Saturday, March 29, 2014

கரும்புனல் - நாவல் விமர்சனம்.



இதை எழுத ஆரம்பிக்கும்போது சனிக்கிழமை காலை மணி 4.  இரண்டு மணி நேரம் முன்பு "கரும்புனல்" நாவலைப் படித்து முடித்து, அந்த பாதிப்பில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் மீள முடியாமல், தூக்கம் வராமல் இதை எழுதுகிறேன்.

விறுவிறுப்பான நடை, வலியை கொண்டாட்டமாக எழுதியுள்ளார் ராம்சுரேஷ், கடைசி சில அத்தியாயங்கள் வரை அந்தக் கொண்டாட்டம் நீடிக்கிறது. பீகாரின்(இப்போதைய ஜார்கண்ட்) நிலக்கரி சுரங்கமும் அதைச் சுற்றி உள்ள பிரச்சனைகளும் தான் கதைக் களம். ஒரு இளம் வக்கீலின் வாழ்வில்(மூன்று மாதங்களில்) நடக்கும் சம்பவங்களின் வாயிலாக வடகிழக்கு இந்தியாவின் சாதிய சமூகப் பார்வையை நமக்குப் புரிய வைக்கிறார்.

இதுவரை யாரும் பயணிக்காத புதியக் களம். சில அத்தியாயங்களில் சேட்டன் பகத்-தின் நாவலைப்போல வரிக்கு வரி மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. இதில் விவாதிக்க நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளது. சம்பல் கொள்ளையர்கள், மாவோயிஸ்ட்டுகளின் வாழ்க்கை, அதன் காரணங்கள், அவர்களின் வலி, நிலம் கையகப்படுத்துதல், சாதிய வன்முறை, சதித்திட்டங்கள், பழிவாங்குதல், ஊழல், நிலக்கரி சுரங்கம் சார்ந்த அறிவியல் எனப் பட்டியல் நீள்கிறது. காதலும் உண்டு (தமிழ் பேசும் வடக்கத்திப் பெண் – கோயம்பத்தூரில் படித்தவள், எந்தக் கல்லூரி தெரியவில்லை, விவசாயக் கல்லூரியாக இருக்கலாம்!!), காதலுடன் சேர்ந்த வலியும் உண்டு. கூடங்குளம் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் கூட இதில் செய்தி உண்டு.

ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றியே நம்மையும் அவருடன் சேர்த்து 90-களில் பீகாரில் பயணிக்க வைத்தது தான். கடைசி அத்தியாயங்களில் கதை நாயகனின் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இது உண்மைக் கதை என்பது பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. சிலரின் வாழ்வில் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஊழல் எந்த அளவிற்கு ஒரு அங்கமாக உள்ளது என்பது நம் நாட்டின் சோகம்.

திரைப்படமாக வருவதற்க்கான தகுதி படைத்த நாவல்..

நாவலைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் – Crisp.



Sunday, March 23, 2014

ஒரு நண்பனின் சிறை அனுபவம்

போன  கிறிஸ்துமஸ்க்கு சில நாட்களுக்கு முன்,  ராக்கெட்பால் விளையாட வருகிறாயா என்று கேட்டு என் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்,, பதில் இல்லை. வழக்கமாக உடனடியாக பதில் அனுப்பக்கூடிய நண்பன் அவன். .
மூன்று நாட்கள் கழித்து தொலைபேசியவனிடம், ஏன் மூன்று நாட்களாக எந்த பதிலும் இல்லை என்றேன். 
‘I was in Jail’ என திடுக்கிட வைத்தவனிடம், Was that a joke’ என்றேன். இல்லை நிஜம்தான், இந்த ஞாயிறு விளையாடிவிட்டு பீர் குடித்துக் கொண்டே அதை பற்றிப் பேசலாம் என்றான். சுவாரசியம் கூடிவிட்டது, ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்தேன்.

