இது வரைக்கும் பிறந்த நாள் அன்னைக்கு, நைட் 12 மணிக்கு, நான் தூக்க கலக்கத்துல இருக்கிறப்போ, மனைவி என்னை கேக் வெட்டச் சொல்வாள், அக்கம் பக்கத்து நண்பர்களை அழைத்து பிறந்த நாள் வாழ்த்துப் பாடச் சொல்வாள், அவர்களும் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு வந்து வாழ்த்தி விட்டு செல்வர். இந்த வருஷம் மைல்ஸ்டோன்(40) பிறந்த நாள் என்பதால், என் நண்பர்கள் கொண்டாடியதுப் போல, கொண்டாட வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.
நிறைய நண்பர்கள் நாற்பது வயதை சமீப காலங்களில் எட்டினர். அதை அவர்கள் விதவிதமாக கொண்டாடினர். ஒரு நண்பனுக்கு அவன் மனைவி மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்தாள், இன்னொரு நண்பனுக்கு அவன் மனைவி அவன் விருப்பப்பட்ட கார் வாங்க அனுமதி(!) அளித்தாள், இன்னொரு நண்பனை அவன் மனைவி ஒரு தீவிற்கு கோல்ப் விளையாட நண்பர்களுடன் அனுப்பி வைத்தாள், மற்றுமொரு நண்பனின் மனைவி அவனை பஹாமாஸ்க்கு படகில் உல்லாசப் பயணம் அழைத்துச் சென்றாள், இது எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு நண்பனுக்கு அவன் மனைவி பிறந்த நாள் பார்ட்டி குடுத்து, அந்த பார்ட்டிக்கு ஒரு பெல்லி டான்சரை வரவழைத்து அசத்தினாள்.
எம் மனைவியிடம் முடிந்தபோது பேஸ்புக் புகைப்படங்களை காண்பித்து, இங்கே பார், இந்த மோட்டார் சைக்கிள் தான் என் நண்பனுக்கு அவன் மனைவி வாங்கித் தந்துள்ளாள், இங்கே பார் அவர்களின் உல்லாசப் பயணத்தின் புகைப்படங்கள் என்றெல்லாம் “அடுத்தாத்து அம்புஜம்” கதைப்போல எடுத்துக் கூறி தயார் செய்து வைத்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன், அவள் என் பிறந்த நாள் பற்றி யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள், சரி அவளாக சொல்வாள் என்று பார்த்தேன், சொல்லவில்லை, ஆர்வம் மேலிட அடுத்த நாள் நானே கேட்டேன், யாரிடமோ என்னுடைய பிறந்த நாள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாயே, என்னை ஆச்சரியப்பட வைக்கப்போகிறாய் என்பது தெரிகிறது, என்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை என்ன அது என்றேன். இதிலென்ன சஸ்பென்ஸ் வேண்டி இருக்கு, உன்னுடைய பிறந்த நாளன்று உனக்கு "ஆயுஷ் ஹோமம்" செய்வதற்காக முருகன் கோவில் நிர்வாகத்திடம் பேசினேன், என்றாள்.