Friday, December 30, 2016

பெங்களூரு நாட்கள்



1995-ஆம் ஆண்டு, தஞ்சையில் ஒரு சிறிய கம்பெனியில் கம்ப்யூட்டர்களைப் பழுது பார்க்கும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், ஒரு நாளேட்டில் "சோனி பிளாப்பி டிஸ்க்" விற்க விற்பன்னர்கள் தேவை என்று வந்த விளம்பரத்திற்கு, விண்ணப்பித்தேன். முக்கியமாய் அதற்கு விண்ணப்பிக்கக் காரணம், அந்த கம்பெனி பெங்களூரில் இருந்ததாலும், எனக்கும் பெங்களூரு அக்காலத்தில் மிகவும் பிடித்த ஊர் என்பதாலும். விண்ணப்பித்தப் பிறகு அதைப் பற்றி மறந்தும் போனேன். அப்பொழுதெல்லாம், வேலைக்கு கடிதம் மூலம் விண்ணப்பித்து விட்டு தேவுடு காக்க வேண்டும். காத்திருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து, அவர்களே போக்குவரத்து மற்றும் 3 நாட்கள் தங்குவதற்கான செலவையும் குடுத்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள். அத்தேர்வில், பொருட்கள் விற்பதில் என்னுடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டனர். ஒரு சங்கிலி, ஒரு கீபோர்டு மற்றும் ஐந்து நிமிடங்களே ஓடும் ஒரு அலாரம் கடிகாரம் இவைகளை அடகு வைத்த அனுபவம் மட்டுமே இருந்தது, மற்றபடி அவர்கள் கேட்ட விற்பனை அனுபவமெல்லாம் எள்ளளவுக்குக் கூட கிடையாது. இருப்பினும், தினம் ஐநூறு/ஆயிரம் பிளாப்பி டிஸ்க் விற்றுவிடும் உத்வேகத்துடன் இருப்பதாய் அவர்களை நம்ப வைத்துவிட்டேன். அவர்களும் என்னை நம்பி வேலை குடுத்து விட்டனர்.


(உபரி தகவல் - அந்த ஐந்து நிமிடமே ஓடும் அலாரம் கடிகாரத்தை, வழக்கமாக அதிக நேரம் அரட்டை அடிக்கும் சேட்டிடம், ஐந்து நிமிடத்திற்குள் அடகு வைத்து காசு வாங்கிவிட்டு வெளியேறியது, இதுவரை நான் திறமையாக கையாண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் முதன்மையான ஒன்று அல்லது அது மட்டுமே ஒன்று என நானே என்னைப் பாராட்டிக்கொள்வதுண்டு).



தேவையான படிவங்களை எல்லாம் சரிபார்த்தப் பிறகு, வேலைக்கு சேர முறைப்படியான உத்தரவு சில நாட்களில் வந்து சேர்ந்தது. வேலைக்குச் சென்றேன். அப்போது அவ்வளவு பெரும் அதிர்ச்சி காத்திருக்குமென எனக்குத் தெரியவில்லை. நான்கு இளைஞர்களை அறிமுகம் செய்து வைத்து இவர்களெல்லாம் உன்னுடைய டீமில் வேலை செய்பவர்கள், நீதான் இவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக்கூறி திரு.காஷ்யப்(முதலாளி) என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என்ன செய்வதென்று புரியாமல், கை கூப்பினேன், நன்றி தான் சொல்கிறேனென்று நினைத்துக்கொண்டு என் தோளில் தட்டிக் குடுத்துவிட்டு சென்றார். அங்கிருந்த ஒருவன் மற்றொவனிடம் கன்னடத்தில் பேசினான், உடல் மொழியிலிருந்து நிச்சயமாய் என் மீது கோபமாக இருக்கிறான், என்னைத் திட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது. திரு.காஷ்யப் என்னை அழைத்து நிறைய படிவங்களைப் படிப்பதற்குக் குடுத்தார், அதில் ஒரு மாதத்தில் நான் எவ்வளவு பிளாப்பி டிஸ்க்குகள் விற்க வேண்டும் என்றும், என் டீமில் உள்ள மற்றவர்கள் எவ்வளவு விற்க வேண்டுமென்ற தகவல் எல்லாம் இருந்தது. என்னுடைய விற்பனைக்கு மட்டுமல்லாமல், அங்கிருந்த மற்ற நான்கு இளைஞர்களின் விற்பனை அளவிற்கும் நானே பொறுப்பு என்று எழுதியிருந்தது. வியர்க்க ஆரம்பித்தது. அன்று மாலை வீட்டிற்கு செல்லும்போது என்னை அறியாமல் அழுகை வந்தது. மௌனமாய் அழுதுகொன்டே வண்டியில் வீடு வந்து சேர்ந்தேன்.


