Saturday, June 24, 2017

ஒரு கண்டனம்


 
கொள்கையின் அடிப்படையில் திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு tentkotta என்றொரு இணையதளம் படைப்பாளிகளுக்கு உரிய காசு குடுத்துவிடுவதைக் கேள்விப்பட்டு காசு கட்டி அதில் இணைந்தேன். இணைப்பு வாங்கிய புதிதில் ஒருசில படங்கள் பார்த்ததோடு சரி, அப்புறம் அதை அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை.  இப்போதுதான் இரண்டு மாதங்களாய் அதில் தொடர்ந்து படம் பார்க்க ஆரம்பித்துள்ளேன். திரைப்படங்களுக்கு ஐந்து நட்சத்திர தர வரிசைப்படி பார்வையாளர்கள் மதிப்பீட்டும் முறையுள்ளது. குறைந்தபட்சம் மூன்று நட்சத்திர மதிப்பீடு உள்ள திரைப்படங்களையே பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தேன். இப்படித்தான் இரு தினங்களுக்கு முன் “முன்னோடி” என்றொரு படம், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்தது. இருபது நிமிடங்கள் பார்த்திருப்பேன் அப்புறம் முடியாமல் அணைத்துவிட்டேன். சரி நம் ரசனை பெருவாரியான ரசனையுடன் ஒத்துப்போகவில்லை என்றெண்ணி விட்டுவிட்டேன். இன்று பார்த்தால் அப்படத்திற்கு இரண்டு நட்சத்திர அந்தஸ்தே உள்ளது. முதல் நாள் நான்கு பார்வையாளர்கள் அதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்தளித்திருந்தனர். சமுதாயத்தின் மீது அவர்களுக்கு உள்ள கோபம் இப்படி வன்மமாக வெளிப்பட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன், மற்றபடி பிற உயிர்களின்மேல் அன்பு செலுத்த வேண்டுமென "சத்குரு" ஜக்கி கூறியுள்ளதால் அந்த நான்கு பேருக்கும் என் அன்பு.   
 
 

Monday, May 22, 2017

ஊதா கலர் சட்டை


 
அவள் வேறொரு கல்லூரியிலிருந்து மாற்றலாகி எங்கள் கல்லூரிக்கு இரண்டாமாண்டு படிக்கும்போதுதான் வந்து சேர்ந்தாள். ஆடம்பரமில்லாத அழகு. உறுத்தாத வண்ணங்களில் உடையும் சிறு புன்னகையையும் எப்பொழுதும் அணிந்திருந்தாள். அவளை எப்படியாவது எங்கள் நட்பு வட்டத்தில் சேர்ப்பதென்று முடிவெடுத்தோம். “எங்கள்” என்பது நானும் என் இரு நண்பர்களும். நாங்கள் மூவரும் முதல் ஆண்டிலிருந்தே நண்பர்கள். ஒருவன் சேட், வெள்ளையாக இருப்பான், மற்றொருவன் பொங்கப்பானை, எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவான், காரணப்பெயர்கள். இக்கதை இவர்களைப் பற்றியதல்ல என்பதால் அதிக அறிமுகம் தேவையில்லை. பொ.பா நன்றாக படிப்பவன் என்பதால் அவன் வகுப்பில் எடுத்த குறிப்புகளை அவளிடம் கொடுத்து மெதுவாய் நட்பானோம். மூவரணி, நால்வரணியானோம்.
  

அவள் என்னிடம் கொஞ்சம் அதிக நட்பாகவும், அதிக அக்கறையுடனும் பழகினாள். ஏன்டா இப்படி படிக்கவே மாட்டேங்குற, உனக்கு மட்டும்தான் இவ்வளவு அறியர்ஸ், இந்த செமஸ்டர் மட்டும்தான் உன் ரெகார்ட் நோட்புக் நான் எழுதிதருவேன், சிகரட் பிடிக்காத, தண்ணி அடிக்காத, ஏன்டா கிளாசுக்கு வர மாட்டேங்குற, இப்படிப் பஞ்சமில்லா அறிவுரை கரைபுரண்டோடியது. ஏன் லேட், சாப்டியா என்று வகுப்பிலிருக்கும்போது அவள் சைகையால் கேட்கும்போது மூளைக்குள் ஜிவ்வென்று புது ரத்தம் பாய்ந்த சந்தோஷம். அந்த அக்கறை ஒருவிதத்தில் இதமாகவும் இருந்தது.
 






