Saturday, March 29, 2014

கரும்புனல் - நாவல் விமர்சனம்.



இதை எழுத ஆரம்பிக்கும்போது சனிக்கிழமை காலை மணி 4.  இரண்டு மணி நேரம் முன்பு "கரும்புனல்" நாவலைப் படித்து முடித்து, அந்த பாதிப்பில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் மீள முடியாமல், தூக்கம் வராமல் இதை எழுதுகிறேன்.

விறுவிறுப்பான நடை, வலியை கொண்டாட்டமாக எழுதியுள்ளார் ராம்சுரேஷ், கடைசி சில அத்தியாயங்கள் வரை அந்தக் கொண்டாட்டம் நீடிக்கிறது. பீகாரின்(இப்போதைய ஜார்கண்ட்) நிலக்கரி சுரங்கமும் அதைச் சுற்றி உள்ள பிரச்சனைகளும் தான் கதைக் களம். ஒரு இளம் வக்கீலின் வாழ்வில்(மூன்று மாதங்களில்) நடக்கும் சம்பவங்களின் வாயிலாக வடகிழக்கு இந்தியாவின் சாதிய சமூகப் பார்வையை நமக்குப் புரிய வைக்கிறார்.

இதுவரை யாரும் பயணிக்காத புதியக் களம். சில அத்தியாயங்களில் சேட்டன் பகத்-தின் நாவலைப்போல வரிக்கு வரி மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. இதில் விவாதிக்க நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளது. சம்பல் கொள்ளையர்கள், மாவோயிஸ்ட்டுகளின் வாழ்க்கை, அதன் காரணங்கள், அவர்களின் வலி, நிலம் கையகப்படுத்துதல், சாதிய வன்முறை, சதித்திட்டங்கள், பழிவாங்குதல், ஊழல், நிலக்கரி சுரங்கம் சார்ந்த அறிவியல் எனப் பட்டியல் நீள்கிறது. காதலும் உண்டு (தமிழ் பேசும் வடக்கத்திப் பெண் – கோயம்பத்தூரில் படித்தவள், எந்தக் கல்லூரி தெரியவில்லை, விவசாயக் கல்லூரியாக இருக்கலாம்!!), காதலுடன் சேர்ந்த வலியும் உண்டு. கூடங்குளம் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் கூட இதில் செய்தி உண்டு.

ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றியே நம்மையும் அவருடன் சேர்த்து 90-களில் பீகாரில் பயணிக்க வைத்தது தான். கடைசி அத்தியாயங்களில் கதை நாயகனின் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இது உண்மைக் கதை என்பது பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. சிலரின் வாழ்வில் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஊழல் எந்த அளவிற்கு ஒரு அங்கமாக உள்ளது என்பது நம் நாட்டின் சோகம்.

திரைப்படமாக வருவதற்க்கான தகுதி படைத்த நாவல்..

நாவலைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் – Crisp.



No comments:

Post a Comment