Monday, December 22, 2014

எனக்கு கமல்ஹாசனைப் பிடிக்காது


புவனா அமெரிக்கா வரப் போறாள், இங்கயே செட்டில் ஆகப் போறாங்க. சுரேஷ்க்கும் இங்கேயே வேலை கிடைச்சுடுச்சு அதுவும் நம்ப வீட்ல இருந்து ஒரு மணி நேர டிரைவ்ல வீடு பார்த்து இருக்காங்க, என்றாள் மனைவி.

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருள ஆரம்பித்தது.

இந்த புவனா என் மனைவியின் ஆருயிர்த் தோழி. எந்த முடிவும் புவனாவின் ஒப்புதல் இல்லாமல் நடக்காது. அவ்வளவு ஏன், பல ஆண்டுகளுக்கு முன், என் மனைவியிடம் நான் என் காதலை தெரிவித்தபோது, அவள் எனக்கும் உன்னை புடிச்சிருக்கு, புவனா கூட நீ ஓரளவுக்கு நல்லவனா தெரியுறேன்னு சொன்னா, என்றாள். புவனாவிற்கு அப்போது திருமணமாகிருந்தது, காதல் திருமணம் தான். உன்கிட்ட ஒப்புதல் வாங்கிட்டு தான் அவ சுரேஷை கல்யாணம் கட்டினாளா, என்று கேட்க நினைத்து, கேட்காமல் விட்டு விட்டேன். இப்படித் தான் எதையுமே கேட்க வேண்டிய நேரத்தில் நான் கேட்பதே இல்லை.

நான் அமெரிக்காவிலும், என் மனைவி(அப்போதைய காதலி) இந்தியாவிலும் இருந்த காலம், ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் தொலைப்பேசியில் பேசியே பொழுதைக் கழித்தக் காலம். அப்போதுதான் "விருமாண்டி" திரைப்படம் வெளியாகிருந்தது. அப்படி ஒரு முறைத் தொலைபேசியபோது,

"வீகெண்ட் விருமாண்டி போகலாம்ன்னு பிரெண்ட்ஸ் எல்லாம் பிளான் பண்ணிருக்கோம்" என்றேன்.

", நான் இல்லைனாலும் நல்லாத் தான் என்ஜாய் பண்ணிட்டு இருக்கே" என்றாள்.

"இல்லை வீகெண்ட் போர் அடிக்கும் அதான்" -றேன்.

"ம், நான் அங்கே வந்தப்புறம் ரெண்டுப் பேரும் சேர்ந்து பார்க்கலாம்ன்னு நினைச்சேன், பட் தட் இஸ் ஓகே" - றாள்.

அப்புறம் ஏதேதோப் பேசினோம். நியாபகம் இல்லை. ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் பேசினால் எது நினைவில் நிற்கும். விருமாண்டி விஷயமும் அப்படித்தான் மறந்துப் போனேன்.

இரண்டு வாரம் சென்றிருக்கும், அவளுக்கு நான் போன் செய்தபோது, அருகில் புவனாவும் இருந்தாள். மரியாதை(!!)  நிமித்தம் அவளிடமும் பேசினேன். பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின்,

"ஆமாம் புதுப் படம் எதாவது பார்த்தியா" புவனா.

" பார்த்தேனே, இரண்டு வாரம் முன்ன பிரெண்ட்ஸ் கூட விருமாண்டி பார்த்தேன்" நான்.

"உன்னையே நினைச்சுட்டு இருக்க உன் வருங்கால மனைவி, என் பிரெண்ட் பற்றி யோசிச்சியா நீ" அதில் என் பிரெண்ட் என்பதை அதிக அழுத்தத்துடன் சொன்னாள்.

பகீர் என்றது, ஏதோ ட்விஸ்ட் இருக்கு, வகையாக சிக்கியிருக்கோம், என்று மட்டும் புரிந்தது.

"என்ன சொல்ற புவனா புரியலையே?"