பொறுப்பைக் குடுத்தவுடன் கைக்கூப்பி, மௌனமாய் சசி அழுததன் காரணம், உங்களுக்குப் புரிகிறதா?


--ssk







Sunday, October 23, 2016

உயிர்மை - விநாயக முருகன்

குளிர் இரவு, மெல்லிய ஒலியில் கணினியிலிருந்து கசியும் பாடல்களும், ஜன்னலுக்கு வெளியே அசைவின்றி உறங்கும் ஸ்லீப்பி வில்லோ மரமும், படித்துக்கொண்டிருக்கும் உயிர்மை புத்தகமும், இவ்விரவையும் இத்தனிமையையும் இனிதாக்குகிறது.


ஆகஸ்ட் உயிர்மை இதழில் வெளிவந்த "சமூக ஊடக உறவுகளும் நீர்க்கோலப் புரட்சியும்", என்கிற விநாயக முருகனின் கட்டுரை ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறது, சோசியல் மீடியாவின் மனநிலைப்போக்கைப் பற்றி அலசுகிறது. நீண்ட நேரம் யோசிக்க வைக்கக் கூடிய கட்டுரை. முன்பு சுஜாதா எழுதிய கட்டுரைகளை இவருடைய கட்டுரைகளுடன் ஒப்பிடலாம். சுஜாதா அவர் கதைகளில் அறிவியலை அவர் கதைகளின் சுவையை கூட்டுவதற்காக சேர்ப்பார், இவர் சற்றே மென்பொருள் அறிவியலின் உள்ளெ சென்று கொஞ்சம் தீவிரமாக ஆராய்கிறார். புதிதாய் டேட்டா மைனிங், டேட்டா சயின்ஸ் போன்றத் துறைகளுக்கு நுழையும் இளைஞர், இளைஞிகளுக்கு இக்கட்டுரை ஒரு நல்ல அறிமுகம். தயவு செய்து சுந்தர் பிச்சையின் தொப்பியை அணிந்துக்கொண்டு குற்றம் கண்டுபிடிக்க கிளம்பினீர்களெனில் கட்டுரையின் மையக்கருத்தை தவற விட்டு விடுவீர்கள். இவர் அதற்க்கு முந்தைய இதழில் எழுதிய "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" கூட தமிழின் முக்கியமான கட்டுரையே.