அடுத்த நாள் கல்லூரியின் ஆண்டு விழா. அதுவரை நலவிரும்பியாக மட்டுமே இருந்தவள், நாளை இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிவோமா, எனக்கேட்டு என் மனதில் காதலை விதைத்தாள். ஊதா கலரென்று முடிவானது. அவசரமாய் திருச்சிக்குச் சென்று ஊதா கலர் சட்டை வாங்கிவந்து, அன்றிரவு தூக்கம் தொலைத்து, அடுத்த நாள் காலை அவளை வரவேற்க, புதுச் சட்டை அணிந்து பேருந்து நிறுத்தத்திற்கு சந்தோஷமும் பதற்றமும் ஒருசேர போய் நின்றேன். மெல்லிய ஊதா நிற புடவை அணிந்து, ஊதாப் பொட்டணிந்து, என் இதயம் கரைய அவளின் ப்ரித்யேக புன்னகையுடன் பேருந்தின் படிகளிலிருந்து இறங்கினாள். அவள் பின்னால் சேட்டும், பொ.பா யும் பேருந்திலிருந்து இறங்கினர், இருவரும் ஊதாவின் நிற ஒருமைகளில் சட்டை அணிந்திருந்தனர், ஒருவன் அழுத்தமான ஊதாவும், மற்றொருவன் மங்கிய ஊதாவும்.


 
-- ssk

Tuesday, March 14, 2017

நான் ஏன் கவிதை எழுதுவதில்லை!!!




கடந்த ஆண்டு தஞ்சை சென்றிருந்தபோது நண்பன் ஒருவன் ஸ்கூட்டியில் (தமிழக அரசு குடுத்தது அல்ல) என்னைப் பின்னால் ஏற்றிக்கொண்டு கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றான். இருவருமே போஷாக்காக இருந்ததினால் ஸ்கச், ஸ்கச், ஸ்கச் என்று ஸ்கூட்டியின் உடலும் டயரும் உரசிக்கொண்டது.  அதற்கு மேல் அதை தினறடிக்க மனமின்றி, என்னை நடு வழியில் இறக்கிவிட்டு, பெரிய வண்டி எடுத்து வரப் போனான்.  சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் அத்தெருவில் தனியாக நடக்கும்போது பதற்றம் ஒட்டிக்கொண்டது. அச்சம்பவம், வீட்டருகில் என்னைப் பார்த்த தெரு நாய் ஒன்று பற்கள் தெரிய கர்ஜித்துக்கொண்டு கடிக்க வந்தது, மழை காலத்தில் தார் ரோட்டில் திடீரென்று ப்ரேக் போட்ட லாரி க்ரீச்சிடுவது போல, நான் பயத்தில் ஒரு வினோதமான க்ரீச்சிடும் ஓசை எழுப்ப, குழம்பிய நாய் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு, உன்னை வேறொரு நாள் வேறொரு சந்தர்ப்பத்தில் கவனித்துக்கொள்கிறேன் என்று சவால் நிரம்பிய கண்களால் திரும்பத் திரும்ப என்னை முறைத்துக்கொண்டே  சென்றது. இந்நிகழ்வை நண்பனிடம் அன்றே விசனத்துடன் கூறினேன், அவனோ என் நடை, உடை, எடையிலிருந்து, சீரற்ற என் பல்வரிசை வரை அத்தனைக் குறைகளையும் பட்டியலிட்டு இதில் ஏதொ ஒன்று தான் அந்த நாய் கோபப்படக்காரணமாக இருக்கக்கூடும் என்று கூறியதில் என் தன்னம்பிக்கை லேசாய் அடி வாங்க, இதற்கு அந்த நாயிடமே கடி வாங்கி இருக்கலாம் என தோன்றியது. அந்த நிகழ்வின் பாதிப்பு மனதிலிருந்ததால் தற்காப்பிற்காக கையில் இரண்டு பாறாங்கற்களை வைத்துக்கொண்டு காத்திருந்தேன். அப்பொழுது தான் காத்திருந்த தெருவைக் கவனித்தேன். பல வருடங்களுக்கு முன்னால் என் பதின்ம வயதில் அதீத பாதிப்பை ஏற்படுத்திய தெரு அது.








