Monday, November 26, 2012

அவளிடம் என்ன சொல்வது?


சில வாரங்களுக்கு முன், என் மகளுக்கு காது குத்தினோம். இங்கே அமெரிக்காவில், குழந்தை நல மருத்துவர்களே குழந்தைகளுக்கு காது குத்துவர். அதிக அலட்டல் இல்லாமல் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக மட்டுமே அழுதாள். திடீரென்று தோன்றிய யோசனையில், எனக்கும் காது குத்த முடியுமா என்று அந்த மருத்துவரிடம் கேட்டேன். முடியாது, இங்கு குழந்தைகளுக்கு மட்டுமே காது குத்துவோம் என்று கூறினார். மகளுக்கு காது குத்திய அதே தினத்தில், நானும் காது குத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ள, அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று நானும் காது குத்திக் கொண்டேன்.
நான்கு அல்லது ஐந்து மாடல் தோடுகள் மட்டுமே ஆண்களுக்கு இருந்தது, அதில் ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து, குத்திக் கொண்டேன். அடுத்த நாள் அலுவலகத்துக்கு செல்லும் போது ஒரு சிறு பதட்டம் தொற்றிக்கொண்டது. யாராவது இதைப்பற்றிக் கேட்டால் கூறுவதற்கு தயாராக மனதிற்குள் ஒரு காரணத்தை உருவாக்கி வைத்திருந்தேன். யாரும் இதைப்பற்றி ஒரு பொருட்டாக கருதவே இல்லை.
இரு வாரம் சென்றிருக்கும், நான் அதிகமாய் ஹாய்,  ஹலோ மட்டுமே சொல்லிய, சில மாதங்களுக்கு முன் எங்கள் கம்பனியில் சேர்ந்த, அழகிய இளம் பெண் (ஆம், இவள் பேரழகி) என்னிடம் ‘ஐ லவ் யுவர் ஸ்டட் இயர்ரிங்க்ஸ்' என்று சொன்னாள். யோசித்து வைத்திருந்த காரணமெல்லாம் மறந்துவிட்டது, லேசான தடுமாற்றத்தோடு, தேங்க்ஸ் சொன்னேன். சிரித்தேனா என்று கூட நியாபகம் இல்லை. அடுத்த முறை அவளை சந்திக்கும் போது அவளை பாராட்டி எதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. உன் காதணிகள் கூட அழகாய் இருக்கிறதென்று சொல்வது, அவ்வளவு பொருத்தமாய் படவில்லை. நானும் யோசித்துப் பார்க்கிறேன், என்ன சொல்வதென்று தான் புரியவில்லை.

தொடரும் போட ஆசை தான் ...

No comments:

Post a Comment