வலியெனும் வேறொரு உலகம்!!!
2022ம் வருடம் முதல் 2023 மார்ச் 4ம் தேதி வரையிலான காலத்தைப் பொற்காலமென்பேன். உடற்பயிற்சிகளாலும், விளையாட்டுப் போட்டிகளாலும் சில சிறிய சாகசங்கள் நிரம்பிய பயணங்களாலும் நிரம்பியிருந்த காலமது. நண்பர்களுடன் சேர்ந்து கிராண்ட் கான்யனின் (Grand Canyon) வடக்கு விளிம்பிலிருந்து தெற்கு விளிம்பிற்கு 15 கிலோ எடையுள்ள பையை சுமந்துகொண்டு 25 மைல் (40 கி.மீ) தூரத்தை 6000 அடி மலைமேலிருந்து கீழிறங்கி மீண்டும் 4500 அடி மலைமேலேறிணோம், சில அரை மாரத்தான்களும், முதல் முறையாக ஒரு முழு மாரத்தானும் ஓடினேன், ராக்கெட்பால் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றோம், இருமுறை ஒரே நாளில் 100 மைல் (160 கி.மீ) தாண்டி மிதிவண்டியில் பயணித்தது மற்றும் குளிர் காலம் தொடங்கியதிலிருந்து வாரம் தவறாமல் மகளுடன் பனிச்சறுக்கு (skiing) விளையாடச் சென்றோம், ஜனவரி மாதம் சில நாள்கள் டென்வரில் வேய்ல் (Vail) என்னும் ஐயாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட புகழ்பெற்ற மலைகளில் பனிச்சறுக்கினோம். காலை ஒருமுறை மலையடிவாரத்திலிருந்து லிப்டில் ஏறி மலையுச்சிக்கு சென்றுவிட்டால் மாலை திரும்பினால் போதும். இவையெல்லாம் இவ்வருடம் மார்ச் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை வரை தடையின்றி நடந்தது.
மார்ச் 5ம் தேதி காலை வழக்கம்போலத்தான் விடிந்தது, அப்போது தெரியவில்லை அன்றிரவு மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் 6 மணி நேரம் படுத்திருக்கப்போகிறேனென்று. வீட்டிலிருந்து 4 மணி நேரக் கார் பயணம், முதல் நாளே நானும் மகளும் போகனோஸ் (Poconos) என்னும் மலைக்கு பனிச்சருக்கக் கிளம்பினோம். மார்ச் மாதமாகையால் பனி ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை, சற்றே இலகிப்போய் சருக்கக் கடினமாய் இருந்தது. சிறிது நேரம் சில சிறிய மலைகளில் பனிச்சறுக்கினோம், பிறகு பிளாக்ஸ் (Blacks) என்னும் செங்குத்தான மலைகளில் பனிச்சறுக்கினோம், பிறகு அதிலும் கடினமான மலைக்குச் சென்றோம், 2000 அடி இருக்கும். மகள் எனக்கு முன் சென்றாள், நான் சற்றே பின்னே வந்துகொண்டிருந்தேன், ஒரு செங்குத்தான பகுதியில் 40-45 மைல் வேகத்தில் சறுக்கும் போது என் வலது காலின் ஸ்கி (ski) பனியில் சிக்கிக்கொள்ள, அந்த வேகத்தில் என் வலது கால் முட்டி திரும்ப எத்தனிக்க, அதாவது பாதம் ஒரு பக்கமாகவும் முட்டி அதற்கு எதிர்ப்பக்கமாகவும் திரும்ப, ஏதோ கிழிந்த சத்தம் கேட்டது, ஒரு 20 அடி உருண்டிருப்பேன், முட்டியில் லேசாக வலித்தது, 