என்பதுகளின் கடைசி என நினைவு, பொட்டல்காடாகவும் முந்திரித் தோப்பாகவும் இருந்த பகுதியை அழித்துவிட்டு இரு பக்கமும் வீடுகள் கட்டுவதற்கேற்ப இடம்விட்டு, நடுவில் ஒரு பெரிய தெருவும் இரு பக்கமும் சிறு மரக்கன்றுகள் நட்டும் வடிவமைத்திருந்தனர்.  என் வீட்டிலிருந்து ஒரு அரை மைல் தள்ளி உள்ளத் தெரு அது. இப்போது நிறைய வீடுகளால் நிரம்பி அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. பள்ளிப் பருவத்தில் என் நண்பர்களுக்கு நிறைய நண்பிகள் இருந்தனர், அந்நண்பிகள் அவர்களாகவே அந்நண்பர்களை நாடி வந்து பேசுவர். ஆனால் என்னைத் தவிர்த்துவிடுவர். அதனால் சுய இரக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அக்காலக்கட்டத்தில் இப்படி மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விடுபட இரண்டே வழிகள்தான்  இருந்தன, ஒன்று ரௌடியாவது இரண்டாவது கவிதை எழுதுவது. நான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன். தினம் மாலை இத்தெருவில் என் மிதிவண்டியை  நிறுத்திவிட்டு, சூரியன்  மறைவதைப் பார்த்துக்கொண்டே, மூன்றடி மரக்கன்றுகளருகில் நின்றுகொண்டு கவிதை எழுத முயர்ச்சிப்பேன். குள்ள மரக்கன்றுகள் நடுவே அஸ்தமனமாகும் சூரியனை ரசிக்கத் தெரிந்த எனக்கு கவிதை எழுதுவது ஒன்றும் கஷ்டமாக இருக்காது என்றே  நம்பினேன். "ஏ பெண்ணே", "அவள் கண்கள்", "அவள் இதழ்கள்" என்று ஆரம்பிக்கும் பத்திருபது கவிதைகள் எழுதியிருந்த நேரம், ஒரு நாள் நான்கைந்து மரங்கள்(கன்றுகள்) தள்ளி இன்னொருவர் மிதிவண்டியில் அமர்ந்து காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். யோசனையுடன் நிமிர்ந்து பார்ப்பார் பின்னர் காகிதத்தில் எழுதுவார். எங்கோ பார்த்தது போல இருந்தார், அனேகமாய் நம் பள்ளி சீனியராக இருக்க வேண்டும், அது மட்டுமின்றி கவிதை எழுதும் சகஹிருதயர் வேறு, உரிமையாய் அவரிடம் சென்று “நீங்களும் கவிதை எழுதுறீங்களா அண்னே?” என்றேன். தவம் கலைந்தவர் திரும்பிக் கூட பாராமல் என் முதுகுத்தண்டு சில்லிடும் பதிலைக் கட்டைக் குரலில் கூறினார், "இல்லை, ஆவிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.".

Saturday, February 25, 2017

விநாயகமுருகனின் "வலம்" நாவல் பற்றி என் கருத்து.



பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை, முதல் சில அத்தியாயங்கள் மெதுவாக நகர்ந்தாலும், நரி வேட்டை பற்றிய அத்தியாயத்தில் சூடுப் பிடித்து கதை முடியும் வரை உள்ளிழுக்கிறது. நிறைய உண்மைச் சம்பவங்களைச் சுற்றிப் பின்னப்பட்டக் கதை. சில சம்பவங்கள் அல்லது நிகழ்வுகளை சாமர்த்தியமாக கதைக்குள் நுழைக்கிறார் ஆசிரியர். கொலையாளி யாரென முதல் சில  அத்தியாயங்களிலேயே யூகிக்க விட்டுவிடுகிறார், கரோலின் பாத்திரத்தின் தடுமாற்றத்தைக் கூட முன்பே யூகிக்க முடிகிறது, அப்படியும் சுவாரசியம் குறையாமல் கதை நகருகிறது. நிகழ்வுகளால் பழைய நூற்றாண்டு ஒன்றின் கதையைச் சொல்லும் "Ken Follett"ன் "World Without End" எனும் புனைவின் யுத்தியை எனக்கு இந்நாவல் நியாபகப்படுத்தியது.


