அவளிடம் என்ன சொல்வது? (2)
‘Happy Hour’ என்பது சில பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் மாலை வேளையில் பீர் மற்றும் உணவு வகைகளை, ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும் தள்ளுபடியில் விற்பனை . செய்யும் நேரம். கூட்டம் அதிகமாக இருக்கும், உற்சாகமும் அதிகமாய் இருக்கும். அலுவலகத்தில் இருந்து சக தோழர்களுடன், வாரத்தில் ஒரு நாள் இதற்க்கு செல்வது என்னுடைய வழக்கம். அங்கே அலுவலக வேலையை பற்றி எதுவும் பேச கூடாதென்பது எங்களின் எழுதப்படாத சட்டம். வழக்கமாய் பேச்சு எல்லோருடைய பொழுதுபோக்கைப் பற்றியதாய் இருக்கும் அல்லது அரசியல், சினிமா என்று சுவாரசியமாக செல்லும். பீர், மீண்டும் பழைய விலைக்கே திரும்பியதும் தான் நேரம் போனது தெரியும்.
சென்ற வாரம் வியாழக்கிழமை மாலை, மைக், என்னுடைய அலுவலக நண்பன், ‘Happy Hour போக டைம் ஆயிடுச்சு, இன்னும் ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கே’ என்றான்.
அலுவலகத்தில் வேலை இருந்ததால், ‘நீ போ, இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்து சேர்ந்து கொள்கிறேன்’ என்றேன். தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டிவிட்டு சென்றான்.
ஒரு மணி நேரம் கழித்து பாருக்கு சென்றேன். அனைவரும் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் பொதுவாக எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, எப்பொழுதும் விரும்பி பருகும் Heineken பீரை, கடன் அட்டையை செலுத்தி வாங்கினேன். இம்போர்ட்டட் பீர் என்பதால், Heineken தள்ளுபடியில் விற்பதில்லை, என்று கூறிய பார் அலுவலரிடம்,
“தெரியும் சார், நான் கூட இதற்க்கு உண்ணாவிரதம் இருந்து போராடலாம் என்று இருக்கிறேன்” என்றேன், லேசாக புன்னகைத்தார்.
ஒரு வழியாக, மற்ற நண்பர்கள் ஆக்கிரமித்திருந்த மேஜைக்கு வந்தேன், நான்கு இருக்கைகள் தள்ளி, அவள் அமர்ந்திருந்தாள், பேரழகி. கையசைத்து ஹலோ சொன்னேன். புன்னகைத்தாள், ‘ஏன் லேட்’ என்றாள். வேலை அதிகம் என்றேன். உதடு குவித்து ‘சாரி’ என்றாள், ‘Don’t be, இன்னும் சில மாதங்களில் நீயும் அதிக வேலை செய்வதற்கு தள்ளப்படுவாய்’ என்றேன். சிரித்தாள். அவள் எதிரில் காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
மற்றொரு நண்பன் வந்தான், இவன் இந்திய வம்சாவழி, ஆனால் அமெரிக்காவில் பிறந்தவன். நாங்கள் இருவரும் ஒருவரை மற்றொருவர், தேசி* என்றே அழைத்துக் கொள்வோம். வந்தவுடன், ‘Wassup Desi’ என்று கூறிக்கொண்டே, பேரழிகியின் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் பேரழிகியிடம், என்ன குடிக்கிறாய் என்றான், அவள் ‘Cosmopolitan’ என்றாள். நானும் இந்த நண்பனும் ஒரு வருடத்திற்கு முன் ‘பார் டெண்டிங்’ வகுப்புக்கு ஒன்றாக சென்றிருந்தோம், அதனால் சில காக்டெயில்கள் பற்றி அறிந்து வைத்திருந்தோம். அவளுக்கு பிடித்தது ‘Mojito’, ‘Mudslide’ மற்றும் ‘Cosmopolitan’ என்றாள். இதில், ‘Cosmopolitan’ , செக்ஸ் அண்ட் தி சிட்டி, தொலைக்காட்சி தொடர் பார்த்த பாதிப்பால் பிடிக்க ஆரம்பித்ததாய் கூறினாள். காக்டெயில்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கவனித்தேன், அவள் வலது கையில் பச்சைக் குத்தி இருந்தாள், அழகான சிவப்பு நிற இதயமும், ஒரு சிவப்பு ரோஜா பூவும், அதை சுற்றி ஓடும் ரிப்பனும், அந்த ரிப்பனில் ‘David’ என்ற பெயரும் இருந்தது.
நண்பன், அவளிடம் தனக்கு எந்த காக்டெயில் எல்லாம் நன்றாக மிக்ஸ் செய்ய தெரியும் என்று பட்டியலிட்டான். அவளும் அந்த பட்டியலில் அவளுக்குப் பிடித்த காக்டெயில்கள் பற்றிக் கூறினாள். பேசிக்கொண்டிருக்கும் போதே நண்பன் திடீரென்று தன்னுடைய கடிகாரத்தை பார்த்தபடி அவளிடம் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும், என்னுடைய நாயை கூண்டிலிருந்து விடுவித்து, வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினான். எனக்கு தெரிந்து அவனிடம் நாய் எல்லாம் கிடையாது, பிறகு தான் புரிந்தது, தனக்கு பொறுப்புணர்வு இருப்பதாக அவளிடம் காட்டிக்கொள்ள கதை சொல்கிறான் என்று. அநேகமாக அவளுடைய டாட்டுவை அவன் பார்க்கவில்லை போலும், என்று நினைத்துக் கொண்டேன்.
![]() |
பேச்சு திசை மாறியது. அவளிடம், எந்த டாட்டு பார்லரில் பச்சைக் குத்திக் கொண்டாள் என்றேன், ரிச்மண்டில், ஜிம்மி ஸ்மித் என்னும் புகழ் பெற்ற டாட்டு ஆர்டிஸ்ட்டிடம் என்றாள். அவனிடம் மூன்று மாதத்திற்கு முன்னையே சந்திப்பதற்கு நேரம் வாங்க வேண்டும் என்றாள். நானும் கூட பச்சைக் குத்திக்கொள்ளப் போவதாக அவளிடம் சொன்னேன், அப்படியா என்ன குத்திக் கொள்வது என்று முடிவு பண்ணி விட்டாயா என்றாள், இன்னும் இல்லை என்றேன். இன்டர்நெட்டில் தேடிப் பார் நிறைய ஐடியா கிடைக்கும் என்றாள். ஒப்புதலாய் தலை ஆட்டினேன். அவள், தான் திரும்பவும் ஜிம்மி ஸ்மித்தை பார்க்கப் போவதாய் கூறினாள். ஏன், இன்னுமொரு டாட்டு போட்டு கொள்ள போகிறாயா என்றேன். இல்லை, நானும் டேவிட்டும் இப்போது பிரிந்து விட்டோம், என்னுடைய டாட்டுவிலிருந்து அவன் பெயரை லேசெர் செய்து அழிக்கவோ அல்லது அதன் மீது வேறு டிசைன் செய்து அதை மறைக்கவோ போகிறேன், என்றாள்.
--- தொடருமா, தெரியவில்லை.
* http://en.wikipedia.org/wiki/Desi
