Wednesday, June 28, 2023

கோரக்பூர் கதைகள் – 4:

சில நாட்களில் சற்றே தாயகப் பிரிவுத்துயர் எட்டிப் பார்த்தது, அனு என்னிடம் ஏன் சோர்வாக உள்ளாய் என்று கேட்டாள், சொன்னேன். தொலைபேசியில் அம்மாவை அழைத்துப் பேசவேண்டும், ஆனால் விடுதிக்குத் திரும்பும் முன் எல்லோரையும் காக்கவைத்தல் நியாயமில்லை, பசியுடன் வேறு இருப்பர், என்றேன். எல்லோருடனும் நாமும் போய் சாப்பிட்டுவிட்டு, உனக்கு மொழி பிரச்சனை இருப்பதால் நாமிருவரும் திரும்ப வரலாம் என்றாள். புல்லாங்குழலின் பின்னணி இசை ஒலித்த தருணமது.

அம்மாவுக்குத் தொலைபேசினோம். முதலில் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு, அனுவிடம் நீ பேசு என்று கொடுத்தேன், அவளும் ஓரிரு நிமிடங்கள் அம்மாவுடன் கொஞ்சம் சிரிப்புடன் ஆங்கிலத்தில் பேசிவிட்டுத் தொலைபேசியை என்னிடம் கொடுத்தாள்.

அம்மா என்னிடம்
“யாருடா தம்பி அந்த பொண்ணு?” குரலில் இன்னும் சிரிப்பு ஒட்டியிருந்தது.

உன் மருமகள் மா.

“முருகா” என்று சொல்லிவிட்டு அம்மா கடவுளை வேண்டுவது கேட்டது.

ஏம்மா கடவுளையெல்லாம் வேண்டுற, நல்ல பொண்ணுமா.

“அது தெரியுதுடா, அதுதான் அவளுக்கு நல்ல புத்தியை குடுன்னு வேண்டிக்கிட்டேன்”

சரி அடுத்த வாரம் பேசுறேன். கோபமாக தொலைபேசியை வைத்துவிட்டேன்.

அதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்களை உன் மருமகள்மா என்று அம்மாவிடம் கூறியுள்ளேன், அதில் சிலரிடம் ஒருமுறை கூட நான் பேசியதில்லை, சிலரை நேரில் பார்த்தது கூட இல்லை, அதனால் அம்மா அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை. திரும்பும்போது என்னிடம் அனு, அம்மா நல்லா பேசியதாகவும், ஊர் பற்றியெல்லாம் நிறைய பேசினாள். நானும் வெகு நேரம் தஞ்சையின் புகழ் பாடினேன். சந்தோஷமான நாள். பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.

கோரக்பூர் நாட்களில் அனுவுடனான இரண்டு முக்கியமான பயணங்கள் மனதிற்கு இணக்கமானவை. முதல் பயணம் புத்தர் கோவில், நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் தான் இருந்திருக்கும். புத்தர் இறந்த இடம் என்று சொல்வர். புத்தர் மரண தருவாயில் படுத்திருக்கும் சிலை இங்கே உள்ளது. 10 பேர் சென்றோம். நான் அனுவுடன் பயணித்தேன். வெள்ளை சுடிதார் அணிந்திருந்தாள். பஸ் பயணம் முழுதும் நிறைய பேசினோம், அப்படி சொல்ல முடியாது, அவள் புத்த தத்துவங்கள் பேசினாள், புரியவில்லை தான், ஆனால் ஏதோ கொஞ்சம் மண்டைக்குள் இறங்கிய மாதிரி தான் தோன்றியது. உலகிலேயே இருக்கும் பெரிய புத்தர் கோவில் பற்றி வழிகாட்டி ஏதோ பேசினார், அனு என்னிடம் புத்த கோவிலுக்கும் புத்த தத்துவங்களுக்கும் இல்லாத சம்பந்தம், நிர்வாணத்தைப் போதித்தவருக்கு எதற்காக பெரிய கோவில்கள் கட்டினோம் என்றெல்லாம் பேசினாள், பதிலேதும் கூறாமல் தூரத்தில் தெரிந்த பொட்டல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தேன், தத்துவ மயக்கத்தில் சற்றே கண்ணயர்ந்து விட்டேன். அந்த நாள் முழுதும் ஒரு இனிய புதிய அனுபவம்.

அடுத்த பயணம் எல்லையோர நேபாள கிராமத்துக்குச் சென்றது, 3 மணி நேர பயணம். சுநௌளி என்னும் ஊருக்கு பேருந்து கூட்டிச் சென்றது. எல்லோரும் போயிருந்தோம். அனுவைத் தமிழ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருந்தேன், எல்லோரும் நட்பாக பழகினர். அங்கிருந்து கொஞ்சம் தூரம் நடந்து 2 சோதனைச் சாவடிகளை கடந்தால் பெளஹியா எனும் நேபாள கிராமத்துக்கு இட்டு செல்லும் அங்கிருந்து 15 நிமிடத்தில் பைரஹவா எனும் கிராமத்திற்கு சென்று விடலாம். இப்போதெப்படி என தெரியவில்லை, 90 களில் கடவுச்சீட்டு தேவையில்லை. சோதனைச் சாவடியில் காமெராவை எடுத்து செல்ல அனுமதியில்லை என்றனர், பிராத்மிக் உடனே கோபமாக நான் பேசுகிறேன் என்றாள், சரி காமெராவை மறந்துவிட வேண்டியதுதான் என்றெண்ணினேன், அதற்குள் அனு அவர்களிடம் தன்மையாக பேசி வாங்கி கொடுத்தாள். பைரஹவா கிராமத்திற்கு சென்றோம், நிறைய சிறிய கடைகள் இருந்தன, மலிவு விலையில் பொருட்கள், எல்லைத் தாண்டி இந்தியாவில் வாங்குவதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது, நிறைய பேர் விலைகளுக்காக இந்தியாவிலிருந்து இங்கே வந்து வாரமொருமுறை வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவர் என்றனர். ஒரு கடையில் பிராத்மிக் தீவிரமாக பேரம் பேசிக்கொண்டிருந்தாள், நகர்ந்து விட்டேன்.

நான் அனுவிற்கு உலோகத்திலான கழுத்தணியில் தொங்கும் ஒரு சிறிய புத்தர் பதக்கத்தை வாங்கினேன், பேருந்து ஏறும் முன் அவளிடம் தந்தேன். ஒரு புன்னகையோடு வாங்கிக்கொண்டாள், கண்களில் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன், கண்டுபிடிக்க முடியவில்லை. பேருந்தில் திரும்பி வரும்போது, பயணம் முழுதும் அந்த புத்தர் பதக்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, வழக்கம்போல புத்தகம் படித்துக்கொண்டு வந்தாள் . கடைசி நாள் பிரியும்போது அவள் எனக்கொரு பரிசும் ஒரு கடிதமும் கொடுத்தாள், 3 நாள் பயணத்தின் போது படி என்றாள்...

- பயணம் தொடரும் #GorakhpurStories





No comments:

Post a Comment