Monday, June 5, 2023

இளையராஜாவுடன் ஒரு புகைப்படம்!!!

இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டு நாட்களாக டைம்லைன் முழுக்க ராஜாவுடன் புகைப்படம் எடுத்த நண்பர்கள் அதைப் பகிர்ந்திருந்தனர். எனக்கும் அவருடன் புகைப்படம் எடுக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. வருடம் சரியாக நினைவில்லை, அவர் அமெரிக்காவில் பல நகரங்களில் கச்சேரி செய்துவிட்டு வாஷிங்டன் வந்தார். அதை நிர்வாகம் செய்த கம்பெனியினர் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தார்கள், VIP டிக்கெட் வாங்கினால் ஐயாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம், கண்டிப்பாக செல்பி எடுக்கக் கூடாது, அவர்களே ஒரு புகைப்பட நிபுனரை நியமித்து, புகைப்படம் எடுத்து, ஈமெயிலில் அனுப்பி வைப்பதாக வாக்குறுதி குடுத்திருந்தனர். சரியாகத்தான் பட்டது எனக்கும், அந்த சமயத்தில்தான் ஒரு முன்னாள் நடிகரும் இன்னாள் பேச்சாளரும் செல்பி எடுப்பவர்களின் செல்போனைப் பறித்து விட்டெறிந்துக் கொண்டிருந்தக் காலக்கட்டம் அது என்று நினைக்கிறேன்.

நான் புகழ் பெற்றவர்களின் அருகாமையில் அதிகமாக இருந்ததில்லை, அவ்வாய்ப்பைத் தேடியும் போனதில்லை, அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்ததுமில்லை, ஐயா இளையராஜாவுடன் மட்டும் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டுமெனும் ஆர்வம் அழுத்தமாக கூடிக்கொண்டேப் போனது. (நானும் நண்பர்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பின்னூட்டத்தில் இட்டு, மச்சான் "நீ செலிபிரிட்டியுடன் எடுத்த போட்டோ" என்று கும்மியடிப்பார்கள் என்று தெரிந்தே இவ்வரியை எழுதுகிறேன், தன் தலையில் ...). இதுவரை நான் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே பிரபலம் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் தான். அடுத்து ஒரு பிரபலத்துடன் ஜெர்மனியில் இருந்து அமெரிக்கா வரை ஒன்றாக பயனித்தும் வீடு வந்து சேர்ந்த பிறகுதான் அவர் யாரென்றே நினைவுக்கு வந்தது – “கடலோரக் கவிதைகள்” ராஜா.
சரி இளையராஜாவை சந்தித்த நிகழ்வுக்கு வருவோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 50 பேர் கொண்ட ஒரு வாட்ஸப் குழுமம் ஒன்றை உருவாக்கி அதில் தகவல் அனுப்புவோம் என்றனர். "IR VIP Ticket Holders" என்று அக்குழுமத்திற்கு பெயரும் சூட்டியிருந்தனர். பெருமிதமாக இருந்தது. நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒவ்வொருவராய் ஏற்பாட்டாளாரிடம் கேள்விகள் கேட்டோம், எங்கே சந்திப்பது, நிகழ்சிக்கு முன்பா, பின்பா, எந்த வரிசையில் அழைப்பீர்கள் என்றெல்லாம் கேட்டோம், உடனடியாக பதில் வரவில்லை, அன்றிரவு ஏற்பாட்டாளர் பதிலளித்தார், நிகழ்ச்சி முடிந்தவுடன், ஸ்டேஜிற்கு பின்புறம் புகைப்படம் எடுப்போம், நாங்களாக ஒவ்வொருவராக அனுமதிப்போம் என்றார், மீண்டும் செல்பி மட்டும் யாரும் எடுக்கக்கூடாதென உறுதி வாங்கிக் கொண்டார், நாங்களும் சத்தியம் செய்து கொடுத்தோம். நிகழ்ச்சிக்கு முந்தின நாள் ஏதோ சந்தேகம் கேட்டோம், பதில் வரவில்லை, அப்புறம் அந்த குழுமத்தில் நிர்வாகிகள் மட்டுமே செய்தி அனுப்பும் விதமாக அமைத்துவிட்டனர்.
நிகழ்ச்சி நாளன்று மதியம் செய்தி வந்தது, நிகழ்ச்சிக்கு முன்பாகவே புகைப்படம் எடுக்கிறோம் அரை மணி நேரம் முன்பாக வந்து சேருங்கள் என்று, ஒரு மணி நேரம் முன்பே சென்றுவிட்டேன். அங்கே ஒரு நிர்வாகி எல்லோரையும் ஸ்டேஜிற்கு பின்புறம் அழைத்து சென்றார், அங்கே அவர் ஐயா தனித்தனி படங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, நேரமின்மை காரணமாக அனைவரையும் வைத்து ஒரு க்ரூப் போட்டோ தான் எடுக்கப்போகிறோம் என்றார். எல்லோர் முகத்திலும் ஏமாற்றம். எனக்கென்னவோ இவர்கள் ராஜாவிடம் இதை முன்கூட்டியே கேட்காமல், திடீரென்று அவரிடம் சொல்ல அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றியது. ஐயா வந்தார், 2 அடி தொலைவில் அவரைப் பார்க்கிறேன், புன்னகைத்தார், படபடப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது, அவர் அருகில் நின்று கொண்டேன், எங்கிருந்தோ வந்த இரண்டு பெண்மனிகள் என்னைத் தள்ளிவிட்டு அவர் அருகில் நின்று கொண்டனர், ஒரு வாரத்திற்கு பிறகு புகைப்படம் வந்து சேர்ந்தது, யாரென்றே தெரியாத 49 பேருடன் நானும் ஒரு ஓரமாக இளையராஜவுடன் எடுத்தப் புகைப்படம்.
அந்தப் புகைப்படத்திற்குப் பதிலாக, யாரோ தனியாக அவருடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளேன்!!!
பிறந்த நாள்
வாழ்த்துகள்
ஐயா!!!

May be an image of 2 people

No comments:

Post a Comment