5 நிமிடம் அப்படியே கிடந்தேன், யாரோ உதவ எழுந்து நின்றேன், நிற்க முடிந்தது, முட்டி உடையவில்லை என்று தோன்றியது, ஆனால் ஸ்கியை மாட்ட முயன்றேன், முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் ரோந்து செய்பவர்கள் உதவிக்கு வந்தனர், என் கால்களில் ஒரு தடிமனான அட்டையை வைத்து மடக்க முடியாதவாறு கட்டிவிட்டு டொபாகன் (toboggan) என்னும் பனியில் சறுக்கும் படுக்கையில் என்னை வைத்துக் கட்டினர், பின்னர் மெதுவாக அவர்கள் சறுக்கிக்கொண்டே என்னை இழுத்துச் சென்றனர், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் பனியில் இடம் பெயர்ந்து செல்கிற வாகனத்தை (snow mobile) வரவழைத்து அதில் டொபாகனை இணைத்து இழுத்துச் சென்றனர். நிறைய கண்கள் என்னைப் பார்ப்பது போல தோன்றியது, தோற்றுப் போன உணர்வில் கண்களை மூடிக்கொண்டேன். சற்று நேரம் பரிசோதித்து பார்த்துவிட்டு நீ மருத்துவமனைக்கு செல் என்றனர். நான் மகளிடம் நீ இன்னும் கொஞ்சம் நேரம் சறுக்கிவிட்டு வா எனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு காத்திருந்தேன். 2 மணி நேரம் கழித்து கிளம்பினோம், வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி இறங்க முற்பட்டபோது தான் புரிந்தது முட்டியில் ஏதோ பலமாக அடிப்பட்டுள்ளது என்று. வீடு வந்து சேர்ந்தோம். என்னைப் பார்த்தவுடன் மனைவி உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் , அங்கே அவசரப்பிரிவில் அனுமதித்து நிறைய பரிசோதனைகள் செய்தனர். முட்டிக்கால் அப்போது அதீத வீக்கத்தினால் மறைந்திருந்தது. X-Ray யில் எல்லாம் சரியாக இருப்பது போல தெரிந்தது, பிறகு MRI செய்து பார்த்தார்கள், முட்டியை இழுத்துப்பிடிக்கும் ACL, LCL, MCL என்னும் மூன்று தசைநார்களில் ACL, LCL இரண்டும் கிழிந்துவிட்டது என்றும், MCLல் சேதம் உள்ளது ஆனால் அது சரியாக வாய்ப்புள்ளது என்றும் கூறினர். கிழிந்த தசைநார்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வென்று கூறினர். ஆனால் உடனே செய்ய முடியாது, வீக்கமெல்லாம் குறைந்தபின் 2 மாதங்கள் கழித்துத் தான் செய்ய முடியும் என்றனர். 4-5 மணி நேரம் ஆகும் அறுவை சிகிச்சை செய்ய, 6 வாரங்கள் தரையில் கால் படக்கூடாதென்றும், மீண்டும் நீ முன்போல் விளையாட செல்ல 1 வருடம் ஆகும் என்றார் மருத்துவர். மீண்டும் நடை பயில கற்கவேண்டும், பழைய தகுதியில் விளையாட மேலும் ஒரு வருடம் ஆகலாம். நூறு மைல் வேகத்தில் பயணித்துவிட்டு திடீரென்று ஒரு மைல் வேகத்தில் பயணிக்க மனம் மறுத்தது, அதை ஏற்றுக்கொள்ள சில வாரங்கள் பிடித்தது.
