“I love you because the entire universe conspired to help me find you” - The Alchemist
அடுத்த நாள் காலை சேட்டன் அவசரமாக வந்து என்னை எழுப்பினான், அனு அவனிடம் உணவருந்தும் அறை வாசலில் எனக்காக காத்திருப்பதாக சொல்லி அனுப்பி இருந்தாள். இதுவரை காலை உணவு அவள் அவள் தோழிகளுடன் அருந்துவதே வழக்கம். அவசரமாக கிளம்பி சென்றேன், அன்றிலிருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு, ஊருக்குத் திரும்பும் நாள் வரையில் ஒன்றாகவே காலை உணவருந்தினோம். நான் அவளிடம் என் காதலைத் தெரிவித்தது பற்றி அவள் எதுவும் பேசவில்லை, அவளாகவே என்னுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறாளெனில் என்னையும் விரும்புகிறாளென்றே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அடுத்த ஒரு வாரமும் அவளுடன் தான் அதிக நேரம் செலவழித்தேன். ஒருமுறை அவளை நாடகத்தில் ஒரு நிமிடம் நடிக்கக்கூட வைத்துவிட்டேன், தயங்கி பிறகு ஒத்துக்கொண்டாள். நிறைய பேசினோம் என்று சொல்வதைவிட அவள் பேசினாள், நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.
கடைசி நாள், வழியனுப்ப இருப்பூர்தி நிலையத்திற்கு அவளும் அவள் தோழியும் வந்திருந்தனர். அவள் தோழி என்னிடம் தனியாக, எனக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும், அவளாக உனக்கு தொலைபேச மாட்டாள், ஆனால் உன்னிடமிருந்து எதிர்ப்பார்த்து காத்திருப்பாள், நீ அவளுக்காக காத்திருக்காமல் ஊருக்குச் சென்றவுடன் அவளைக் கூப்பிடு என்றாள், தலையாட்டினேன். அதுவரை மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவள் என்னிடம் வந்தாள், கலங்கியிருந்தேன், அவள் கண்களிலும் லேசாக ஒரு கண்ணீர்த் திரை. காதலிக்கிறேன் என்று சொல் அனு, இப்போதே உன்னுடன் வந்துவிடுகிறேன் என்னும் நிலையிலிருந்தேன், நான் உணர்வால் உந்தப்படுபவன், அவளோ தத்துவங்களால். அவள் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்திருந்த 3 ஒலிப்பேழையை அழகாக வண்ணத்தாளில் சுற்றி என்னிடம் பரிசாகத் தந்தாள். அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்து, பயணத்தின்போது பொறுமையாக படிக்கும்படி சொன்னாள், பொறுமையாக என்பதை வலியுறுத்தி சொன்னாள். இரவு விலை கம்மியாக இருக்கும்போது தொலைபேசியில் அழைக்குமாறும், அம்மாவிடம் காசு வாங்கி அதை விரயமாக்க வேண்டாம் என்றாள். செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அவள் ஒரு சேவை மையத்தில் வேலை செய்யும் ஆவலில் இருப்பதாக சொன்னாள், இருப்பூர்தி புறப்படும் வரை பேசிக்கொண்டிருந்தோம். அவள் கண்களிலிருந்து மறையும் வரை கையசைத்துவிட்டு வந்தமர்ந்தேன்.
நடைகேட்பியில் அவள் கொடுத்த ஒலிப்பேழையை ஒலிக்கவிட்டு தலையணி கேட்பொறியை மாட்டிக்கொண்டேன். புரியாத மொழி தான், ஆனால் இரம்மியமான இசை, அவள் தேர்வுகள் எப்பொழுதும் உசத்தியானவை, ஆடம்பரமற்றவை. என்னளவில் இன்றும் கூட அவள் எங்கோ உயரத்தில் இருக்கிறாள், இத்தருணத்தில் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் எனும் யோசனை வரும்பொழுது, அவள் யாருக்காவது எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஒரு மெல்லிய புன்னகையோடு செவிலியர் பணி செய்து கொண்டிருப்பாள், அவ்வரையின் மேசையில் கரமசோவ் சகோதரர்களின் பக்கங்கள் காற்றில் படபடக்கும் காட்சியே மனதில் வந்து போகிறது.
கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முதல் சந்திப்பை அழகாக எழுதியிருந்தாள். அவளுக்கும் என்னைப் பிடித்துள்ளதாகவும், என் அருகாமையும் என்னுடன் நேரம் செலவழித்ததும் பிடித்திருந்ததாகவும், ஒரிசாவில் இருந்து வரும்போது எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்ததாகவும், திரும்பும்போது மகிழ்வாக திரும்புவதாகவும், அதற்கு காரணம் நானென்றும் எழுதி இருந்தாள். அதுவரை புரிந்தது, அதற்கு மேல், சார்த்ரேயும் கீற்கேகார்டும் மேற்கோள்களில் வந்து என்னைக் கலவரப்படுத்தினர். நான் புரிந்துக்கொண்ட சாராம்சம் இதுதான், எனக்கு உன்னை ரொம்பவே பிடித்துள்ளது ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வராது, தூரம் தான் காரணம், நாமிருவரும் ஏமாற்றமடைந்து விடுவோம் என்றெழுதி இருந்தாள். பெருந்தவத்தின் பாரமாய் அடுத்த மூன்று நாட்களும் நகர்ந்தது. கூட பயணித்த நண்பர்களுக்கு புரியவில்லை, 20 நாளில் ஒரு காதல் இவ்வளவு காயப்படுத்தும் என்பதை அவர்கள் நம்பத்தயாராக இல்லை. விளக்கவும் முடியாது. தஞ்சை குந்தவை நாச்சியார் பெண் மட்டும் ஆறுதல் கூறினாள். ஊர் வந்த பிறகு வாரமொருமுறை அனுவிற்கு தொலைபேசினேன், சில நேரங்களில் அவளும் அழைப்பாள். அவளுக்கு காதல் என்னும் “வார்த்தை” மட்டுமே அச்சம் தந்தது.
என்னுடன் பயணித்த நண்பர்கள் நாளிதழ்களுக்கு கட்டுரை எழுதி பேட்டியெல்லாம் கொடுத்திருந்தனர். பிராத்மிக் யாரிடமோ ஒரு கேடயம் வாங்குவது போல் ஒரு புகைப்படம் கூட ஒரு மாலை நாளிதழில் வந்திருந்தது. அப்படி ஒரு நிகழ்வு நடந்த நினைவு எனக்கில்லை, மங்கிய செய்தித்தாளில் உற்றுப்பார்த்தால் கேடயம் வழங்குவது அவள் லக்னோ சித்தப்பா போல தோன்றியது. மேய்ப்பர் திருச்சி வானொலி நிலையத்தில் பேட்டியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார், எப்படி அவர் வழிகாட்டலில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று, எல்லோரும் இப்படி தன்விவரப் பட்டியலை புதுப்பித்துக் கொண்டிருக்க, என்னுடைய கவனமோ நூலிழையில் தவறிய காதலில் குவிந்திருந்தது. உன் மீது காதல் இல்லை இனி என்னிடம் பேசாதே என்று அவள் சொல்லிவிட்டால் அதையாவது சில மாதங்களில் கடந்துவிடலாம், ஆனால், இன்னும் பேசிக்கொண்டுதான் இருந்தோம். சில நாட்கள் அதிக சோர்வாக இருக்கும், ஆண் நண்பர்களிடம் இதை விளக்க முயலும்போது, அதிக பட்சமாக 2 நிமிடங்கள் கேட்டுவிட்டு அவர்கள் எனக்களித்த தீர்வு, பியரோ அல்லது கிழமுனியோ (old monk) தான். கு. நா பெண் வீட்டிற்கு வருவாள், ஆறுதலாக பேசுவாள், அதற்கும் தடை ஏற்பட்டது. என் தாய் வழிப்பாட்டி, நாக சுந்தராம்பாள், நான் இல்லாத சமயத்தில் கு. நா பெண் வந்திருந்தபோது, நீ வீட்டிற்கெல்லாம் வராதே, அவன் தகப்பனுக்கு பிடிக்காது என்று கடிந்துள்ளார், கேள்விப்பட்டபோது, எனக்குக் கோபம் தலைக்கேறியது. தகப்பனார் அப்போது தஞ்சையில் கூட இல்லை, போபாலில் வேலைப் பார்த்து வந்தார். இருந்த ஒரே ஆறுதலையும் இப்படி பறித்துவிட்டாரே என்று நான் அடித்தொண்டையிலிருந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தேன். இங்கே ஒன்று சொல்லியாக வேண்டும், என் கோபத்தை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போவது இரண்டே பேர் தான், 20ம் நூற்றாண்டில் என் பாட்டி, 21ம் நூற்றாண்டில் என் மகள். நான் கத்திக்கொண்டிருக்கும்போது, பாட்டி, “வேணி, எதுக்கு இந்த போக்கத்தப்பய இப்படி புடுக்கறுந்த பன்னியாட்டம் கத்துறான்”, என்றவாறு என்னை அலட்சியப்படுத்தி நகர்ந்துவிடுவார்.
பல மாதங்கள் கழித்து, கல்லூரிப் படிப்பு முடிந்து கோயமுத்தூர், பெங்களூரில் எல்லாம் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்திருந்தேன். முன்போல் அடிக்கடி பேசுவதில்லை என்றாலும் மாதமொருமுறையாவது அனுவிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். ஒருமுறை அவள் என்னை அழைத்து அடுத்த மாதம் அவள் சென்னை வரப்போவதாக சொன்னாள். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் கழித்து மீண்டும் அவளை சந்திக்க பதற்றத்தோடுக் காத்திருந்தேன் ..


No comments:
Post a Comment