Y

நாவலில் வரும் இச்சம்பவம் என்னைப் புன்னகைக்க வைத்தது. "அடையாற்றிலிருந்து குதிரைப்பந்தய விடுதி செல்லும் பாதையில் முன்பு அடர்ந்த காடு இருந்தது, கொடுமையான முட்புதர்கள் நிறைந்த காடு, பால்டிமர் சிறந்த வேட்டைக்காரர். ஒருமுறை வேட்டைக்குச் செல்லும்போது குதிரையிலிருந்து தவறி முட்புதரில் விழுந்துவிட்டார். முதுகுத்தண்டில் அடிபட்டு படுக்கையில் கிடந்தவர் சில நாட்களில் இறந்துபோனார். அவரது பிருஷ்டம் முழுவதும் விஷ முட்கள் குத்திய புண் ஆறாமல் இறந்து போனார். அவர் நினைவாகவே அந்தப் பகுதிக்கு பால்டிமர் பாட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள்"
ஆசிரியரின் உழைப்பு இக்கதையில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது, நிச்சயமாய் இதற்கான ஆராய்ச்சிகளுக்கு சில வருடங்களாவது செலவிட்டிருப்பார். வசதியான வாழ்விற்கு எவ்வளவு இயற்கை வளங்களை அழித்துள்ளோம் எனும் வேதனையான உண்மையைப் புரிய வைக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜாதிய அரசியலை தொட்டு செல்கிறார், அக்கால கட்டத்திற்கும் இப்போதைக்கும் சிறிய அளவிலேயே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கூடுதல் வேதனை. இதையும் சொல்லிவிடுகிறேன் , நிகழ்வுகளைச் சுற்றி கதையைப் பின்னியதால் ஒரு சில இடங்களில் மட்டும் அது ஒட்டாமல் துருத்தலாய்த் தெரிந்தது.


நான் சமீப காலத்தில் படித்த புத்தகங்களில் "வலம்" முக்கியமான, சுவாரசியமான புத்தகமாய் கருதுகிறேன்.

Sunday, February 12, 2017

சசி Vs பன்னீர் மீம்ஸ்

வாட்ஸாப் குழுமத்தில் ஒரு வாரமாக பன்னீர் ஆதரவு மீம்ஸ்களை அனுப்பிக்கொண்டிருந்த நண்பன், திடீரென்று இன்று சசி ஆதரவு மீம் ஒன்றை அனுப்பி வைத்தான். திடுக்கிட்டு அவனிடம் கேட்டேன், என்ன மச்சான் உன் நிலைப்பாட்டில் ஏதேனும் திடீர் மாற்றமா என்று? அவன் இல்லை எனக்கூறி, இரு பக்க நியாயத்தையும் இவ்வுலகிற்கு எடுத்துக்கூறுவது தன் கடமையென்றான். அவன் கடமையுணர்ச்சியில் தீயவைக்க என மனதில் எண்ணிக்கொண்டு, சரி நீ யார் பக்கம் என்றேன், இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும், தன் முன்னால் இருக்கும் ஆவணங்களை வைத்து தனக்குள் தர்க்கம் செய்துக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரம் முடிவெடுத்துவிடுவேனென்றும் கூறினான். ஆளுநர் முடிவெடுக்கும் முன், அவனை முடிவெடுக்கும்படி அறிவுரை கூறிவிட்டு, முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டேன், அவன் முன்னால் இருக்கும் ஆவணங்களெல்லாம் மீம்ஸ்களா என்று, உணர்ச்சியற்றக் குரலில் "ஆம்" என்றான்.