அடுத்த நான்கு வாரங்கள் வலியின் தீவிரம் கூடிக்கொண்டேப் போனது. கையில் வைத்துத் தாங்கினாள் மனைவி. படுக்கையில் இருந்து இரண்டடி எடுத்து வைக்க முடியவில்லை. வலியில் எதர்க்கெடுத்தாலும் கோபம் வந்தது. வலி அதிகரித்திருப்பதை மருத்துவரிடம் சொல்ல அவர் அதிக வீரியமான மருந்தைக் கொடுத்தார். அது உடல் நடுக்கம், பதற்றம் போன்ற வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. 2 நாளில் அதை நிறுத்திவிட்டேன். மெதுவாய் வலி பழக ஆரம்பித்தது. 5 வாரத்தில் ஓரளவு சமாளிக்கும் அளவிற்கு வந்தது. வாரம் இருமுறை உடலியக்க மருத்துவத்திற்கு (Physical Therapy) சென்றேன். ஓரளவு கால் மடக்க முடிந்தது. கார் ஓட்டக்கூடாது என்று மருத்துவர் சொல்லி இருந்தார், நெருங்கிய நண்பர்கள் அழைத்துச் சென்றனர். பபிள்ஸ், என் வீட்டின் செல்லப்பிராணி என் அருகிலேயே இருந்தான், என் முட்டிக்காலை நக்குவான், எப்படித் தெரியும் அவனுக்கு என்பது ஆச்சரியமே. ஒரு நாள் வேறெதுவோ பேசும்போது திடீரென்று மகள் என்னிடம், அப்பா அன்று நான் மலையின் அடிவாரத்திற்கு சென்றுவிட்டேன் இல்லையெனில் உனக்கு உதவி இருப்பேன் என்றாள், நெகிழந்தேன்!!
என்னை மருத்துவமனைக்கும், எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் வாகனமோட்டி என்னை அழைத்து சென்ற நண்பர்களுக்கும், எனக்கு உணவு சமைத்துக் கொடுத்த நண்பர்களுக்கும், என் சோர்வை போக்குவதற்காக எனக்குப் பிடித்த பார்பிக்யூ உணவகத்திற்குக் கூட்டிச் சென்ற நண்பர்களுக்கும், நேரில் வந்து சந்தித்த நண்பர்களுக்கும், தொடர்ந்து நலம் விசாரித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இவ்வயதில் இது தேவையா என்று கேட்ட நண்பர்களை மட்டும் முடிந்தவரை தவிர்க்கிறேன். அவர்கள் நல்ல நோக்கத்தில் தான் கூறுகிறார்கள், ஆனால் எனக்குத்தான் வலி நிவாரண மாத்திரைகள் எடுக்காத காரணத்தால் உடனே கோபம் வந்துவிடுகிறது. ‘Pursuit of Happiness” படத்தில் வில் ஸ்மித் கூறுவார், “People can't do something themselves, they want to tell you, you can't do it. If you want something, go get it. Period”
இந்த வருடமும் அடுத்த வருடமும் திட்டமிட்டபடி செய்ய இருந்த சில செயல்கள் தடைப்பட்டுப் போனது. நண்பர்களுடன் விட்னி என்னும் உயரமான மலையை (Mt. Whitney) ஏறும் திட்டம் தடைப்பட்டது, ராக்கெட்பால் போட்டிகளில் கலந்துகொள்ள இருந்த திட்டமும் தடைப்பட்டது, இவையெல்லாவற்றுக்கும் மேலாக, மகளுடன் நான் அதிக நேரம் செலவழிப்பதே பனிச்சறுக்கும் நாள்களில் தான், அதுவும் பனிச்சறுக்கும் தினத்தை விட அவ்விடங்களுக்கு செல்லும் பயணமே மனதிற்கு இணக்கமாக இருந்தது, அதற்கேற்பட்ட தற்காலிக தடையே அதீத பாரமானது.
அடுத்த ஒரு வருடத்தைப் பயனுள்ளாக கழிக்க முடிவெடித்துள்ளேன், ஐயா மகுடேசுவரனிடம் தமிழ் இலக்கணம் பயில்கிறேன், மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ளப் போகிறேன். கவலை வேண்டாம், கவிதை எழுதும் எண்ணமில்லை.
அடுத்த வாரம் அறுவைசிகிச்சை, மீள்வேன்!!
அன்புடன், ssk


No comments:
Post a Comment