Tuesday, March 14, 2017

நான் ஏன் கவிதை எழுதுவதில்லை!!!




கடந்த ஆண்டு தஞ்சை சென்றிருந்தபோது நண்பன் ஒருவன் ஸ்கூட்டியில் (தமிழக அரசு குடுத்தது அல்ல) என்னைப் பின்னால் ஏற்றிக்கொண்டு கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றான். இருவருமே போஷாக்காக இருந்ததினால் ஸ்கச், ஸ்கச், ஸ்கச் என்று ஸ்கூட்டியின் உடலும் டயரும் உரசிக்கொண்டது.  அதற்கு மேல் அதை தினறடிக்க மனமின்றி, என்னை நடு வழியில் இறக்கிவிட்டு, பெரிய வண்டி எடுத்து வரப் போனான்.  சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் அத்தெருவில் தனியாக நடக்கும்போது பதற்றம் ஒட்டிக்கொண்டது. அச்சம்பவம், வீட்டருகில் என்னைப் பார்த்த தெரு நாய் ஒன்று பற்கள் தெரிய கர்ஜித்துக்கொண்டு கடிக்க வந்தது, மழை காலத்தில் தார் ரோட்டில் திடீரென்று ப்ரேக் போட்ட லாரி க்ரீச்சிடுவது போல, நான் பயத்தில் ஒரு வினோதமான க்ரீச்சிடும் ஓசை எழுப்ப, குழம்பிய நாய் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு, உன்னை வேறொரு நாள் வேறொரு சந்தர்ப்பத்தில் கவனித்துக்கொள்கிறேன் என்று சவால் நிரம்பிய கண்களால் திரும்பத் திரும்ப என்னை முறைத்துக்கொண்டே  சென்றது. இந்நிகழ்வை நண்பனிடம் அன்றே விசனத்துடன் கூறினேன், அவனோ என் நடை, உடை, எடையிலிருந்து, சீரற்ற என் பல்வரிசை வரை அத்தனைக் குறைகளையும் பட்டியலிட்டு இதில் ஏதொ ஒன்று தான் அந்த நாய் கோபப்படக்காரணமாக இருக்கக்கூடும் என்று கூறியதில் என் தன்னம்பிக்கை லேசாய் அடி வாங்க, இதற்கு அந்த நாயிடமே கடி வாங்கி இருக்கலாம் என தோன்றியது. அந்த நிகழ்வின் பாதிப்பு மனதிலிருந்ததால் தற்காப்பிற்காக கையில் இரண்டு பாறாங்கற்களை வைத்துக்கொண்டு காத்திருந்தேன். அப்பொழுது தான் காத்திருந்த தெருவைக் கவனித்தேன். பல வருடங்களுக்கு முன்னால் என் பதின்ம வயதில் அதீத பாதிப்பை ஏற்படுத்திய தெரு அது.








என்பதுகளின் கடைசி என நினைவு, பொட்டல்காடாகவும் முந்திரித் தோப்பாகவும் இருந்த பகுதியை அழித்துவிட்டு இரு பக்கமும் வீடுகள் கட்டுவதற்கேற்ப இடம்விட்டு, நடுவில் ஒரு பெரிய தெருவும் இரு பக்கமும் சிறு மரக்கன்றுகள் நட்டும் வடிவமைத்திருந்தனர்.  என் வீட்டிலிருந்து ஒரு அரை மைல் தள்ளி உள்ளத் தெரு அது. இப்போது நிறைய வீடுகளால் நிரம்பி அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. பள்ளிப் பருவத்தில் என் நண்பர்களுக்கு நிறைய நண்பிகள் இருந்தனர், அந்நண்பிகள் அவர்களாகவே அந்நண்பர்களை நாடி வந்து பேசுவர். ஆனால் என்னைத் தவிர்த்துவிடுவர். அதனால் சுய இரக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அக்காலக்கட்டத்தில் இப்படி மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விடுபட இரண்டே வழிகள்தான்  இருந்தன, ஒன்று ரௌடியாவது இரண்டாவது கவிதை எழுதுவது. நான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன். தினம் மாலை இத்தெருவில் என் மிதிவண்டியை  நிறுத்திவிட்டு, சூரியன்  மறைவதைப் பார்த்துக்கொண்டே, மூன்றடி மரக்கன்றுகளருகில் நின்றுகொண்டு கவிதை எழுத முயர்ச்சிப்பேன். குள்ள மரக்கன்றுகள் நடுவே அஸ்தமனமாகும் சூரியனை ரசிக்கத் தெரிந்த எனக்கு கவிதை எழுதுவது ஒன்றும் கஷ்டமாக இருக்காது என்றே  நம்பினேன். "ஏ பெண்ணே", "அவள் கண்கள்", "அவள் இதழ்கள்" என்று ஆரம்பிக்கும் பத்திருபது கவிதைகள் எழுதியிருந்த நேரம், ஒரு நாள் நான்கைந்து மரங்கள்(கன்றுகள்) தள்ளி இன்னொருவர் மிதிவண்டியில் அமர்ந்து காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். யோசனையுடன் நிமிர்ந்து பார்ப்பார் பின்னர் காகிதத்தில் எழுதுவார். எங்கோ பார்த்தது போல இருந்தார், அனேகமாய் நம் பள்ளி சீனியராக இருக்க வேண்டும், அது மட்டுமின்றி கவிதை எழுதும் சகஹிருதயர் வேறு, உரிமையாய் அவரிடம் சென்று “நீங்களும் கவிதை எழுதுறீங்களா அண்னே?” என்றேன். தவம் கலைந்தவர் திரும்பிக் கூட பாராமல் என் முதுகுத்தண்டு சில்லிடும் பதிலைக் கட்டைக் குரலில் கூறினார், "இல்லை, ஆவிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.".

No comments:

Post a Comment