ஞாயிற்றுக் கிழமை இரண்டு மணி நேரம் விளையாடிவிட்டு, வழக்கமாக நாங்கள் செல்லும் “Buffalo Wild Wings” பாரில் அவன் Guiness-ம் நான் IPA-வும் வாங்கினோம். முன்னெல்லாம்  நான் Heineken வாங்கும்போது “இதற்க்குப் பதில் பச்சைத் தண்ணியை குடிக்கலாம்” என்பான்,  நான் IPA-க்கு மாறியப் பிறகு அந்தக் கிண்டல் நின்றுவிட்டது.
நீ ஜெயிலுக்கு போனேன் என்று சொன்னாயே? – நான்.
ஆமாம், எல்லாம் தலை எழுத்து என்று நெற்றியில் செய்கையில் எழுதினான். என் வீட்டில், திருடர்கள் நுழையாமல் இருப்பதற்கு, சத்தம் எழுப்பும் அலாரம் பொருத்தி உள்ளோம். யாராவது கதவையோ ஜன்னலையோ  பலவந்தமாக திறந்தாலோ அல்லது அலாரம் செயல்நிலையில் இருக்கும்போது வீட்டில்  நடமாட்டம் இருந்தாலோ அது சத்தம் எழுப்பி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் பரிமாறிவிடும்.
என் மனைவி ஒரு பூனை வளர்க்கிறாள், நாங்கள் யாரும் வீட்டில் இல்லாத அன்று, ஜன்னலை இடித்தோ, பிரான்டியோ என்னமோ செய்துள்ளது, அலாரம் சத்தம் எழுப்பி அருகில் இருந்த காவல்நிலையத்துக்கு தகவல் அனுப்பிவிட்டது, அங்கிருந்து சில போலீஸ்காரர்கள் என் வீட்டிற்க்கு வந்துள்ளனர். (அந்தப் பூனையை கெட்ட வார்த்தையில் திட்டுகிறான்). எனக்கும் தகவல் வந்தது, நான் வீட்டிற்க்கு வருவதற்குள் போலீசார் வந்திருந்தனர்.
சரி அதற்கும் உன்னைக் கைது செய்ததற்கும் என்ன சம்பந்தம்?
வீட்டிற்க்கு வந்த போலீசார் வீட்டைச் சுற்றிலும் நோட்டம் விட்டு, பிறகு பின்பக்கம் உள்ள கதவை அதிக சிரமமில்லாமல் உடைத்து உள்ளே வந்துள்ளனர். அதெப்படி, தேடும் அதிகாரப் பத்திரம்(search warrant) இல்லாமல் உள்ளே வர முடியுமா? என்றேன். முடியுமாம், இது “Probable Cause”ல் சேருமாம். (காவல் துறையினரை கெட்ட வார்த்தையில் திட்டுகிறான்). அப்படி வீட்டிற்க்குள் வந்தவர்கள் என்னுடைய பேஸ்மென்ட்க்கு (வீட்டின் முதல் தளத்திற்கு கீழே உள்ள அறைகள்) சென்றுள்ளனர். அங்கே நான் புகைப்பதற்கு வைத்திருந்த marijuana(கஞ்சா) கண்ணுக்குத் தெரிவது போல் இருந்ததாகவும், அதனால் எனக்கு சம்மன் கொடுப்பதாகவும் கூறினர். (மீண்டும் காவல் துறையினரை கெட்ட வார்த்தையில் திட்டுகிறான்).
அடுத்த நாள் ஒரு வக்கீலைப் பார்த்துப் பேசினேன், அவன் District Attorney-யிடம் பேசி, வெள்ளி மதியம் சிறைக்கு சென்றுவிட்டு, திங்கள் காலை வெளியே வருவதற்கு ஏற்பாடு செய்தான். நிறையக் காசுப் பிடுங்கிவிட்டான். (வக்கீல்களை கெட்ட வார்த்தையில் திட்டுகிறான்).
ஜெயில் கடுமையாக இருந்ததா?
இல்லை, வெள்ளி மதியம் கோர்ட்டில் இருந்து ஜெயிலுக்கு கூட்டி சென்றார்கள். நான் இடைமறித்து, எல்லாக் குற்றவாளிகளையும் கூண்டு போன்ற பஸ்சில் ஏற்றிக் கூட்டி சென்றார்களா? அவன் என்னை முறைத்துவிட்டு, கோர்ட்க்கு அடுத்த கட்டிடம் தான் ஜெயில், எல்லோரையும் நடத்தி தான் கூட்டி சென்றார்கள், என்றான்.
ஆமாம், உன்னுடைய 5 வயது மகனிடம், நீ எங்கே சென்றுள்ளதாக உன் மனைவி கூறினாள்?
அப்பா, santa-வுக்கு உதவிப் புரிய North Pole-க்கு சென்றுள்ளதாக கூறியுள்ளாள். இருவரும் சிரித்தோம்.
சரி, உன் ஜெயில் கதையை சொல்லு? என்றேன்.
உள்ளே சென்றவுடன் strip search செய்தான் ஒருவன்.
ஓ! உனக்கு ரொம்ப அவமானமாக இருந்ததா?
இல்லை, அது ஒரு நிமிடத்தில் முடிந்து விட்டது, ஆனால் அவன் என்ன நினைத்தானோ என்று எண்ணி கொஞ்சம் சங்கடமாக இருந்தது, எனக்கூறி சிரித்தான். அப்புறம் ஆரஞ்சு கலர் உடை குடுத்து, முதலில் ஒரு பெரிய அறையில் பத்துப் பேருடன் அமர வைத்தனர். அப்புறம் அன்றிரவு இரண்டு பேருக்கு ஒரு அறை என்று ஒதுக்கினார்கள்.
மூன்று போன் கால் செய்யலாம் என்றார்கள், நான் முதல் நாள் இரவு மூன்று முறை என் மனைவியிடம் பேசினேன். அடுத்த நாள் போன் கேட்டேன், உன்னுடைய சலுகை முடிந்துவிட்டது என்றார்கள். நான், தினம் மூன்று போன் கால் பண்ண முடியாதா என்றுக் கேட்டேன், இல்லை மூன்று நாட்களுக்கும் சேர்த்து அவ்வளவு தான் என்றார்கள். திங்கள் காலை வரை நன்றாகத் தூங்கி எழுந்தேன், என்றான்.
உன்னுடைய அறையில் இருந்த மற்றொருவனும் marijuana கேஸா என்றதற்கு, தெரியவில்லை, கேட்கவில்லை, என்றான்.
இதற்குப் பிறகு  நீ marijuana புகைக்க மாட்டாய் அட்லீஸ்ட்  வீட்டிலாவது புகைக்க மாட்டாய் என்று நினைக்கிறேன்?
மறுப்பாய் தலையை ஆட்டி, வேறொரு அலாரம் மாற்றிவிட்டேன், முதலில் பூனையை யாருக்காவது விற்று விடலாம் என்று தான் நினைத்தேன், என் மனைவி என்னைக் கொன்றுவிடுவாள் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன், எனக்கூறி சத்தமாய் சிரித்தான்.
இரண்டாவது பீர் வரவழைத்தோம். கோப்பையை உயர்த்தி இருவரும் “கொன்பே” என்றோம். கொரிய மொழியில் “cheers“ என்று அர்த்தம்.