ஆற்றில் இறங்குவதையும் மதுரையின் சிறப்புகளையும் கதைகளாகக் கூறுவார். என் கோவிலில் பாண்டியனின் பெருமையா என்று மும்முடிச்சோழன் உடையாளூரில் புரண்டிருப்பான்.
பாட்டிக்கு நிறைய திறமைகள் இருந்தது. பழைய செய்திதாள்களை அரைத்து பாத்திரங்களின் மீது ஒட்டி காய வைத்து பூக்கூடைகள் செய்வார். இப்போதும் வெயில் காலங்களில் என் நினைவில் வந்து போவது செய்திதாள்கள் ஒட்டப்பட்ட பாத்திரங்கள் வெயிலில் காயும் காட்சிதான். கிட்டத்தட்ட வீட்டிலிருந்த அனைத்துப் பாத்திரங்களின் வடிவிலும் ஒரு பூக்கூடை இருந்தது, பூக்களை விட பூக்கூடைகள் அதிகம் இருந்தது எங்கள் வீட்டிலாகத்தான் இருக்கும். பழைய போர்வைகளையெல்லாம் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி தனக்கான மெத்தையை அவரே தயாரிப்பார். மறுசுழற்சி நாகரிகம் ஆவதற்கு முன்பே அதைக் கடுமையாய்க் கடைப்பிடித்தவர்.
மார்கழி மாதம் கோலம் போடுவதற்கான வண்ணப்பொடிகளை அவரே தயாரிப்பார். வடிகட்டிய காப்பித்தூளை குப்பையில் போடுவதற்குப் பதிலாக அதைக் காய வைத்து கோலத்தில் வண்ணம் சேர்க்க பயன்படுத்துவார். பாட்டிக்கு யானைகள் மீது ஒரு அலாதியான ஈர்ப்பு உண்டு, அவர் எனக்கு சொன்ன கதைகளில் எப்போதும் யானைகளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். அவர் போடும் கோலங்களில் கூட நிறைய முறை யானைகளைத் தான் வரைந்துள்ளார். இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் கொடியில் உள்ள படத்திற்காகவே விசய்க்கு வோட்டுப் போட்டிருப்பார். புள்ளி வைத்த கோலமெல்லாம் அழகாக இடும் பாட்டிக்கு யானை மயிலெல்லாம் வரையும் போது சற்று சறுக்கி விடும். ஒன்று யானை இளைத்து இருக்கும் அல்லது தொந்தி வீங்கிப்போயிருக்கும். அடுத்து யானைக்கு வண்ணம் என்று அவர் எப்போதும் தேர்ந்தெடுப்பது அவர் காய்ந்து உலர்த்திய காப்பித்தூளைத் தான். என் கனவுகளில் கூட யானை பழுப்பு நிறமாகவே வரும், நேரில் ஒரு கரிய யானையைப் பார்த்தால் காட்சிப் பிழையாகவேத் தோன்றும்.
“பாட்டி இன்னைக்குக் கோலத்துல ஒரு மிருகம் வரைஞ்சிருக்கியே அது என்ன?”
“ஆனைடா கூறுகெட்டவனே”
“அதுமேல யாரு பாகனா”
“டேய் உபதேசம் வாங்குனவங்ககிட்ட இப்படி கூறுகெட்டத்தனமா பேசக்கூடாது. அது அழகர்டா ஆத்துல இறங்கப் போறார்”
“குதுரையிலல்ல போவார்ன்னு சொன்ன”
பலமுறை நான் கேட்ட அழகர் கதையை மீண்டும் சொல்ல ஆரம்பிக்கிறார்.
பாட்டிக்கு என்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தது அல்லது ஒரு கதையின் பல வடிவங்கள் இருந்தது நான் தான் அவசரப்பட்டு வளர்ந்து விலகிவிட்டேன்.