"நாங்கெல்லாம் போன வாரம் விருமாண்டி போனோம், இவ வர மாட்டேன்னு சொன்னா, நாங்க கட்டாயப் படுத்திக் கூட்டிப்போனோம், இவ படத்துக்கு வந்து கர்சீப்பால கண்ணைக் கட்டிட்டு உட்கார்ந்து இருந்தா"

அதிர்ச்சியில் உடல் நடுங்க ஆரம்பித்தது. பெரியத் தவறு செய்து விட்டோமென்று புரிந்தது. அன்றிரவு காந்தாரி கனவில் வந்து மகாபாரத்தை டப்பிங் தமிழில் பேச, அரண்டு போய் எழுந்தேன். உடனே தொலைப்பேசினேன். செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரினேன். இனி அவளில்லாமல் எங்கும் செல்ல மாட்டேன் என்றும், முக்கியமாய் திரைப்படங்களுக்கு அவளுடன் மட்டுமே செல்வேன் என்றும் சத்தியம் செய்தேன். எதுக்கு இதப்போய் பெருசாப் பேசுற, ரிலாக்ஸ் என்றாள். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு சின்ன வாக்கு வாதம் ஏற்பட்டது. அவள் உயர் கல்விப் படிக்க இங்கே ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருந்தாள், எனக்கு அதில் உடன்பாடு இல்லை, நான் வேறொரு கல்லூரியைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன். வழக்கமான தீர்வாக, உரையாடலைத் துண்டித்தாள்.

இப்போது தான் என் கிரகம் வேலை செய்ய ஆரம்பித்தது. பஞ்சாயத்திற்காக, புவனாவிற்குத் தொலைப்பேசினேன். நான் சொன்னதெல்லாம் கேட்டுவிட்டு, அவள்.

"நீ சொல்றதுல நியாயம் இருக்கு, ஆனால் அவ உனக்காக விருமாண்டிப் படத்தை கண்ணைக் கட்டிப் பார்த்தாள், நீ அவளுக்காக இந்த சின்ன விஷயத்துக்கு விட்டுக்  குடுக்க மாட்டியா" என்றாள்.

நியாயமாகப் பட்டது, சரி என்றேன்.

சில மாதங்கள் கழித்து, என் மனைவி இங்கே வந்தவுடன் வேறேதோ ஒரு விஷயத்திற்கு வாக்குவாதம் வந்தது, மீண்டும் புவனாவிற்கு தொலைப்பேசினேன்.

"அவ உனக்காக விருமாண்டிப் படத்தை ...."  அதற்குப் பிறகு அவள் பேசியது எதுவும் காதில் விழவில்லை. “விருமாண்டி” அரசியல் புரிந்தது போல இருந்தது.

திருமணமெல்லாம் ஆனப் பிறகு, ஒரு முறை வேண்டுமென்றே புவனாவிற்கு தொலைப்பேசினேன், நான் எதுவும் சொல்லி முடிப்பதற்குள்,

"அவ உனக்காக விரும்....". துண்டித்தேன், இனி அவளுக்கு எக்காரணம் கொண்டும் போன் செய்வதில்லை என்று முடிவெடுத்தேன்.

அப்படிப்பட்ட புவனா அமெரிக்கா வராளாம், அதுவும் என் வீட்ல இருந்து ஒரு மணி நேர டிரைவ்ல வீடு பார்த்து இருக்காளாம்.

--ssk.

உபரித்தகவல்: என் மனைவி இன்னும் "விருமாண்டி"ப் பார்க்கவில்லை, சமீபத்தில் கூட அவள் அதை இன்னொரு நண்பரிடம் கூறினாள், நான் இடைமறித்து விருமாண்டி ஒன்றும் தமிழின் பார்க்க வேண்டிய முக்கியப் படமெல்லாம் இல்லை, என்று பேச்சை திசைத் திருப்பினேன்.

No comments:

Post a Comment