Sunday, June 18, 2023

கோரக்பூர் கதைகள் – 1

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) வாயிலாக ஒரு 20 நாள் முகாமுக்காக கோரக்பூர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து 10 பேர் கொண்ட குழு ஒன்று கோரக்பூர் செல்லத் தயாரானோம். என்னுடன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியிலிருந்து இருவர், பிஷப் ஹீபர் மற்றும் நேஷனல் கல்லூரிகளிலிருந்து தலா ஒருவனும், 5 பெண்கள் - திருச்சி ஹோலி க்ராஸ், இந்திரா காந்தி, காவேரி, எஸ்.ஆர்.சி மற்றும் தஞ்சை குந்தவை நாச்சியார் ஆகிய கல்லூரிகளிலிருந்து தலா ஒரு பெண்ணும், எங்களை எல்லாம் மேய்ப்பதற்கு ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தை வழி நடத்தும் ஆசிரியரும் செல்வதாக முடிவானது.

கிளம்புவதற்கு 10 நாட்களுக்கு முன் என்னவெல்லாம் எடுத்து வருவது, கோரக்பூரில் என்னவெல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றை விவாதிக்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சந்திக்க முடிவானது. ஆசிரியருக்கு காத்திருந்த வேளையில் நாங்கள் 5 ஆண்கள் ஒரு குழுவாக வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம், அப்போது எங்களுடன் கோரக்பூர் செல்லவிருந்த ஒரு பெண் அவள் தந்தையுடன் வந்தாள், அவர் அவளை உள்ளே விட்டுவிட்டு நேராக எங்களை நோக்கி வந்தார், வேகமாக சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டு, அவருக்கு வணக்கம் வைத்தோம், அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கொஞ்சம் நேரம் பேசிவிட்டு கிளம்பும் போது என்னைப் பார்த்து அவர் மகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாரு சொல்லிவிட்டு சென்றார். யாருமே அப்படிப்பட்ட பொறுப்பை எல்லாம் அதுவரை என்னிடம் தந்ததில்லை, அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு என் கவனக்குறைவு பிரசித்தம். சின்ன சந்தோஷத்துடன் ஒரு லேசான பதற்றமும் தொற்றிக்கொண்டது. அன்றிலிருந்து பயணம் சென்று திரும்பும் வரை ஏறக்குறைய ஒரு மாத காலமும், அப்பெண் சரியாக சாப்பிடுகிறாளா, ரயில் பயணத்தில் தேவையான உதவிகள், பொதி சுமப்பது முதற்கொண்டு கவனித்தேன் (வாக்குக் கொடுத்துவிட்டேனே), கலை நிகழ்ச்சிகளுக்கு அவள் மறந்து விட்டுவந்த பொருட்களை மொழி தெரியாத கோரக்பூரில் அலைந்து திரிந்து வாங்கி வந்ததெல்லாம் ஒரு தனி அத்தியாயமாகவே  எழுதலாம். 

திருச்சி வந்த பிறகு 10 பேரின் நட்பும் தொடர்ந்தது, சிலரிடம் அதிக நெருக்கமாகவும், சிலரிடம் தொய்ந்தும் போனது. தொலைபேசி பரவலாக இல்லாத காலமது, இருப்பினும் எப்பொழுதாவது ஒன்றிரண்டு பேராக திருச்சியில் சந்திப்பது என்று நட்பு தொடர்ந்தது. ஒரு வருடம் கழிந்திருக்கும், முதல் நாள் தந்தையுடன் வந்தாளல்லவா அப்பெண் அவள் வீட்டிற்கு எல்லோரையும் விருந்துக்கு அழைத்தாள். எல்லோரும் வரவில்லை நானும், பி.ஹி நண்பனும், நேஷனல் கல்லூரி நண்பனும், பெண்கள் பக்கமிருந்து தஞ்சை கு.நா பெண்ணும், இ.கா பெண்ணும் போனோம். கோரக்பூர் பயணக்கதையெல்லாம் பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். திடீரென்று விருந்தளித்த அப்பெண் என்னைப் பார்த்து, “அப்பா, உன்னிடம் ஏன் என்னைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார் என்றால், நீ தான் கரடு முரடாக இருந்தாய்” என்று சிரித்தாள். அவள் தகப்பனாரும் மற்ற எல்லா நன்பர்களும் சேர்ந்து சிரித்தார்கள், எல்லோரும் சிரிப்பை நிறுத்திய பின்னும் கூட என்னுடன் வந்த அப்பாஸும், நவரச நாயகனும் சிரிப்பை நிறுத்தவில்லை. கு.நா பெண் மட்டும் ஒரு சிறு புன்னகையோடு நிறுத்திக்கொண்டாள் (இவளை மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்). வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்ட அவ்வுருண்டை, மென்னியை அடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வெஜிடபிள் பிரியாணியை அதற்கு மேல் இறங்க விடவில்லை. பரிட்சைக்கு படிப்பதற்காக சீக்கிரம் கிளம்ப வேண்டுமென்று சொல்லிக் கிளம்பினேன், அவர்களும் அதை நம்பவில்லை, எனக்கே, நானா அந்த பலவீனமான காரணத்தை உபயோகித்தேன் என்று தோன்றியது.  

இத்தனை ஆண்டுகள் கழிந்தும், அன்று ஏற்பட்ட மன உளைச்சல் தான்,  வெஜிடபிள் பிரியாணி என் தொண்டையில் இறங்காததற்கு காரணம், பேலியோ அல்ல!!!

- பயணம் தொடரும்





No comments:

Post a Comment