Sunday, August 21, 2016

மது


தமிழ் கூறும் நல்லுலகம் நான் கள்ள மௌனம் காத்ததாய்ப் பழி சொல்லும் என்பதால், குடியைப்பற்றி என் கருத்தையும் பதிவு செய்து விடுகிறேன். போன முறை இந்தியா சென்றபோது ஒரு நண்பன் அவன் மகனை என்னிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ஏதாவது அறிவுரை சொல்லு என்றான். அந்தந்த வயதில் அவ்வயதிற்கேற்ற தவறுகள் செய்தே வளர்ந்தவன் என்பதாலும், அறிவுரைகளுக்கு நான் அதிக மதிப்பளித்ததில்லை என்பதாலும், அறிவுரை கூறும் அளவிற்கு எனக்குத் தகுதியில்லை என்று நாசுக்காக விலகிவிட்டேன். இதை சொல்லக் காரணம், இது அறிவுரை கிடையாது, என் கருத்து மட்டுமே என்கிற பொறுப்பு துறப்பிற்காக.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியும், நாம் எப்போதும் இரண்டாய்ப் பிரிந்தே இருந்திருக்கோம், யின்-யாங் போல, MGR-சிவாஜி, ரஜினி-கமல், "24" அருமையானப் படம் என்பவர்கள்- "24" மோசமானப் படம் என்பவர்கள், சமந்தாவிற்காக "24" படத்தைப் பார்த்தவர்கள் - சமந்தாவே இருந்தாலும் "24" படத்தைப் பார்க்காதவர்கள், இப்படி இரண்டுப்பட்ட சமுதாயம் நாம். மது அருந்துவதில் உள்ள கருத்து வேறுபாடும் இப்படித்தான் அமைந்துள்ளது. ஒரு தரப்பு குடிக்கவே கூடாது என்றும் மற்றொன்று குடித்தால் தான் கவிதை எழுதுவதிலிருந்து கக்கா போவது வரை சாத்தியம் என்றும் கூறுகிறது. இதில் குடிக்கவே கூடாது என்கிற தரப்பு, மாதமொருமுறையோ இருமுறையோ ஒரு க்ளாஸ் வைனோ ஒரு போத்தல் பியரோ குடிப்பவனையும், தினம் போதை தலைக்கு ஏறி நெற்றியால் நடப்பவனையும் ஒரே தராசில் ஏற்றி கருத்தெனும் கத்தியால் பின்புறத்தில் குத்துகின்றனர். இன்னொரு தரப்போ நாங்கள் காலையில் இருந்து மாலை வரைக் குடிப்போம், அது எங்கள் பிறப்புரிமை, நாங்கள் பொது வாழ்வில் இருந்தாலும், மகனுக்கு எழுதிய கடிதத்தை நாங்களே வெளியிட்டாலும், நீங்கள் அந்தக்குழந்தையின் மீதோ அதுப்போல பாதிக்கப்படப்போகும் மற்ற குழந்தைகளின் மீதோ இரக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி அதேக் கத்தியை உருவி அதே இடத்தில் குத்துகிறார்கள். என் உறவுகள் மற்றும் நட்புகளில் இந்த இரண்டு கோஷ்டியும் உண்டு. இதுவரை மதுவே குடித்திராத ஆனால் பெரும் அயோக்கியகர்களாய் திரிபவர்கள் என் உறவில் உண்டு. இவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை எல்லாம், தங்கள் புனித பிம்பத்தால் மறைத்துக் கொள்வர். அதேபோல மதுவால் தன் உடலைக்  கெடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு மனவலியை ஏற்படுத்திய நெருங்கிய நட்புகளும் உண்டு. சிறிதளவு மது அருந்துபவர்கள் பெருங்குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் முறையல்ல.
அளவாய் சாப்பிடும் மதுவினால் நிறைய நன்மைகள் உண்டு என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் தினம் அருந்துவது உகந்ததல்ல. சில நேரங்களில் நிதானமாய் இருப்பதற்கு சிறிதளவு மது தேவைப்படுகிறது. இல்லை, இல்லை, அதற்கு பதிலாக நான்கு மணிக்கு எழுந்து தியானமும், யோகாசனமும் செய் என அறிவுரைகூறும் ராம்தேவ்களுக்கு என்னிடம் எந்தத் தர்க்கமும் இல்லை.
நல்லா இருங்கடே.

Thursday, June 9, 2016

இறைவி

சாரு மலக்கிடங்குன்னு, பாதிப் படம் பார்த்துட்டு முழுப் படத்துக்கு விமர்சனம் எழுதியபொழுதே நினைத்தேன் இந்தப் படம் நல்லா இருக்கும்ன்னு, நம்பிக்கை பொய்க்கவில்லை, "இறைவி" தமிழின் முக்கியமான திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ், இயக்குனராக வென்றுவிட்டார். முதலில் இது பெண்ணியம் பற்றியப் படம் மற்றும் ஒரு கருத்தை சொல்ல வந்தப் படம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, அது இயக்குனரின் விளம்பரயுத்தி என்றே எண்ணுகிறேன்.
 

