அறுவை சிகிச்சை முடிந்து
72 மணிநேரம் தாண்டியாகிவிட்டது. முதல் 24 மணி நேரமும் உணர்வுநீக்க (Anesthesia) மருந்தின் தாக்கத்தில் இருந்ததாலும் நரம்பு ஒன்றை மரத்துப்போக வைத்திருந்ததாலும் வலி அதிகமாகத் தெரியவில்லை, நீர்த்துப்போக ஆரம்பித்தவுடன் வலியை உணர ஆரம்பித்தேன். சில வாரங்களுக்கு முன் உடலியக்க மருத்துவர் என்னிடம் தானும் அதே அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும் முதல் 5 நாட்கள் வலி அதிகமாகத் தான் இருக்கும் என்று என்னைத் தயார்படுத்தினாள். நான்தான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். புரட்டி விட்டது, நேற்றைக்கு இன்று சற்றேப் பரவாயில்லை. எதுவும் உண்ண முடியவில்லை, மயக்க மருந்து, தொண்டையில் சொருகி உருவிய குழாய்களால் ஏற்பட்ட எரிச்சல், வீரியம் மிகுந்த வலி நிவாரண மாத்திரைகள் ஏற்படுத்திய மலச்சிக்கல் இவையாவும் காரணம்.
எனக்காக பிரார்த்தித்த நண்பர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து தைரியம் சொல்லிய நட்புகளுக்கும், நான் அறுவைசிகிச்சைக்கு செல்ல சில நிமிடங்களுக்கு முன் எனக்கு கந்தசஷ்டி கவசத்தை அனுப்பி தைரியம் சொன்ன தோழமைக்கும், என்னை மருத்துவமனையில் இருந்து வீடு வரைக்கும் பத்திரமாய் அழைத்து வந்த நண்பன் குருவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குரு தெலுங்கன், 97 ம் வருடத்திலிருந்து நெருங்கிய நண்பன், இதை அவன் படிக்கப்போவதில்லை, நிறையவே எனக்காக அலைகிறான், அவனோ நானோ நன்றியெல்லாம் இதுவரை சொல்லிக்கொண்டதில்லை. இன்றும் நேரே சொல்லாமல், எனக்கு சௌகரியமான வழியிலேயே சொல்கிறேன்.
4 மணி நேரம் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை 6 மணி நேரமாக நீண்டது, கூடுதலாக ஒரு தசைநாரையும் சரிப்படுத்த அதிக நேரமானதாக மருத்துவர் கூறினார். உணர்வு நீக்க மருந்தின் தன்மை சற்றே மட்டுப்பட்டவுடன் விழிப்பு வந்தது, மனைவியும் குருவும் மருத்துவரிடமும் செவிலியர்களிடமும் பேசிக்கொண்டிருந்தனர். என்னிடம் சைக்கிள் ரேஸ் பற்றி ஏதோ பேசினார் மருத்துவர், இன்னும் முழுதாக என்ன பேசினோம் என்று நினைவில்லை, நானாக அப்புள்ளிகளை ஒன்று சேர்க்க முடியாவிட்டால் அடுத்த சந்திப்பின்போது அவரிடம் கேட்கவேண்டும். அடுத்த 2 மணி நேரத்தில் என்னை அழைத்துக்கொண்டு போக சொன்னார்கள். பாதி மயக்கத்திலேயே கிளம்பினேன். அமெரிக்க மருத்துவமனைகளில் உங்களை சீக்கிரம் வெளியே அனுப்பவே முயல்வர். நமக்கு உயிர், அவர்களுக்குத் தொழில். வீட்டிற்கு வரும் வழியில் அரை மயக்கத்தில் நிறைய உளறினேனாம், அடுத்து என்றாவது குருவுடன் ஒரு பியர் போத்தலுடன் அமர்கையில் அவன் என்னைக் கேலி செய்யக்கூடும் அல்லது அவன் தெலுங்கில் ஒரு சிறுகதை எழுதக்கூடும்.
வீட்டிற்கு வந்த பிறகு புரிந்தது, இவ்வளவு பலவீனமாய் என்றுமே உணர்ந்ததில்லை. மகள் தானாகவே சில சிறு வேலைகளை செய்கிறாள். என்னையே பார்த்துக்கொண்டு காலடியில் பபிள்ஸ் படுத்திருக்கிறான். 3 நாட்களாக ஒரு நிமிடம் கூட என்னை விட்டு அகலாத மனைவி, என்னைக் கைத்தாங்கலாக பாத்ரூம் அழைத்து செல்வதிலிருந்து, ஆடை அணிவித்து விடுவதுவரை எல்லாமே அவள்தான். தூக்கமே இல்லாமல் நான் வலியில் அரற்றுவதை கவலையோடுக் கேட்டுக்கொண்டிருப்பாள். பலவீனமான தருணத்தில் தான் நம் பலம் என்னவென்றே தெரிகிறது. என் பலம் என்னருகில் இருக்கும் சோபாவில் நான் இதை எழுதும் போது களைப்பாய் மெல்லிய குறட்டை ஒலியுடன் உறங்குபவள். இத்தருணத்தில் உணர்கிறேன், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று. வேறொரு நாள் காட்டில் நானும் என் செல்லப்பிராணியும் நடக்கும் போதோ, தனியாக கடற்கரையில் அமர்ந்திருக்கும்போதோ நான் வாய் விட்டு அழக்கூடும். வேறெப்படி நன்றி சொல்வேன் அவளுக்கு!!!


No comments:
Post a Comment