அருமையான பாத்திரத் தேர்வு, முக்கியமாய் துணை நடிகர்கள், அதுவே இந்தப் படத்தின் பலம். விஜய் சேதுபதியின் ஒரே விதமான வசன உச்சரிப்பு சலிப்பை ஏற்படுத்துகிறது. அஞ்சலி, பாபி சின்ஹா, ராதாரவி, கமலினி எல்லோரின் நடிப்பும் கச்சிதம். எஸ்.ஜே.சூர்யா கொஞ்சம் மிகை நடிப்பு என்றே சொல்ல வேண்டும், ஒரு சில காட்சிகளில் அடக்கி வாசித்தாலும் நிறையக் காட்சிகளில் அதிகமாகவே நடிக்கிறார். அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் "சபாஷ்" வாங்குவதற்காகவே நடிப்பாரே அந்த முதுபெரும் நடிகர், அவரை நியாபகப்படுத்துகிறார். தேவை இல்லை சூர்யா, உங்களுக்கு நடிப்பு நன்றாகவே வருகிறது, இயல்பாகவே நடியுங்கள்.

கதை இயல்பாய் பயணிக்கிறது, சிலை கடத்தலைத் தவிர. ஆனால் அதுவும் அதிகம் உறுத்தவில்லை. ஒரு நல்ல கமெர்ஷியல் படத்திற்குத் தேவையான கதைஅம்சம் இதில் உள்ளது. பெண்ணிய உளறல்களைத் தவிர்த்திருந்தால், இயக்குனர் காண்பிக்க நினைத்த ஆணின் அகங்கார உலகம் இன்னும் தெளிவாய் வெளிபட்டிருக்கும். 1995ல் வெளிவந்த “Heat”, Michael Mann இயக்கி, கொள்ளையர்களின் தலைவனாய் Di Niroவும், காவல் துறைத் தலைவனாய் Alpacinoவும், Val Killmer மற்றும் நிறையத் துணை நடிகர்கள் நடித்தப் படம். அதில் ஒவ்வொரு துணை நடிகரும் தன் பங்கை சிறப்பாய் செய்திருப்பர். இறைவி அந்தப் படத்தை நியாபகப்படுத்தியது, கதைக்காக அல்ல, கதை சொல்லும் ஸ்டைலுக்காக. தமிழின் Michael Mann ஆக உருவாக எல்லாத் தகுதியும் கார்த்திக் சுப்புராஜிடம் உள்ளது. வாழ்த்துகள்.

இது குழந்தைகளுக்கானப் படம் அல்ல.

Friday, January 29, 2016

நன்றி

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும், இனி வாழ்த்தப்போகும்  அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஆயிரக்கணக்கில் குவிந்த வாழ்த்துகள் சற்றே மிதமான போதையை அளித்தது (சரி ஆயிரம் லட்சியம், நூறு நிச்சயம்னு புரிஞ்சுக்கங்க).  பல வழிகளில் வாழ்த்து வந்து சேர்ந்தது, மின்னஞ்சல், பேஸ்புக், வாட்ஸ்ஆப், உள்பெட்டி அவ்வளவு ஏன், இருவர் புறாக்களின் காலில் கூட வாழ்த்தை கட்டி அனுப்பி இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


அம்மா எனக்காக தஞ்சை கோவிலில் அர்ச்சனை செய்தார்கள். மனைவி கேக் வரவழைத்து வெட்ட செய்தாள். மகள் இனியா அடுப்படியில் இருந்த ஒரு சிறு மூட்டை உருளைக்கிழங்கை என்னிடம் குடுத்து, அப்பா, ஹாப்பி பர்த்டே, என்றாள். சூசமாக என்னை கவுச் பொட்டேடோ (couch potato) என்கிறாள்.


இவ்வளவு அன்பிற்கும் நான் தகுதியானவன் தானா என்று இன்று மாலை heiniken உதவியுடன் சுயபரிசோதனை செய்யலாம் என்றிருக்கிறேன்.  வயதாகிறது என்கிற கவலையை மறைக்க உதவிய உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் மீண்டும் நன்றி.


-- ssk.